சிரபுரச் செல்வ ரவருரை கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்து விரவொளி முத்தின் சிவிகைநின் றிழிந்து விரைந்துசென் றவர்தமை யணைந்து கரகம லங்கள் பற்றியே யெடுப்பக், கைதொழு தவருமுன் னிற்ப, வரமிகு தவத்தா லவரையே நோக்கி வள்ளலார் மமுரவாக் களிப்பார்,
| 657 | (இ-ள்) சிரபுரச் செல்வர்...அணைந்து - சீகாழிச் செல்வராகிய பிள்ளையார் அவர்களது சொற்களைக் கேட்டுத், திருமுகமாகிய தாமரை மலர்ந்து, பொருந்திய ஒளியினையுடைய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி விரைவுடன் சென்று அவரை அணைந்து; கரகமலங்கள்...எடுப்ப - கைகளாகிய தாமரைகளாற் பற்றியே மேல் எடுப்ப; அவரும் கைதொழுது முன்நிற்ப - அக் குலச்சிறையாரும் கைதொழுது திரு முன்பு நிற்க; வரமிகு...அளிப்பார் - வரம்மிகும் செவ்வியினின்ற அவரது தவங் காரணமாக அவரையே நோக்கி வள்ளலாராகிய பிள்ளையார் இனிய திருவாக்கினை அளிப்பாராகி, (வி-ரை) திருமுகத்தாமரை மலர்ந்து - முகமிக மலர்ந்து; மலர்ந்து என்பதற்கேற்ப முகத்தைத் தாமரை என்று உருவதித்தார். முகமலர்தல் - அகமலர்ச்சி காட்டும் குறிப்பாதலின் அகமும் மலர்ந்து என்பதும் உடன் கூறியதாயிற்று; முக மலர்தர் என்ற வழக்கும் காண்க; ஈண்டுக் கருணை கூர்ந்து என்க. சிவிகை நின்றிழிந்து விரைந்து சென்று அவர்தமை அணைந்து - தாம் எழுந்தருளியிருக்கும் இடத்தில் வந்து வணங்க வேண்டிய அவர், நெடுந்தூரத்தே வணங்கியபடி கிடத்தலின் அவரிருக்குமிடந்தேடி வந்தணைந்தனர் குருநாதராகிய பிள்ளையார்; இது குலச்சிறையாரது வணக்கத்தின் அழுத்தத்தாற் போந்த பயன் என்க; திருமறைக்காட்டினின்று பாண்டி நாட்டினுக்கும் மதுரையம்பதிக்கும் பிள்ளையாரை வந்தணையப் பண்ணியது போலச், சிவிகையினின்றும் இழிந்து மந்திரியார் இருந்து வணங்கிக்கிடந்த இடத்துக்கும் எழுந்தருருளியணையச் செய்தது அவர்களது திருத்தொண்டின் உறைப்பாகும்; அப்பூதி நாயனார் திருமனைக் கடையினில் அரசுகள் அவரைத் தேடிச் சென்றருளுமாறு செய்தது அவரது அழுந்திய நினைவேயாம் என்ற வரலாறும் இங்கு நினைவு கூர்தற்பாலது; "குழு மாகிய பரசமயத்திடைத் தொண்டு, வாழு நீர்மையீருமைக்காண வந்தனம்" (2571) என்று பிள்ளையார் அருளுவதனையும் காண்க; விரைந்து சென்று - அவரை எடுத்து அருளும் கருணையின் விரைவு. கரகமலங்கள் பற்றியே எடுப்ப - கரகமலங்கள் - கைகளாகிய தாமரைகள்; "திருமுகத்தாமரை, "என்றதற்கேற்பக் கைகளையும் தாமரைகள் என்றார்; கரகமலங்களாற் பற்றியே என்ப; "இன்ன ருட்பெருஞ் சிறப்பொடுந் திருக்கையா லெடுத்தார்"(2569); "இருவரையுந் திருக்கையா லெடுத்தருளி"(2629) என்று பின்னர் வருவனவும் காண்க; குலச்சிறையாரது கரகமலங்களைப்பற்றி என்று இரட்டுற மொழிந்து கொள்ளவும் நின்றது; எடுப்ப - "எழுக" என்று திருவாக்கினாலருளாது கைகளால் எடுத்தல் "அவர் தாம் படியினின் றெழாவகை கண்டு" தொண்டர்கள் அறிவித்தபடி தாமும் கண்டமையானும், எடுத்தாலன்றி எழார் என்று கண்டருளினமையானுமாம்; இது மந்திரியாரது திருத்தொண்டினது உறைப்பும், மந்திரத் தொழில் வன்னையுமாம்; என்னை? 'எழுக' என்ற சொல்லின் அருளளவினன்றிச் செயலினானும் மேல் எடுக்கப்பெறும் அருளைப் பெறும் துணை என்க. எங்கள் நாடு கீழே கிடக்கின்றது; அதனை மேல் எடுத்தருளல் வேண்டுமென்று வாக்கினாற் கூறாது தாம் வணங்கிச் செயலால் விண்ணப்பித்தனர் அமைச்சர் பெருமான்; அதற்கு அவ்வாறேயாகுக என்று பிள்ளையார் தமது வாக்கினாற் கூறாது கைகளால் எடுத்த செயலால் அருள் புரிந்தனர்; எனவே பாண்டிநாட்டினை ஈண்டு வினைப்பரசமயக் குழிநின்றும் மேல் எடுக்கும் அருட்செயல் அதன் மந்திரியாரை எடுத்த செயலானே ஈண்டே நிகழ்ந்துவிட்டதென்க; பின்னர் நிகழ்பவை எல்லாம் இதன் தொடர்ச்சியாகிய சடங்குகளே என்பதாம்; எடுப்ப என்ப து "என்னையிப் பவத்திற் சேரா வகையெடுத்து" (சித்தி - சுபக் - பாயி 2) என்புழிப்போலப் பரசமயத் தீமை காத்து எடுத்த குறிப்புருவகப் பொருளும்பட நின்றது. கைதொழுது அவரும் முன் நிற்ப - பிள்ளையார் கரகமலங்கள் பற்றி எடுப்ப எழுந்து அவர் திருமுன்பு தொழுத படியே நின்றனர். அவரது அருட் செயவினைப்பெற்ற வண்ணமே அருட்டிருவாக்கினையும் பெறுதலை வேண்டி என்க; அக்கருத்தினை அறிந்த வள்ளலாரும் அவ்வாறே தாம் முற்பட்டு மதுர வாக்களித்தல் மேற்கூறப் படுதல் காண்க. வரமிகு தவத்தால் - வாக்களிப்பார் - வரம் பெறுதற்கு உரியதாய் மிகுந்து பக்குவ காலம் வந்த தவம் காரணமாக - வரைம் தரும் வாக்களிக்கப் பெற்றார் என்க. "தமிழ் நாட்டுத் தரைசெய் தவப்பயன் விளங்க"(2551) என்றதும், மேல் "தம் பெருந்தவத்தின் பயனனையார்க்கு"(2570) என்பனவும் கருதுக; வரமிகு தவமாவது வரம் பெறுதற் கணித்தாக மிகுதி பெற்ற தவம். வள்ளலார்--அளிப்பார் - வள்ளலாராதலின் அளிசெய்து தாமே முற்பட வாக்கருளினார் என்பது. அவ்வுரை - இவருரை - என்பனவும் பாடங்கள். |
|
|