துன்னுமுழு வுடற்றுகளாற் சூழுமுணர் வினிற்றுகளால் அன்னெறியிற் செறிந்தடர்ந்த வமண்மாசு கழுவுதற்கு மன்னியொளிர் வெண்மையினாற் றூய்மையினால் வழுதியர்தங் கன்னிநாட் டிடைக்கங்கை யணைந்ததெனுங் கவின்காட்ட, | 651 | (இ-ள்) துன்னும்...துகளால் - நெருங்கிப் பொருந்தி முழுவுடலில் உள்ள அழுக்கினாலும், தீய சூழ்ச்சியை உடைய உணர்வின் மாசினாலும்; அல் நெறியில்...கழுவுதற்கு - நெறியல்லா நேறியில் முழுதும் சேர்ந்த சமணம் என்னும் அழுக்கினைக் கழுவிப் போக்கித் தூய்மையாக்குதற்காக; மன்னியொளிர்...தூய்மையினால் - நிலைபெற்று விளங்கும் வெண்மையினாலும் தூய தன்மையினாலும்; தங்கை - கங்கை நதியே; வழுதியர்...இடை - பாண்டியரது கன்னி நாட்டிலே; அணைந்தது எனும் கவின் காட்ட - வந்து சேர்ந்தது போன்ற அழகினை எடுத்துக் காட்டவும்; (வி-ரை) துன்னுமுழு உடல்துகள் - முழுஉடலும் துன்னும் துகள் என். இங்குத் துகள் என்றது அழுக்கு. இது உடல் கழுவாமையானும், "வேர்வந்துற மாசூர்தர வெயினின்றழலு"தல், அடுபாறை கிடத்தல், சுடுபாறை கிடத்தல், பல் துலக்காமை முதலிய சமணரது சமய வழக்கங்களானமாவது; "கழுவா வுடலம்" (11 - திருமுறை - ஆளு - அந் - 28) சூழும் உணர்வினில் துகள்-சூழ்தல் - வஞ்சகச் சூழ்ச்சி புரிதல். சூழும் உணர்வு - வஞ்சனைகளை எண்ணும் அறிவு. அல்நெறியிற் செறிந்து - அல்நெறியாவது நெறியல்லாத அவநெறிதன்னைத் தவ நெறியென்று கொண்டு பிடித்து ஒழுகுதலால்; செறிந்து அடைந்த - செறிதலால் போந்த; அல்நெறியில் செறிதல் - அவநெறியே கடைப்பிடித்து விடாது பற்றிப் பரப்புதல்; அல்-இருள் என்று கொண்டு, ஒளிக்குமாறாகிய இருள் நெறி என்றலும் குறிப்பு. அமண்மாசு கழுவுதற்குக்--கங்கை அணைந்ததெனும் - மாசு கழுவ நீர் வேண்டுமாதலின், இங்கு அமண் சமயப் பரப்பை மாசு என்றுருவகித்ததற் கேற்ப அதனைப் போக்கும் பிள்ளையாரது வருகை எழுச்சியினைக் தங்கை என்றுருவகித்தார்; மிகப் பெரிய மாசு கழுவ மிகப்பெரிய நீர் வேண்டப்படும் என்ற குறிப்புமாம். வெண்மையினால் தூய்மையினால் கங்கை யணைந்தது எனும் - பிள்ளையாரது வருகை எழுச்சிக்கும் கங்கைக்கும் பொதுத்தன்மை இவை யிரண்டினும் உள்ள வெண்மையும் தூய்மையுமாம்; வெண்மை திருநீற்றி னொளியாலும், தூய்மை - அகத்தூய்மை-திருவைந்தெழுத்தாலும் ஆம்; "மாசிலாத மணிதிகழ் மேணிமேற் பூசுநீறு போலுள்ளும் புனிதர்கள்" (141). முழுவுடற்றுகளும் உணர்வினிற்றுகளும் - "வடிவுபோல் மனத்து மாசு துன்னிய வமணர்" (2660) என்பது போல உண்மாசும் புறமாசும் குறித்தலால் அவற்றை முறையே புறந்தூய்தாக்கும் வெண்மையாலும், அகந்தூய்தாக்கும் தூய்மையினாலும் நிறைந்த பொருள் எழுந்து போந்து வந்தது என்றதாம். "உண்மாசு கழுவுவது நீறென்றே" (திருவினை - புரா - விருத் - பட). வெண்மையினால் - தூய்மையினால் - கங்கை, அணைந்தது - கங்கை வெண்ணிற முடையது என்பது "திங்களி னூறலொத்த, தாடிய நீறது கங்கையுற் தெண்ணீர் யமுனையுமே, கூடிய கோப்பொத்த தாலுமை பாகமெங் கொற்றவற்கே" (பொன் - அந் - 90) என்ற கழற்றிற்றறிவார் நாயனார் திருவாக்கானுமறிக" கங்கையின் தூய்மையாவது எத்துணை நாட்கள் வைத்திருப்பினும் தனது தன்மை கெடாது காட்டும் நிலையானும், தன்னுட் பெய்த பொருள்களையும் மூழ்கிய உயிர்களையும் தூய்மைப்படுத்தும் தன்மையாலும் அறியப்படும்; இதன் நீரினைப் பரிட்சித்தறிந்த மேற்றிசைப் பௌதிகநூல் விஞ்ஞானிகள் இந்நீரிலினுள் ஒருவகை உயிர்ச்சத்து இருத்தலே அது தெடாதிருத்தற்குக் காரணமாமென்று ஆராய்ந்தறிகின்றனர். மன்னி ஒளிர் வெண்மை - திருநீற்றின் ஒளியாதலின் நிலைபெற்ற விளக்கமுடைத்தென்றார்; மன்னிஒளிர் என்பதனைத் தூய்மையுடனும் கூட்டுக. கன்னிநாட்டிடைக் கங்கை யணைதற்கியை பென்னையோ! எனின் மாசுகழுவுதற்குப் போந்த தென்பது குறித்தார். இவ்வாறு கங்கை முதலிய பெருந்தீர்த்தங்கள் ஒவ்வோரிடங்களில் ஒவ்வொரு நிமித்தம் பற்றி ஓரோர் காலங்களிற் போதுவதுன்டென்பது நூல் வழக்குக்களானும், அனுபவத்தாலும் அறியப்பட்டவுண்மை; "பூ மருவுங் கங்கைமுதற் புனிதமாம் பெருந்தீர்த்தம், மாமகந்தா னாடுதற்கு வந்துவழி படுங்கோயில்"(2307) என்றும், "தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க், கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே" (தேவா - தாண்) என்றும் வரும் திருவாக்குக்களும், தில்லைப் பரமானந்த கூபத்தினுள் ஐப்பசி முன்பக்க நவமியில் கங்கை வருவதென்றும் அந்நாளில் எடுத்து வைத்த அத்தீர்த்த நீர் ஓராண்டளவு கெடாதிருக்கு மென்றும் உள்ள வழக்கும், திருக்குருகாவூரில் பாற்கிணறு என்னும் தீர்த்தத்தில் தை அமாவாசையில் கங்கை அணைவதென்னும் வழக்கும் அன்று அந்நீர் பால் நிறமாக ஆகும் அற்புதமும் முதலியவை இங்கு வைத்துக் கருதற்பாலன. வழுதியர் - என்ற பெயராற் குறித்தது அஞ்ஞன்று வழுவியதனால் தீமை பெற்ற அரசன் மாசு கழுவித் தூயனாகவுள்ள குறிப்புப் பெற வைத்த சொன்னயம்; |
|
|