பாடல் எண் :2548
பண்ணியவஞ் சனைத்தவத்தாற் பஞ்சவனாட் டிடைப்பரந்த
எண்ணிலம ணெனும்பாவ விருஞ்சேனை யிரிந்தோட
மண்ணுலக மேயன்றி வானுலகுஞ் செய்தபெரும்
புண்ணியத்தின் படையெழுச்சி போலெய்தும் பொலிவெய்த,
650
(இ-ள்) பண்ணிய...பரந்த - செய்த வஞ்சனை பொருந்திய தவம் முன்னிலையாகப் பாண்டிய நாட்டில் பரவிய; எண்ணில்...இரிந்தோட - எண்ணில்லாத சமணம் என்னும் பாவமாகிய பெரிய சேனை உடைந்து ஓடும்படியாக; மண்ணுலகமே யன்றி... செய்த - இந்நிலவுலகமே யல்லாமல் விண்ணுலகமும் கூடிச் செய்ததாகிய; பெரும்...பொலிவெய்த - பெரிய புண்ணியமாகிய படை எழுச்சி போலப் பொருந்திய பொலிவு உண்டாகவும்;
(வி-ரை) பண்ணியவஞ்சனைத்தவத்தாற் - பரந்த - பாண்டி நாட்டிற் சமணம் பரவுதற்குச் சமணர் செய்யும் வஞ்சச் சூழ்ச்சியாகிய போலித்தவம் ஒரு காரணமாயிற்று என்பது; "கொல்லாமை மறைந்துறைவு மமண்சமயங் குறுகுவார்"(1302); "தவமென்று பாயிடுக்கித் தலைபறித்து" (1312); வஞ்சனைத்தவமாவது உண்மையாயன்றிப் பிறரை வஞ்சித்தற் பொருட்டுத் தவவேடமும் செயலும் மேற்கொள்ளும் நிலை.
பரந்த - பாவமெனும்இருஞ்சேனை இரிந்து ஓட - புண்ணியத்தின் படையெழுச்சி - பாவச்சேனையை ஓட்டப் புண்ணியப் படை எழுந்து வரவேண்டுமென்ற நியதியினை உருவக முகத்தாற் குறித்தமை காண்க. "அண்டர்நா டாள்வோநா மல்லற்படை வாராமே" என்ற திருவாசகம், திருப்படை யெழுச்சிப் பகுதியின் கருத்துக்கனை இங்கு வைத்துக் காண்க.
அமண் - பாவ இருஞ்சேனையை ஓடச் செய்ய மண்ணுலகும் வானுலகும் கூடிச் செய்த பெரும்புண்ணியத்தின படைஎழுச்சி என்றதனுள் அமணர் செய்த பாவ வலிமை மண்ணுலகும் வானுலகும் செய்த பெரும் புண்ணிய ஈட்டத்தினாலன்றித் தொலைக்கலாகா அளவினது என்ற குறிப்புங் காண்க.
மண்ணும் விண்ணும் செய்த பெரும்புண்ணியமே திரண்டு பிள்ளையாரது வருகையின் எழுச்சியாகி வந்தது என்பதாம். இரண்டுலகினும் முற்செய் புண்ணியப் பயனாய்ப் பிள்ளையார் எழுந்தருளினர் என்பது கருத்து;
மண்ணுலகமேயன்றி வானுலகும் செய்த -" வாழ்க வந்தணர் வானவரானினம், வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக, ஆழ்க தீய தெல்லாமர னாமமே, சூழ்க வையக முந்துயர் தீர்கவே"(திருப்பாசுரம் - 1) என்று எழும் அருளாணையினால் மண்ணுலகமும் விண்ணுலகமும் தீமை நீங்கி யின்பவாழ்வு வாழ்வதற்கு இவ்வெழுச்சியே காரணமாய் நின்றமையால் மண்ணுலகோரும் விண்ணுலகோரும் செய்த புண்ணியப் பயனே இதுவென்றார்.
மண்ணும் விண்ணும் வாழ்வடைதல் பிள்ளையாரது அவ்வருளாணையினாலாவதென்பது "உலக மிப்புறச், சந்தவேள் விகண்முதல்சங்கரர்க்கு முன், வந்தவர்ச்சனை வழிபாடு மன்ன" (புரா 821) என்றும் "வேள்வி நற்பயன் வீழ்புன லாவது, நாளுமர்ச்சனை நல்லுறுப் பாதலால், ஆளு மன்னனை வாழ்த்திய தர்ச்சனை, மூளு மற்றிவைகாக்கு முறையையால்" (புரா 822) என்றும், "ஆழ்க தீயதென் றோதிற் றயனெறி, வீழ்க வென்றது வேறெல்லா மான் பெயர், சூழ்க வேன்றது தொல்லுயிர் யாவையும், வாழி யஞ்செழுத் தோதி வளர்கவே" (823) என்றும், "சொன்ன வையக முந்துயர் தீர்கவே, யென்னுநீர்மை யிகபரத் திற்றுயர், மன்னி வாழுல கத்தவர் மாற்றிட முன்னர் ஞானசம்பந்தர் மொழிந்தனர்" (புரா 824) என்றும், "எங்களை வாழ முன்னாறேடு வைகையினி லிட்டார்" (1250) என்றும் அத்திருப்பாசுரத்தின் உள்ளுறையினை உலகங் கண்டுய்யும் பெருங்கருணையால் ஆசிரியர் விரிவுரையாற் கூறியருளிய வாற்றாலறிக.
பாவம் - ஓடச் செய்த புண்ணியத்தின் எழுச்சி - என்றது உயிர்கள் பல பிறவிகளில் செய்த முன்னைத் தவத்தின் புண்ணிய மேலீட்டினாலே தம் முதல்வனே குருவாய் எழுந்தருளி முன்னேவந்து "இதுவரை ஐம்புலவேடர்க்குட்பட்டு வளர்ந்து அயர்ந்தனிர்: இறைவனது பேரருள் பெறுந் தகுதியுடையீர் நீவிர்; அவன் தன்மையிது; அவனை அடையும்நெறியிது; "இனி இந்நெறியே சென்றங் கடைந்துய்ம்மின்" என்றெல்லாம் காட்டியும் கூட்டியும் வாழ்விப்பன் என ஞானசாத்திரம் உபதேசிக்கும்(போதம் - 8சூ.) உண்மைகளை இங்குக் கருதிக் காண்க்; பிள்ளையார் எழுந்தருளும் இந்நிலைமையினை; "வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த, சம்பந்த மாழனியென் றம்பிரான் - அம்புவியோர், போற்றுந் திருவடி...வானோன் பவனிவரக் கண்டு வல்வினையேன், ஏனோரு மேத்துதல்கண் டேத்தினேன்-தானென்னைப், பார்த்தான் பழயவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லா, நீத்தா னினைவுவே றாக்கினான்-ஏத்தரிய, தொண்ணூற் றறுவர்பயி றொக்கிற் றுவக்கறுத்தான், கண்ணூறு தேனமுதங் காட்டினான்-வெண்ணீறும், வேடமும் பூசையுமே மெய்யென்றான், மாடையும் வாழ்க்கை மனையுமே-நாடறிய, வஞ்செழுத்தி, னுள்ளீடறிவித்தா னஞ்செழுத்தை, நெஞ்சழுத்தி நேய மயலாக்கி...நிறைமேவி, வாழ்பவர்போன் மண்ணுடம்பில் மன்னுமுரோ மம்பறித்துத், தாழ்வுநினை யாதுதுகி றானகற்றி...பாழ்விக்கு, மஞ்சு மகற்று மதுமுத்தி யென்றுரைக்கும், வஞ்சமணன் பாழி மருவாதே-செஞ்சொல்புனை, யாதிமறை யோதி யதன்பயனொன் றும்மறியா, வேதியர்சொன் மெய்யென்று மேவாதே-ஆதியின்மே, லுற்ற திருநீறுஞ் சிவாலயமு முள்ளத்துச் செற்ற புலயர்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர், வேடமுடன் பூசையருன் மெய்ஞ்ஞான மில்லாத, மூடருடன் கூடி முயங்காதே-நீட, வழித்துப் பிறப்ப தறியா தானைப், பழித்துத் திரிபவரைப் பாராதே - விழித்தருளைத், தந்தெம்மை யாண்டருளுஞ் சம்பந்த மாமுனிவன்...." என்று நெஞ்சுவிடு தூதினுள் உமாபதி சிவாசாரியர் அருளிச் செய்த கருத்துக்களின்கண்கொண்டு கும்பிட இதன் உள்ளுறையும் உண்மைத்திறமும் தெற்றெனவிளங்கும்.