அந்நகர் தன்னில் வாழ்வார் புறம்புநின் றணைவார் கூடி மன்னவன் றனக்குங் கூறி மருண்டவுள் ளத்த ராகித் துன்னிய வழுக்கு மெய்யிற் றூசிலார் பலரு மீண்டி "யின்னன் கனவு கண்டே" மெவெடுத் தியம்ப லுற்றார். | 636 | (இ-ள்) அந்நகர்...கூறி - அந்நகரில் உள்ளோரும் வெளியினின்றும் அணைவார்களும் கூடி அரசனுக்கும் அறிவிப்பு அனுப்பிச் சென்று; மருண்ட... ஈண்டி-மருட்சி கொண்ட மனதுடையவராகி அழுக்குப்படிந்த உடம்பில் துணியில்லாத அமணர் பலரும் நெருங்கிச் சேர்ந்து; "இன்னன...இயம்பலுற்றார் - இன்னின்ன கனாக்களைக் கண்டோம் என்று எடுத்துச் சொல்வார்களாகி, (வி-ரை) வாழ்வாரும் - நின்றாரும் கூடிச்சென்று என்க. உம்மைகள் விரிக்க; கூறி - சொல்லி விடுத்து முன்னே சென்று; கூறிவிடுத்து - என்பது; அவனிடம் அறிவித்த திறங்கள் மேற்கூறப்படுவன. அழுக்குத்துன்னியமெய்யில் தூசுஇல்லார் - அழுக்குத்துன்னுதல் - பலநாட்குளியாது வெயிலின் நிற்றல் முதலிய வழக்குக்களையுடைமையால் ஆவது: "வேர் வந்துற மாசூர்தர"(தேவா) "கழுவாவுடலம்" (11-ம் திருமுறை - ஆளு - அந்) வெளிப்பட அழுக்குத்துன்னக் கண்டும் தூசுஇல்லையாக எண்ணும் மயக்கமுடையார் என்று இரட்டுற மொழிதலால் பிறிதொரு பொருளும் பட நின்ற நயம் காண்க. தூசு இல்லார் - ஆடையின்றி அமணேதிரிவார். இவை சமண குருமார் வழுக்கு; "இன்னன கனவு கண்டோம்" என - மேல் இவ்விவ்வாறு என்று கூறுமாறு; இயம்பலுற்றராகி-உரைப்பாராய்க் (2535) கவலையுற்றாராய்ச் சொன்னார் (2536) என்று இம்மூன்று பாட்டுக்களையும் முடிவுபடுத்திக் கொள்க: மேல்வரும் பாட்டில் தமது குரவர் குரத்திகளுக்கும் வரக்கண்ட கேடாகிய நிலைகளைக் கூறினார்; அதன் மேல்வரும் அரண்டு பாட்டுக்களினும் அக்கேடுகள்-அவ்விளைவுகள்-வரும் மூலமும் அதனால் மன்னவனுக்கு வரும் பயனும், தமக்கு நேரும் அழிவும் கண்டு கூறுகின்றார்கள்; கலைஞானங்களில் தேர்ந்தாராதலின் இக்கனாக்கள் தீமை பயந்தே விடுமென்றும் கண்டார்கள் (2539); இவற்றை முன்னறிவிப்புச் செய்தது சிவனது கருணைத்திறம்; அவ்வா றறியச் செய்யினும், இவை தாம் சைவத்திற்குச் செய்த தீமைகளின் பயனாக வருவன என்று உணர்ந்து அவற்றினின்றும் நீங்கி உய்யும் வழியை இவர்கள் தேடித் தப்பியிருக்கலாம்; அது செய்யாது கெட்டனர் இவர்; செய்ய வோட்டாது தடுத்தது கன்ம நிலையும் ஆணவமல மறைப்புமாம்: கந்தபுராணத்தினுள் சிங்கமுகன் - பானுகோபன் - இரணியன் இவர்கள் அறிவித்தும், அறுமுகக்கடவுள் தாமே நேர் நின்று காட்டி அறிவித்தருளியும் கேளாது, கிளையுடன் வீழ்ந்த சூரபதுமன் வரலாற்றையும், அவை போலவரும் சரி தங்களின் உள்ளுறைகளையும் இங்கு வைத்துக் கூர்ந்து நோக்கிக் கொள்க, அறிவிக்க அறிதல் உயிர் இயல்பு; அறிவித்தாலும் அறியாமற் செய்தல் ஆணவ மலவலிமையும் கன்ம நிலையுமாம் என்பன ஞானசாத்திர உண்மைகள். |
|
|