அஞ்சலி குவித்த கரங்களுந் தலைமே லணைந்திடக் கடிதுசென் றணைவார், நஞ்சணி கண்டர் தந்திரு மகனா ருடன்வரு நற்றவக் கடலை நெஞ்சினி னிறைந்த வார்வமுன் செல்லக் கண்டுநீ ணிலத்திடைத் தாழ்ந்து பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்குற வணைந்துமுன் பணிந்தார்.
| 655 | (இ-ள்) அஞ்சலி...அணைவார் - அஞ்சலியாகக் கூப்பிய கைகளும் தலையின் மேலே சேர விரைந்து சென்று அணைவாராகி; நஞ்சனி...கண்டு - விடத்தை அணிந்த கண்டராகிய இறைவரது திருமகனாருடன் வரும் நல்ல தவமுடைய அடியார்களின் கடல்போன்ற திருக்கூட்டத்தை மனத்தில் நிறைந்த ஆசை முன்செல்ல அகநோக்கிற் கண்டுகொண்டாராதலின்; நீள் நிலத்திடை...பணிந்தார் - நீளும் நிலத்தின் மிசைத் திருமேனி பொருந்த வீழ்ந்து பாண்டிய மன்னரது மந்திரிகளுள் தலைவராகிய கலச்சிறையார் பாங்குறச் சென்று முன்னே பணிந்தனர். (வி-ரை) அஞ்சலி...அணைவார் - காளத்தின் ஓசை செவியில் நிறைய, உடனே தலத்தின் மேற்பணிந்தார்; எழுந்தார்; கைகள் கூப்பின வண்ணமே தாமே தலைமேல் ஏறின; விரைவாக ஓசைவரும் திசை நோக்கி முன்னே அணைவாராயினர்; இவ்வாறாக; கரங்கள் தலைமேல் அணைந்திட - தம் முயற்சியின்றிக் கைகள் தாமே சிரமேற் கூப்பியபடியே ஏறின; மகனார் - அவர் அளித்த பால் உண்ட முறைமையால் மகனார் என்று உபசரிக்கப்பட்டவர்., 1666லும் 1966லும் முன் பலவிடத்தும் உரைத்தவை பார்க்க. மகனாருடன் வரும் நற்றவக்கடல் - பிள்ளையாருடன் வருதற்கு முன்னை நற்றவம் புரிந்த அடியவரின் கூட்டம். கடல் போன்ற பரப்புடையதனைக் கடல் என்றதுபசாரம். நெஞ்சினில்...ஆர்வம் - முன்செல்லக் கண்டு - தாழ்ந்து பணிந்தார்; இங்கு, அவ்வோசை வழி எரிர் நோக்கி நெஞ்சம் முன்னே சென்று கண்டு கொண்டமையால் கண்டு தாழ்ந்து பணிந்தார்; முன்னர்க் கேட்டுப் பணிந்தார்; இங்குக் கண்டுப் பணிந்தார். ஆயின் கண் கூடாகக் காண்பது பின்னரேயாயினும், இப்பொழுது ஆர்வம் முன் செல்ல மனத்தாற் கண்டு பணிந்தனர் என்பதாம். மந்திரித் தலைவர் - நிலத்திடைத் தாழ்ந்து பணிந்த நிலையே கிடந்தவர் பின்னர்ப் பிள்ளையார் திருக்கைகளாற் பற்றி எடுக்கவே எழுந்தனர். 2555 பார்க்க. இந்நிலை மந்திரித் தொழிலின் பேரறிவுடைய முயற்சி வகைகளுள் ஒன்றாமென்பார் மந்திரித் தலைவர் என்ற தன்மையாற் கூறினார். இது பின்னர்க் காட்டுதும்; (2555 பார்க்க.) ஆசிரியர் பெருமானும் மந்திரியாராதல் கருதுக. பாங்குற - தமிழ்நாடு பாங்கு பெறும் பொருட்டு; பாங்குறப் பணிந்தார் என்று கூட்டுக. முன் - திருக் கூட்டத்தின் முன் அணிகள் சேர்வதற்கும் முன்பு. |
|
|