2458.என்று கவுணியப் பிள்ளையார்தா
     மியம்பப் பணிந்தரு ளேற்றுக்கொண்டே
ஒன்றிய காதலி னுள்ளமங்க
     ணொழிய வொருவா றகன்றுபோந்து
மன்று ணடம்புரிந் தார்மகிழ்ந்த
     தானம் பலவும் வணங்கிச்சென்று
நின்ற புகழ்த்தோணி நீடுவாரைப்
     பணியு நியதிய ராயுறைந்தார்.
560
     (இ-ள்.) என்று...இயம்ப - என்று பிள்ளையார் இயம்பியருள; பணிந்து...... கொண்டே - வணங்கி அவர் கூறியருளிய திருவருட் கட்டளையை ஏற்றுக்கொண்டே; ஒன்றிய...ஒழிய - பொருந்திய பெருவிருப்பத்தினாலே தங்கள் மனம் அங்குநிற்க; ஒருவாறு அகன்று போந்து - நீங்காநிலைமையில் ஒருவாறாக அரிதின் நீங்கிச்சென்று; மன்றுள்...சென்று - அம்பலக்கூத்தர் மகிழ்ந்தெழுந்தருளிய பதிகள் பலவற்றையும் வணங்கிப்போய்; நின்ற....உறைந்தார் - நிலைபெற்ற புகழினையுடைய தோணிமேல் எழுந்தருளியுள்ள இறைவரைப் பணியும் நியதியுடையாராக அமர்ந்தனர்.
     (வி-ரை.) அருள் ஏற்றுக்கொண்டே - தங்கள் கருத்துக்கு மாறாயினும், திருவருளின் குறிப்பாதலின் அவ்வாணையை உடன்பட்டு ஏற்றுக்கொண்டு. இதுவே ஆன்மாக்கள் அமைந்தொழுகவேண்டிய உய்புநிலை.
     ஒன்றிய...ஒருவாறு அகன்று - இது புகலியந்தணர்கள் பிள்ளையார்பாற் கொண்ட அழுந்திய அன்புநிலை குறித்தது; இஃது தமது மரபு ஒற்றுமை கருதியதனாலன்றிப், பிள்ளையாரது உபநயனத்தின்போது தாம் பெற்ற வேத விளக்கத்தானும், பல்லாற்னானும் அவர்பாற்றாம்கண்ட அருள்விளக்கத்தானும், பிள்ளையாரது பெருமைகளைத் தங்கள் பெருமையாகவே கொண்ட உரிமைப்பாட்டினுலும் ஆயிற்றென்க. பிள்ளையார் தங்களைப் பிரியாது என்றும் உடனுறைதலை அவர்கள் விரும்பினார் என்பது.
     தானம் பலவும் வணங்கிச் சென்று - வீழியினின்றும் புகலிநோக்கித் திரும்புமவர்கள் நேரே சென்றுவிடாது வழியில் இடைப்பட்ட பதிகள் பலவற்றையும் அந்தணர்கள் வணங்கிச்சென்றது வழிபாட்டுமுறையும் மரபுமாம்; தானம்பல - இவை திருச்சிறுகுடி, திருமீயச்சூர், திருமயிலாடுதுறை, திருப்புள்ளிருக்குவேளூர் முதலாயின என்பது கருதப்படும்.
     தோணி நீடுவாரைப் பணியும்...நியதியராய் - பிள்ளையாரைத் தந்தருளிஞானங் கொடுத்தமையும், வீழியில் காட்சிதந்து தேற்றுவித்தமையும் கருத்துட் கொண்டு தோணியப்பரைச் சிறப்பாகப் பணியும் நியதி பூண்டனர் என்க. நியதி என்ற குறிப்புமது.
560