புரசைவயக் கடகளிற்றுப் பூமியர்வண் டமிழ்நாட்டுத் தரைசெய்தவப் பயன்விளங்கச் சைவநெறி தழைத்தோங்க வுரைசெய்திருப் பேர்பலவு மூதுமணிச் சின்னமெலாம் "பரசமய கோளரிவந் தா"னென்று பணிமாற, | 653 | (இ-ள்) புரசை...பயன்விளங்க - கழுத்துக் கயிற்றையும் வெற்றியினையும் உடைய மதம்பொருந்திய யானைகளையுடைய பாண்டியர்களது தமிழ் நாட்டின் நிலம்செய்த தவத்தின் பயன் விளங்கவும்; சைவநெறி தழைத்தோங்க - சைவநேறி தழைத்தோங்கும் பொருட்டும்; உரைசெய்...பணிமாற - எடுத்துச் சொல்லும் திருப்பெயர்கள் பலவற்றையும் ஊதுகின்ற முத்துச் சின்னங்கள் பாவும் "பாசமய கோளரி வந்தான்" என்று பணிமாறவும்; (வி-ரை) புரசை...பூழியர் - இதுவரை தாழ்வு பொருந்திய அரசு இனி வெற்றிபெற்றுயரவுள்ள நிலையின் குறிப்பு. வண்தமிழ் - தமிழ் இகபரமாகிய எல்லாப் பயன்களும் தரும் குறிப்பு. தரைசெய் தவப் பயன் - தரை - தரையில் உள்ளோர் - பாண்டி நாட்டார்; அந்நிலமகள் செய்த தவங் காரணமாக அதில் பிள்ளையார் எழுந்தருளித் தீண்டப் பெற்றது என்ற குறிப்புமாம்; "தருமேவு மலைமகளுஞ் சலமகளு மறியாமற், றிருமேனி முழுதுநில மகடீண்டித் திளைப்பெய்த" (திருவிளை-மண்சும-பட-28); பயன் விளங்க - முன்னம் ஒடுங்கி யிருந்த பயன் இப்போது வெளிப்பட்டு விளக்கமடைய; விளங்கச் சைவநெறி தழைத்தோங்க - விளங்கும்படி சைவம் தழைத்து ஓங்க என்றது சைவ நெறியினின்று தழைத்தலே தரையின் பயன் என்றபடி; விளங்க - ஓங்க - வந்தான் - என்று பணிமாற எனக் கூட்டி உரைக்க. உரை செய்திருப்பேர் பலவும் ஊதும் - வாயினால் சொல்லத் தக்க பிள்ளையாரது திருப்பெயர்கள் பலவற்றையும் எடுத்து உரத்த ஒலியால் ஊதி உலகுக்கு அறிவிக்கும்; உரை செய் - உரைக்கத் தக்க; பிள்ளையாரது திருப்பெயர்களே மக்கள் வாயார உரைசெய்து உய்யத் தருவன என்பது; "ஞானசம் பந்த ரென்னு நாமமந் திரமுஞ் சொல்ல"(2619); மணிச்சின்ன மெலாம் - சிவனருளிய முத்துக்களாலாகிய காளம், தாரை சின்னம் என்ற எல்லாம்; மணி - முத்தினைக் குறித்தது. சின்னம் - பொதுப் பெயராய் வந்தது; ஊதும் - இவை பேர் பலவும் ஊதுகின்ற வகைகளை 2119-2120-2121 பாட்டுக்களிற் காண்க. பணிமாறுதல் - ஊதுதல்; சின்னங்கள் ஒலிசெய்தற்கு வழங்கும் மரபு வழக்கு; பரசமய கோளரி வந்தான் - இனி இந்நாட்டிற் பிள்ளையார் திருவருள் வழிச் செய்தருளும் நிகழ்வு பற்றி இத்தன்மையால் எடுத்துக் கூறி ஊதின; புரசை - யானைக் கழுத்துக் கயிறு; வயம் - வெற்றி; கடம் - மதம்; மதமுடைமை யானையின் சிறப்பு; |
|
|