பாடல் எண் :2556
"செம்பியர் பெருமான் றிருமக ளார்க்குந்
திருந்திய சிந்தையீ ருமக்கும்
நம்பெரு மான்றன் றிருவருள் பெருகு
நன்மைதான் வாலிதே; " யென்ன
வம்பல ரலங்கன் மந்திரி யாரு
மண்மிசைத் தாழ்ந்தடி வணங்கித்
தம்பெருந் தவத்தின் பயனனை யார்க்குத்
தன்மையா நிலையுரைக் கின்றார்,
658
(இ-ள்) "செம்பியர் பெருமான்...வாலிதே" என்ன - சோழ மன்னரகு திருமகளாராகிய மங்கையர்க்கரசி யம்மையாருக்கும் திருந்திய சிந்தையினையுடைய உமக்கும் நமது சிவபெருமானுடைய திருவருள் பெருகும் நன்மைதான் சிறந்துள்ளதே" என்று சொல்ல; வம்பலர்...வணங்கி - மணமுடைய மாலையினை அணிந்த மந்திரியாரும் நிலமுற வணங்கி நின்று; தம்பெரும்...உரைக்கின்றார் - தமது பெருந்தவத்தின் பயனே போன்ற பிள்ளையாருக்கு நிகழும் தன்மையாகிய நிலையினை எடுத்துச் சொல்கின்றாராகி,
(வி-ரை) மகளார்க்கும் - உமக்கும் - திருவருள் பெருகும் நன்மைதான் வாலிதே - திருவருள் பெருகுதலால் வரும் நன்மை; வாலிதே - சிறந்து செல்கின்றதே.
செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் - மன்னிய சைவத் துறையின் வழி வந்தும், அதனின் மாறாது ஒழுகியும், அதனைப் பற்பல இடையூறகளின் இடையிலேயும் விடாது பற்றியும், தம்நாடு சைவத்தின் ஓங்க நினைந்து முயன்றும் வந்த பெருமை பற்றியும், அரசியாராக ஆணை தந்து இயக்கும் முதன்மையும், உரிமை பற்றியும் சோழரது மகளார் என்ற தன்மையாற் கூறி முதற்கண் வைத்துக் கேட்டருளினார்; "இங்குப் பெண்ணுக்கு முதன்மை தந்து விசாரிப்பது கருத்தென்று விசேடம் காண்பாருமுண்டு; அது பொருந்தாமை தேற்றம். மண்ணெலா நிகழ மன்னனாய் மன்னு மணிமுடிச் சோழன்றன் மகளாம், பண்ணினேர் மொழியான்" என்றும், "மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை" என்றும் வரும் தேவாரக் கருத்துக்களும் காண்க; இத்திருப் பதிகத்தினுள் அம்மையாரை முதலிலும் அமைச்சனாரை அடுத்தும் வைத்துக் கூறிய வைப்புமுறையும் காண்க.
நம்பெருமான் என்று தம்மையும் உளப்படுத்திக் கூறியது கருத்தொன்றித்த திருத்தொண்டின் உரிமைபற்றி;
திருவருள் பெருகு நன்மைதான் வாலிதே - உயிர்களுக்கு வரும் இன்பமும் துன்பமும் இறைவர் செய்யும் அருளால் வந்து கூடுவன; அவ்வாறு இறைவர் கூட்டுவிப்பதும் நன்மையின் பொருட்டேயாம் என்பது துணிபு; இங்கு வாலிதே - என்றது நன்கு செல்கின்றது - இன்பமாகச் செல்கின்றது - என்ற நிகழ்காலக் குறிப்பு; ஏகாரம் வினா; இது நலம் வினவும் வகையால் எழுந்தது; ஆயின், "மானியார் தமக்கு மானக், குன்றென நின்ற மெய்ம்மைக் குலச்சிறை யார்த மக்கும், நன்றுதான் வினவக் கூறி"(2570) என்றபடி திருமறைக்காட்டில் இவர்கள் வரவிட்ட அறிவுடை மாந்தர்பால் வினவிக் கேட்டறிந்து கொண்ட பிள்ளையார், இங்கு "நன்மைதான் வாலிதே" என்று மீண்டும் வினவிய தென்னையோ? எனின், முன்னர்க் கேட்டறிந்தது பிறர்பாற் கேள்வி; இங்குக் கண்டபோது நேரிற் கேட்பது கண்டறிவதாவதாம் மரபு. ஆதலின் வினவிய தென். இனி இவ்வாறு கொள்வதுடன், இரட்டுற மொழிந்து கொண்டு, மறைக்காட்டில் அவர்கள் பாலறிந்தபடி நாட்டின் தீங்கு பரவிய நிலையினுக்கு "வருந்தற்க" என அஞ்சல் அருளும் முகத்தால், முன்னர் நம் பெருமான் செய்த திருவருள் இனிப்பெருகும்; இன்று காணும் நன்மைதான் வாலிதேயாம்; என்று பிரித்துப், பிள்ளையாரது விளக்கம் பொருந்தக் கூறும் அமுத வாழ்த்தக உரைத்தலுமாம்; இப்பொருளில் பெருகும் - இனிப்பெருக நிகழும் என விளைமுற்றாகக் கொள்க; ஏகாரம் - தேற்றம்; பிரிநிலையுமாம்.
மண்மிசைத் தாழ்ந்து - பிள்ளையார் வினாவுக்கு விடை கூறும் முகத்தால் வணங்கி.
தம்பெருந் தவத்தின் பயன் அணையார் - பிள்ளையார்; தம் - தம்மையும் அம்மையாரையும் அரசனையும் நாட்டினையும் உளப்படுத்திக் கூறியது; பெருந்தவத்தின் பயன் அணையார் - முன்னைப் பெருந்தவஞ் செய்திருந்தாலன்றி இப்பயன் கிடையாதென்பது.
தன்மையாம் நிலை - உள்ள நிலை; தன்மை - உண்மை. மேற் கூறுவது உபசாதமாம் முகமனாகிய இயல்பு அன்றி உள்ளபடி உணர்ந்து கூறும் உண்மை என்பது.
செம்பியர் தலைவன் - என்பதும் பாடம்.