"சென்றகா லத்தின் பழுதிலாத் திறமு மினியெதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப் பெற்ற பேறிதனா லெற்றைக்குந் திருவரு ளுடையேம்; நன்றியி னெறியி லழுந்திய நாடு நற்றமிழ் வேந்தனு முய்ந்து வென்றிகொ டிருநீற் றொளியினில் விளங்கு மேன்மையும் படைத்தன" மென்பார்;
| 659 | (இ-ள்) சென்ற காலத்தின்...திருவருளுடையேம் - சென்ற காலத்திலே பழுதின்றி நின்ற திறமும், இனி எதிர்காலத்தில் வரும் சிறப்புடைய திறமும், இன்று தேவரீர் எழுந்தருளப்பெற்ற பெரும் பேற்றினால் விளங்கும்; இதனால் முக்காலத்திலும் திருவருளுடையோம்; நன்றியில்...படைத்தனம் என்பார்-நன்றியில்லாத (அமண்) நெறியிலே அழுந்திய இந்நாடும் நற்றமிழ் அரசனும் உய்திபெற்று வெற்றி கொள்ளும் திருநீற்றின் ஒளியினில் விளங்கும் மேன்மையினையும் பெற்றோம் என்பாராகி, (வி-ரை) இது மிகச் சிறந்த ஆழ்ந்த கருத்துடன் அமைச்சுத் திறம் விளங்கும் பெருமையுடையதொரு திருப்பாட்டு. சென்ற காலத்தின்...பெற்ற பேறு - திருவருள் - என்றதனால் சென்ற காலத்தையும், வாலிதே என்றதனால் நிகழ் காலத்தையும், பெருகும் நன்மைதான் என்றதனால் எதிர்காலத்தையும் குறித்து வினா நிகழ்ந்தமையால் மூன்று காலத்தும் நன்மையே என்று கூறி, அதற்குக் காரணம் நிகழ்காலத்திற் பெற்ற பேறேயாம் என்று முடித்தனர். இன்று எழுந்தருளும் இப்பேறு சென்ற காலத்தின் பழுதிலாத் திறமாகிய பெரும் தவத்தாலன்றிக் கைகூடாதாதலின் கழிகாலத்தில் திருவருள் நன்கிருந்து அத்தவத்தை முற்றச் செய்தது; இனி இன்று எழுந்தருளும் இப்பேறு மேலவருங்காலத்தில் பெருகும் நன்மையினைச் செய்யும் என்பது உறுதியாதலின் எதிர்காலச் சிறப்பு இப்பேற்றின் பயனாகக் கிடைக்கும் என்று கூறினார்; எனவே சென்றகாலச் சிறப்பு இன்று பேறுதர, இது எதிர்காலச் சிறப்பினைக் காட்ட இவ்வாறு மூன்று காலமும் திருவருன் பெருகு நன்மையின்வாலிதாம் நிலைமையில் உள்ளோம் என்றார்; பெருமானது அருளின் நன்மையினைப் பிள்ளையார் வினாவக், குலச்சிறையார் அதனைப் பிள்ளையாரது எழுந்தருளுதலின் மேற்சார்த்தி, இதுவே பெருமான் திருவருளின் நன்மையின் உருவாய் வந்துள்ளது என்று முடித்த நயமும் காண்க; இதனால் எற்றைக்கும் திருவருள் உடையேம் என்று முடிவு கொள்க; இது பிள்ளையார் அம்மையாரையும் தம்மையும் குறித்து வினவியபடியால் உடையேம் என்றது அதற்கு விடையாக இருவரும்ட உடையோமாயினோம் என்று கொள்ள நின்றது. நன்றியில்...படைத்தனம் - முன்பாட்டிற் கூறியபடி கேட்டருளியதற்கு ஏற்ப இருவர் நலமும் பற்றி விடை கூறினும் அந்நலம் அரசனையும் நாட்டினையும் பற்றிய நலத்தை இன்றியமையாதாதலின் மேலும் கூறலுற்று, அதுவே தமது கருத்தாகிய விண்ணப்பமாக இவ்வருகையின் பயனாய் அதனையும் பெற்றனம் என உறுதியும் விரைவும் பற்றி இறந்த காலத்தாற் கூறிய நயமும் காண்க. மேன்மையும் படைத்தனம் - பிள்ளையார் தம் இருவர் நன்மையினையே வினவினாராதலின், அதனோடு சார்த்தி விடைகூறிய நாட்டினலமும் அரசனலமும் தமது நலமேயாகிய மேன்மையேயாம் என வினாவுக்கேற்ற விடையாகப் பொருத்திக் கூறிய திறமும் காண்க. நன்றியில் நெறி - நன்மையற்ற சமண நெறி; தீ நெறி என்னாது நன்றியில் நெறி என்றது தீமையை வாயினாலுங் கூறாத மரபு. நற்றமிழ் வேந்தன் - "தமிழ் நா டுற்ற தீங்கினுக் களவு தேற்றாச் சிந்தையில்" (2502) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க.
வென்றிகொள் திருநீற்றின் ஒளி - திரு நீற்றுப் பதிகத்தால் வெற்றி வரும் வரலாற்றின் முற் குறிப்பு; "புத்ததொடமணை வாதி லழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே"(தேவா) என்ற திருவாக்கும் கருதுக. அழுந்திய நாடும் வேந்தனும் ஒளியினில் விளங்கும் மேன்மை என்றதனால் முன்னர் இருளில் அழுந்திய தாழ்வு என்பதனைப் பெறவைத்த நயமும் காண்க. நீற்றின் ஒளியினீல் - என்பதும் பாடம். |
|
|