பாடல் எண் :2567
பிள்ளை யாரெழுந் தருளிமுன் புகுதுமப் பொழுது
வெள்ள நீர்பொதி வேணியார் தமைத்தொழும் விருப்பால்
உள்ள ணைந்திட வெதிர்செலா தொருமருங் கொதுங்குந்
தெள்ளு நீர்விழித் தெரிவையார் சென்றுமுன் பெய்த,
669
(இ-ள்) பிள்ளையார்...அப்பொழுது - முன்னர்ப் பிள்ளையார் திருக்கோயிலினுள்ளே எழுந்தருளிப் புகுந்த அப்பொழுது; வெள்ள நீர்...உள்ளணைந்திட - கங்கை தங்கும் சடையினையுடைய இறைவரைத் தொழுகின்ற ஆர்வத்தோடும் உள்ளே அணைந்திடலாலே; எதிர் செலாது...தெரிவையார் - அவர் எதிரிற் செல்லாது ஒரு பக்கத்தில் ஒதுங்கிய தெள்ளும் நீரிற் பொருந்திய கண்களையுடைய தெரிவையாராகிய அம்மையார்; சென்று முன்பு எய்த - (அவரது) திருமுன்பு சேர;
(வி-ரை) எதிர்செலா தொருமருங்கு ஒதுங்கும் - இது இப்பாட்டின் கருத்து நுட்பம்; மிகவும் மனங்கொளத்தக்கது: - பிள்ளையாரையெதிர் கொள்ளும்படி குலச்சிறையாரை ஏவினார் அம்மையார்; அவரும் அவ்வாறே எதிர்கொள்ள எய்தும் காலைத் தாமும் தமது நிலைமைக்கேற்றவாறு எதிர்கொள வேண்டுமென்று அம்மையார் எண்ணினார்; ஆலவாயமர்ந்தாரைக் கும்பிட வேண்டுமென்று கொற்றவன் றனக்கும் கூறித் திருவாலவாய் சென்று நம்பரை வணங்கிப் பிள்ளையார் வரவை எதிர்நோக்கி நல்வரவேற்று நின்றனர் (2545); பின்னர்ப் பிள்ளையாரும் திருவாலவாயினுள் எழுந்தருளினர்; ஆனால், அவரை நல்வரவேற்கும் பொருட்டே அங்கிருந்த அம்மையார் அப்போது அவர் முன்பு எதிர் செல்லாது ஒருபுறம் ஒதுங்கிக் கொண்டனர்; பிள்ளையாரும் ஆர்வத்தால் வேறெங்கும் நோக்காது நேரே உட்சென்று முறையினால் இறைவரை வணங்கிப் பாடி அருள்பெற்றுப் பிறம்பு திருமுன்றிலில் எய்தினார்; அப்போது அம்மையார் அவர் திருமுன்பு எய்தினர் என்பதாம்.
முன்புகுதும் அப்பொழுது... உள்அணைந்திட - அணைந்திட -அணைந்திடலால்: பிள்ளையாரை நல்வரவேற்பதற்காக வந்த அம்மையார் அவர் உட்புகும்போது எதிர் செல்லாது ஒதுங்கிக்கொண்டதன் காரணம் கூறியபடி; என்னை? - உட்புகும் அப்பொழுது இறைவரைத் தொழும் பெருவிருப்பினாற் செல்கின்றாராதலின் அப்பொழுது அதற்கிடையூறாய்க் குறுக்கிட்டு முன்னின்று வரவேற்பது தகுதியன்று; அன்றியும் திருக்கோயிலில் வழிபடச் செல்வோர் அதற்குப் புறம்பாகிய வேறொன்றினும் கவனம் செலுத்துதல் முறையன்றாதலின் அவரும் இவரைக் காணமாட்டார்; தமது வரவேற்பும் கருதிய பயன்தராது ஒழிந்து வீணாகும்; மேலும் மற்றொன்று - பிள்ளையார் உட்புகுந்து தமது பெருமானை வணங்குவர்; தம்பொருட்டு வேண்டி அவரது அருள்பெற்று மீள்குவர்; அவ்வாறு மீளும் பொழுது முன் சென்று வணங்கின் பிள்ளையாரருளேயன்றி அவ்வருட் பிரசாதத்தினையும் பெறத் தக்கது என்ற நிலையும் கருத்து.
தெள்ளுநீர் விழி - அன்புக் கண்ணீர் பெருகும் கண்கள்; இது தாயாந்தன்மை நிலையினால் எழுந்தது; "அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர், புன்கணீர் பூச றரும் " (குறள்): "சுரந்த திருமுலைக்கே துய்ய சிவஞானஞ் சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த, தனமுடையா டென்பாண்டி மாதேவி தாழ்ந்த, மனமுடையா ளன்பிருந்த வாறு" (களிறு - 54) ; "இல்லா ழலைப்பாலுங் கண்ணீ மேந்திழைபா னல்லா யுளவாமால்" (போதம் 8 சூத்;) என்று வரும் திருவாக்குக்களும், "ஏந்திய இழைகளை யுடையாட்குக் குழவமாட்டுளதாகிய அருவாகிய அன்பினைப் பிற ரறியுமாறு வெளிப்படுத்தும் அவ்வன்பினுருவாகிய ழலைப்பாலுங் கண்ணீரும் அவண் மாட்டுக் குழவியைக் காணுமுன் இல்லாவாய்ப், பின்னுளவாம்" "அவ்விரண்டும் அன்பின் வடிவே பிறவல்ல வென்பது, அன்பு நிகழ்வதற்குரிய காரண முள்வழி வெளிப்பட்டு, அஃதில்வழி வெளிப்படாத ஒற்றுமை நோக்கிக் கண்டுகொள்க" என்று வரும் சிற்றுரையும் காண்க; இங்குக் கண்ணீர் மட்டும் கூறினாரேனும் மேற்கூறிய நியாயத்தால் இனம்பற்றி முலைப்பாலுங் கொள்க. இக்கருத்தைப் பற்றிப் பின்வந்த பெரியாராகிய சிவப்பிரகாச சுவாமிகளும் "முன்னின் னிலைவிளம்பக், கொங்கை சுரந்தவருட் கோமகளோ" (நால்வர் நான்மணிமாலை) என்று போற்றினர்.
தெரிவையார் - தெரிவை - பெண்களின் ஏழு பருவங்களுள் ஆறுவது; 25 வயது முதல் 31 வயது வரையும் உள்ள பருவம்; இஃது அப்பொழுது அம்மையாரது வயதைக் குறிக்கும் மொழி என்று கருத இடமுண்டு; பெண்பாற் பொதுப் பெயர் என்று கொள்ளினு மிழுக்கில்லை; இங்கு இப்பெயராற் கூறியது இத்துணைப் பயனும் படுபொருளும் தெரிந்து செயலாற்றும் தன்மையுடையார் என்ற குறிப்புத் தருதற்கு; "மானியார் மனக் கருத்து முற்றியதென மதித்தே" (2570) என மேற்கூறுதல் காண்க.
முன்பு எய்த - பிள்ளையார் திருமுன்பு செல்ல.