பாடல் எண் :2564
அங்க மெட்டினு மைந்தினு மளவின்றி வணங்கிப்
பொங்கு காதலின் மெய்ம்மயிர்ப் புளகமும் பொழியுஞ
செங்க ணீர்தரு மருவியுந் திகழ்திரு மேனி
யெங்கு மாகிநின் றேத்தினார் புகலிய ரின்றவர்.
666
(இ-ள்) அங்க மெட்டினும்...வணங்கி-எட்டு அங்கத்தானும் ஐந்து அங்கத்தானும் அளவில்லாதபடி வணக்கங்கள் செய்து; பொங்கு...அருவியும் - உண்ணிறைந்து பொங்கி எழும் அன்பின் மிகுதியினாலே மெய்யின்கண் மயிர்க்கூச்செறிதலும், செங்கண்கள் பொழிகின்ற நீரின் அருவி போனற் பெருக்கும்; திகழ்...நின்று - திருநீற்றின் ஒளிவிளங்கும் திருமேனியில் முழுவதும் பொருந்தும்படி நின்று; புகலிய ரிறைவர் ஏத்தினார் - சீகாழித் தலைவராகிய பிள்ளையார் துதித்தருளினார்.
(வி-ரை) அங்கமெட்டினும் ஐந்தினும் அளவின்றி வணங்கி - அட்டாங்க பஞ்சாங்கமாகச் செய்யும் வணக்கங்களை எண்ணில்லாதபடி செய்து; அட்டாங்க வணக்கம் - எட்டங்கங்களும் நிலந்தோய வணங்குதல்; ஐந்து அங்கங்கள் நிலம்பட வணங்குதல் பஞ்சாங்க நமக்காரம் எனப்படும்; இவை இன்னவென்று முன்னர்க் கூறப்பட்டன. ஆண்பாலார் இவையிரண்டும் செய்தல் வேண்டும்; பெண்பாலார் ஐந்தங்க வணக்கமே செய்தற்குரியர்.
மயிர்ப் புளகமும் கண் நீரருவியும் திருமேனி எங்கும் ஆகி - திருமேனி முழுதும் மயிர்ப்புளகம் கொண்டது; கண்ணீர் அருவிபோலப் பெருகித் திருமேனி முழுதும் நனைந்தது; இவ்வாறாகிய நிலையடைந்து. "உடம்பெல்லாங் கண்ணா யண்ணா வெள்ளந்தான் பாயாதால்"(திருவா).
திகழ் திருமேனி - திகழ்தல் - பேர் அழகினால் திருநீற்றொளியினாலும் விளங்குதல்.
ஏத்தினார் - பலவதையாலும் தோத்திரம் செய்தனர்; பதிகத்தாலேத்துதல் மேற் கூறப்படும்.
இந்த இரண்டு பாட்டுகளும் தொடர்ந்து ஒரு முடிவு கொண்டன.