பாடல் எண் :2533
இப்படி யமணர் வைகு மெப்பெயர்ப் பதியு மெய்தும்
ஒப்பிலுற் பாத மெல்லா மொருவரி னொருவர் கூறி
மெய்ப்படு தீக்க னாவும் வேறுவே றாகக் கண்டு
செப்புவான் புறத்து ளோருந் தென்னவன் மதுரை சேர்ந்தார்.
635
(இ-ள்) இப்படி...கூறி - இவ்வாறு அமணர்கள் தங்கும் எவ்வகைப்பட்ட பெயர்களையுடைய பதிகளிலும் பொருந்திய ஒப்பில்லாத துன்னிமித்தங்களை யெல்லாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு; மெய்ப்படு... செப்புவான் - பலிக்கக்கூடிய தீயகனாக்களும் வேறு வேறாகக் கண்டு அவற்றையும் சொல்லும் பொருட்டு; புறத்து உள்ளோரும்...சேர்ந்தார் - வெளியே உள்ளவர்களும் பாண்டியனது மதுரைமாநகரத்திற் சேர்ந்தனர்.
(வி-ரை) உற்பாதம் - துன்னிமித்தம்; மேலே கூறியவை; மெய்ப்படு தீக்கனா - கனவில் நிகழ்ந்தவை நகவில் மறந்து படுவனவும், பயன் குறியாதொழிவனவு முள்ளனவாதலின் அவற்றை நீக்குதற்குத் தீக்கனா என்றும் கூறினார். பிறிதினியைபு நீக்கிய விசேடணங்கள்;
கண்டு - கனவு நிலையில் கண்டு; செப்புவான் - சொல்லும் பொருட்டு; வானீற்று வினையெச்சம்;
புறத்துளோரும் - சேர்ந்தார் - புறத்து - மதுரைநகரின் புறத்து; யானைமலை முதலியவற்றினின்றும்; புறத்துளோரும் - என்ற உம்மை அகத்து - நகரத்து - உள்ளோர் அணைதலேயின்றி என இறந்தது தழுவிய எச்சவும்மை; புறத்துள்ளோர் கூடியபோது நகரத்துள்ளோர் கூடியமை கூறாமயேமையுமாதலின் அதனை வேறு எடுத்துக் கூறாராகி எச்வும்மையாற் பெறவைத்தார் ஆசிரியர். மேல்வரும் பாட்டுப் பார்க்க;
தீக்கனா - இவை மேல் 2535 முதல் 2538 வரை நான்கு பாட்டுக்களிற் கூறுதல் காண்க.