ஆளு மங்கண ராலவா யமர்ந்தினி திருந்த காள கண்டரைக் கண்களின் பயன்பெறக் கண்டு நீள வந்தெழு மன்பினாற் பணிந்தெழு நிறையார் மீளவும்பல முறைநில முறவிழுந் தெழுவார்;
| 665 | (இ-ள்) ஆளும்...கண்டு - ஆட்கொடருளும் அங்கணராகித் திருவாலவாயில் விரும்பி இனிதாக எழுந்தருளியிருக்கும் திருநீலகண்டராகிய இறைவரைக் கண்கள் பெற்றதன் இனிய பயனைப் பெறும்படி கண்டு; நீள...நிறையார் - நீளுமாறு வந்து எழும் அன்பினாலே பணிந்தெழுந்தும் அமைதி பெறாராகி; மீளவும்...எழுவார் - மீண்டும் மீண்டும் பல முறை திருமேனி நிலம் பொருந்த விழுந்து எழுவாராகி, (வி-ரை) ஆளும் அங்கணர் - இனி மன்னவனை ஆட்கொண்டருளும் அங்கண்மையுடையார் என்றது குறிப்பு. இதுவரை ஆட்கொண்டது முன்செய் தீவினைப் பயன் தந்து மறக்கருணை செய்து அவன் அலமருதல் கண்ணுற்றருளியதாம்; இனி அவனது வினைகள் ஒத்துத் துலையென நிற்றலாலே அங்கண்மை செய்து ஆளாக ஏற்றுக் கொண்டருளும் நிலை; அங்கணர் என்ற குறிப்புமிது. ஆளுமங்கணர் - கண்டு என்று கூட்டி ஆட்கொளவந்த பிள்ளையார் கண்டு என்றலுமாம். ஆலவாயமர்ந்தினிதிருந்த காளகண்டர் - அரசனும் நாட்டவரும் முன் செய்த தீவினைகளாகிய விடத்தை அமுதமாக ஏற்றருளுபவர் என்பது குறிப்பு; "நீலமா மிடற், றுல வாயிலான்" என்ற தேவாரக் கருத்தை விளக்கியபடி, பயன்பெறக் கண்டு - "கண்காள் காண்மின்களோ கட னஞ்சுண்ட கண்டன் றன்னை"(திருவங்கமாலை). கண்களின் பயன் - கண் கிடைக்கப்பெற்ற பயன் - ஞானக்கண்ணால் எப்பொழுதும் காண்பவர் புறக்கண்ணும் பயன் பெறக்கண்டார் என்றும், இதுவரை கண் காணாது பயனிழந்த மருரை மக்கள் இனிக்கண்டு பயன் பெறும் படி தாம்பண்டு என்றும் உரைக்க நின்றது; "இங்கெம்மைக் கண்விடுத்த"(2776). பணிந்தெழ நிறையார் - மீளவும் பலமுறை - விழுந்தெழுவார் - அளவின்றி வணங்கி என்று மேல்பரும் பாட்டுடன் கூட்டியுரைத்துக்கொள்க. நிறையார் - நிறைவு(அமைதி - திருத்தி) பெறாதவராகி; வணங்குதல் மூன்று - ஐந்து - ஏழு - ஒன்பது - பதினொன்னு என முறைப்பட விதிக்கப்பட்டது. அவ்வாறு அளவுபட வணங்குதலில் மனம் அமையாது; அளவில்லாதபடி பலமுறையும் வீழ்ந்து வணங்கி எழுந்தனர் என்பதாம்; நிறையார் - விழுந்தெழவார் - வணங்கி - நின்று - ஏத்தினார் என வரும்பாட்டுடன் முடிக்க. நீளவந்து எழும் அன்பினால் - இவ்வாறு அளவுகடந்த நிலையில் வீழ்ந்தெழுந்து வணங்குதல் அளவுகடந்து பொங்கி எழும் அபினாலன்றி விளையாது என்பதாம். |
|
|