பாடல் எண் :2535
"சீர்மலி யசோகு தன்கீ ழிருந்தநந் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக் கண்டன; மதன்பின் னாக
ஏர்கொண்முக் குடையுந் தாமு மெழுந்துகை நாற்றிப் போக
ஊருளோ ரோடிக் காணக் கண்டன; " மென்று ரைப்பார்.
637
(இ-ள்) "சீர்மலி...கண்டனம்" - சிறப்புடை அசோகமரம் அதன் அடியில் அமர்ந்தருளிய நமது அருகக்கடவுளின் மேலே வேரோடு சாய்ந்தும் வீழக் கண்டோம்; அதன் பின்னாக...என்று உரைப்பார் - அதன் பின்னே, அழகிய முக்குடையும் தாமுமாக அத்தேவர் எழுந்து கைகளைத் தொங்கவிட்டுச் செல்லவும், அதனை ஊரிலுள்ள சனங்கள் ஓடிச்சென்று காணவும் கண்டோம், என்று மேலும் சொல்வாராகி;
(வி-ரை) சீர்மலி அசோகு...தேவர் - அருகக்கடவுள் அசோகமரத்தின் கீழ் இருப்பதாக வைத்து வணங்குதல் சமண சமய வழக்கு;
அசோகு தேவர்மேல் வேரொடு சாய்ந்து வீழ்தல் - நிழல் தந்து அமர இடமும் தந்த மரம் அவர்மேல் சாய்ந்து வீழ்தல் அவரைப் பற்றுக் கோடின்றிச்சாடி அகலச் செய்வதன் குறிப்பு;
முக்குடை - அருகக்கடவுளது குடை; குடையும் தாமும் எழுந்து - குடையுடன் எழுந்து; கை நாற்றுதல் - மேலே உயர்த்தாது கையினைத் தொங்க விடுதல் அழிவுக் குறிப்பு; நாற்றுதல் - உதறுதல் என்றலுமாம்;
போக - இடப்பெயர்ச்சி குறித்தது; அதுவரை அங்கு அமர்ந்து ஆட்சிசெய்திருந்த தெய்வம் அவ்விடம் விட்டுப் பெயர உள்ள குறிப்பு:
ஊருவோர் ஓடிக் காண - தெய்வம் விரைந்தும் பெயர்ந்தும் போகும் நிலைக்குறிப்பு; ஊருளோர் காண என்றது பெயர்ந்து போகும் தெய்வத்தைப் பின்பற்றிச் செல்லாது ஊரவர் கண்டு கழித்துத் தாம் அங்கே தங்கி முன்னைச் சமயம் பற்றுவர் என்ற குறிப்பு:
சீர்மலி - ஏர்கொள் - என்றமையால் முன்இருந்த அச்சீரும் ஏரும் தவிரும்படி எனற்து குறிப்பு.