பாடல் எண் :2568
மருங்கின் மந்திரி யார்பிள்ளை யார்கழல் வணங்கிக்
கருங்கு ழற்கற்றை மேற்குவி கைத்தளி ருடையார்
"பருங்கை யானைவாழ் வளவர்கோன் பாவையா" ரென்னப்
பெருங்க ளிப்புடன் விரைந்தெதிர் பிள்ளையா ரணைந்தார்,
670
(இ-ள்) மருங்கின்...வணங்கி - பக்கத்தே வந்த மந்திரியாராகிய குலச்சிறையார் பிள்ளையாரது திருவடிகளை வணங்கி நின்று; "கருங்குழல்...பாவையார்" என்ன - "கரிய கூந்தலின் மேலே கூப்பிய கைத்தளிர்களை யுடைய அம்மையார் பரிய கையினையுடைய யானைகள் வாழும்வளச் சோழ மன்னரது மகளார்" என்று சொல்ல; பெரும்...அணைந்தார் - பெருமகிழ்ச்சியுடனே விரைந்து அவ்வம்மையார் எதிரே அவர் வந்து அணைந்தனராக;
(வி -ரை) மருங்கின்... வணங்கி - மருங்கின் மந்திரியார் - பிள்ளையாருடன் வந்த திருத்தொண்டர்களுள் பக்கத்தே வந்த குலச்சிறையார்.
பிள்ளையார் கழல் வணங்கி - மந்திரியார் - "பாவையார்" என்ன - என்று கூட்டுக. இஃது அம்மையாரைப் பிள்ளையாருக்கு மந்திரியார் அறிமுகப் படுத்திய முறை; இஃது முந்நாளின் புது நாகரீக முறைகளுள் ஒன்றாகக் கிடைத்ததாகக் கருதி மகிழ்ந்து கொள்வாருமுளர்; இங்குக் காணும் உயர்ந்த நிலையினைக் கண்டு யாவரும் பின்பற்றி நலம் பெறுவாராக; வணங்கி அறிவிக்கும் முறையும் காண்க.
"கருங்குழல்...பாவையார்" என்ன - இது அமைச்சர் விண்ணப்பித்தது; மேற்குவி கைத்தளி ருடையார் - அது போழ்து அம்மையார் சிரமேற் கைகுவித்து நின்றனர் என்பதறியப்படும்; இதனை முன்பாட்டிற் கூறாது இங்கு அமைச்சர் வாக்கிற் கூறவைத்த கவிநயம் கண்டு கொள்க; கற்றை- தொகுதி; கைத்தளிர் - கைகளாகிய தளிர் என்க; திருவடிகளில் தளிர்களையிட்டு வணங்கிப் பழகிய கைகள் என்ற குறிப்பும் காண்க. பிள்ளையாரை வணங்கத் தளிர்களையும் மலர்களையும் கையிற் கொண்டிருந்தார் என்றதும் குறிப்பு.
பருங்கை யானை வாழ் வளவர் கோன் - யானை வாழும் வளத்தினையுடையார். யானைப் படையும் குறிப்பு.
வளவர்கோன் பாவையார் - சோழரது மகளார் என்றறிவித்த திறம் காண்க; இதுபற்றி முன் " வளவர்கோன் பாவை" (தேவா); " செம்பியர் பெருமான் றிருமகளார்" (2556) என்ற இடங்களிலும், பிறாண்டு முரைத்தவை பார்க்க; பிள்ளையார் அருளிய தேவாரத்தை உடனிருந்து கேட்ட நினைவின் குறிப்பினை உட்கொண்டு அவரது திருவுள்ளத்திற் கேற்கும்படி அறிவித்த குறிப்புமாம்.
எதிர் - அம்மையார் முன்பு; பிள்ளையாரது முன்பு அம்மையார் சிரமேற் கை கூப்பி எய்தினார்; மந்திரியார் அறிவிக்கப் பிள்ளையாரும் விரைந்து அம்மையாரெதிர் அணைந்தனர். இவை அன்பின் திறம்.
கைம்மலருடையார் - என்பதும் பாடம்.