பாடல் எண் :2545
அம்புய மலராள் போல்வா "ராலவா யமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டு" மென்று கொற்றவன் றனக்குங் கூறித்
தம்பரி சனங்கள் குழத் தனித்தடை யோடுஞ் சென்று
நம்பரை வணங்கித் தாமு நல்வர வேற்று நின்றார்.
647
(வி-ரை) அம்புயமலராள் போல்வார் - தாமரை மலரில் வீற்றிருப்பவன் போல்பவராகிய மங்கையர்க்கரசியம்மையார்; ஆலவாயமர்ந்தார் தம்மை...கூறி - திருவாலவாயுடைய பெருமானைத் தாம் சென்று கும்பிடவேண்டுமென்று அரசனுக்கும் கூறி, தம் பரிசனங்கள்...சென்று - தமது பரிசனங்கள் சூழ்ந்துவரைத் தனித்த காவலுடனே சென்று; நம்பரை வணங்கி - திருவாலவாயுடைய பெருமானாரை வணங்கி; தாமும்...நின்றார் - தாமும் பிள்ளையாரை நல்வரவேற்கும் முகத்தால் நின்றனர்.
(வி-ரை) அம்புயமலராள் - துவாதசாந்தப் பெருவெளியில் 1000 இதழ்த் தாமரையின்மேல் வீற்றிருக்கும் உமையம்மையார். "பங்கயச் செல்வி பாண்டிமாதேவி"(தேவா). திருமகள் என்பாருமுண்டு;
அம்புய மலராள் போல்வார் - மங்கையர்க்கரசியார்; ஆலவாயமர்ந்தாரைக் கும்பிடுதலில் முதலில் நிற்பிவர் உமையம்மை யாராகிய கருத்தும் காணக்; "கைலாய வாண! கௌரி நாயக! நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்ந்து, பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர், இமையா நெடுங்கண் ணுமையா ணங்கையும்" (திருவிடை-மும்-கோ-28-பட்டின-11-ம் திருமுறை); "அண்ண லார்தமை யருச்சனை புரிய வா தரித்தாள், பெண்ணி னல்லவ ளாகிய பெருந்தவக் கொழுந்து"(1128); முதலியவை பார்க்க.
"ஆலவாயமர்ந்தார் தம்மைக் கும்பிடவேண்டும்" என்று கொற்றவன் றனக் கும்கூறி - இறைவரைத் திருக்கோயிலிற் சென்று கும்பிடும் நிலையினை மாதேவியார் அரசனுக்கும் கூறிச் சென்றார்; கொற்றவன் தனக்கும் - மன உடன்பாடில்லாத அரசனுக்கும் என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. " தாங்கள் - சைவ வாய்மை ஒழுக்கத்தினின்ற தன்மை, பூங்கழற் செழியன் முன்பு புலப்படா வகைகொண் டுய்த்தார்"(2502) என முன்னர்க் கூறிய கருத்துக் காண்க; அரசன் முன்பு புலப்படா வகை சைவ ஒழுக்கத்தினைக் கொண்டு உய்த்த அம்மையார் இங்குக் கொற்றவன்றனக்கும் கூறிக் கோயிலுக்குச் சென்றனர் என்பது முன் கூற்றொடு முரணாதோ? என்னின் முரணாது; ஆண்டு, முன்(2502)ல் உரைத்தவை பார்க்க; அந்நாளில் சமண்மிக்கு, அரசனும் அந்நெறிச் சார்பு தன்னை அறமேன நினைந்து நிற்பச் சேவ வைதிக நன்னெறி திரிந்து மாறி நடந்தது என்ற மட்டில் நாட்டின் நிலை போந்ததே யன்றிச், வைசம் முற்றும் மறைந்துபோக வில்லை; ஆலவாயுடையார் கோயில் பணிகளும் அந்நிலைக் கேற்றபடி நிகழ்ந்தனவேயன்றி மறைக்கப்படவில்லை; தொண்டர்களும் பலர் இருந்தனர்; வழிபாடுகளும் அருசியேனும் நிகழ்ந்து வந்தன; 2573 பார்க்க; தேவியார் திருக்கோயிலுக்குச் சென்று அவ்வப்போது வழிபடுதலையும் கோயிற் பணிகளையும் அரசன் முற்றும் மறுத்தானல்லன்; இவ்வாற்றலெல்லாம் மாதேவியார் கொற்றவன் றனக்கும் கூறிச் சென்றமை முன் கூற்றோடு முரணாது அமையுமென்க; அற்றேல் அஃதாக, மாதேவியார் கூறிச் சென்றமையும், அதற்குக் கொற்றவன் மாறாது இசைந்தமை யாதோ? எனின், அஃது அவன் மன நிலை; முன் விரித்தவாறு முற்றும் மாறியொழியாமையானும் திருவருட்டுணையானும் அமைவுடைத்தாயிற் றென்க. பின் சரித விளைவுகளும் கருதுக.
தம் பரிசனங்கள் சூழத் தனித்தடையோடும் சென்று - தம் பரிசனங்களாவார் - மாதேவியார்க்குரிய அந்தப்புரத்துத் தனிப் பரிசனங்கள்; இவர்கள் பெரும்பான்மை பெண்களாவார். தனித் தடை - தனியாக அமைந்த திரை வீழ்த்த சிவிகையும் காவலாளரும் முதலாயின அமைப்புக்கள்; 2758 பார்க்க; அரண்மனையின் புறத்தே செல்லும்போது அரச மாதேவிமார்கள் இவ்வாறு செல்வது முன்னாள் வழக்கு. தடை - காவல்; பிறரது நோக்கம் - செயல் முதலியவை செல்லாவகை தடுக்கும் அமைப்புக்களாதலின் காவல் - தடை எனப்பட்டது; "தடைபல புக்க பின்பு தனித்தடை நின்ற தத்தன்"(475).
நம்பரை வணங்கி - திருவாலவாயுடைய இறைவரைக் கும்பிட்ட பின்னர்; அரசனுக்குச் சொல்லிப் போந்ததும் உண்மையே என்ற குறிப்பு; வணங்குதல் - பிள்ளையாரைத் தந்தருளியதன் பொருட்டு நன்றி; பின்னர் அரசனும் இக்கருத்தே பற்றித் துதித்தல் காண்க.(2766)
நம்பரை - திருஞான சம்பந்தரை என்றுரைத்தாருமுண்டு. அது பொருந்தாமையறிக.
தாமும் - மந்திரியார் வரவேற்றலுடன் தாமும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
தனக்குக் கூறி - என்பதும் பாடம்.