பாடல் எண் :2570
ஞான போனக ரெதிர்தொழு தெழுந்தநற் றவத்து
மானி யார்மனக் கருத்துமுற் றியதென மதித்தே
பான லங்கண்க ணீர்மல்கப் பவளவாய் குழறி
"யானு மென்பதி யுஞ்செய்த தவமென்கொல் !" என்றார் .
672
(இ-ள்) ஞான போனகரெதிர் ... மானியார் - பிள்ளையாரெதிரில் தொழுதெழுந்த நல்ல தவத்தையுடைய அம்மையார்; மனக்கருத்து முற்றியதென மதித்தே தமது மனத்துட் கொண்ட கருத்தாகிய சைவத் தாபனமும் பாண்டி நாட்டின் மீட்சியும் முற்றுப் பெற்றன என்றே துணிபு கொண்டு ; பானலங்கண்கள்...என்றார்- நீல மலர்போன்ற கண்களில் நீர் பொருந்தப் பவளம் போன்ற வாய் குழறி "யானும் எனது பதியும் 'தேவரீர் இங்கு எழுந்தருளும் இப்பேறு பெறுதற் பொருட்டு' முன் செய்த பெருந்தவம்தான் என்னை கொல்லோ! " என்று கூறினார்.
(வி-ரை) இது பிள்ளையார் தம் அடிபொருந்த வீழ்ந்த அம்மையாரை அருட்கையினாலெடுத் தருளியபின், அம்மையாரது மனஞ் சொற் செயல்களைக் கூறியபடி.
தொழு தெழுந்த - தொழுதபடியே. அடிபொருந்த வீழ்ந்தவர் தொழுத வண்ணமே எழுந்தனர். தொழுது - தொழுதபடி.
நற்றவத்து மானியார் - நல்ல தவத்தையுடைய ராதலின் எனக் காரணக் குறிப்புப்பட வந்த அடைமொழி.
மனக்கருத்து முற்றியது எனவே மதித்து - என்க; எனவே என்று ஏகாரம் பிரித்துக் கூட்டுக. மனக்கருத்து - 2511ல் உரைக்கப்பட்டது. அமணர்களால் கட்டழிந்து சைவ ஒழுக்கம் குன்றிய நிலையினை ஆளுடைய பிள்ளையாரால் நீக்கித் திருநீற்று நெறி தழைக்கச் செய்வது.
முற்றியது எனவே - விரைவும் உறுதியும்பற்றி எதிர்காலத்து நிகழ்வதனை இறந்த காலத்தாற் கூறினார்;

கண்கணீர் மல்க - வாய்குழறி - இவை அன்பு மிகுதியால் உளதாகும் ஆனந்த மேலீட்டினால் நிகழ்வன.
யானும் என்பதியும் செய்ததவம் என்கொல்! - இது அம்மையார் பிள்ளையாரை நல் வரவேற்ற முறையில் கூறியது; என்பதி - எனது கணவர் - பாண்டியர்; பதி - என்பதற்கு - நகரம் - நகரமாந்தர் என்று உரைப்பாருமுண்டு; பதியினையும் உடன் கூறியது இல்லறநிலை முறையும் பிள்ளையார் எழுந்தருளியதனால் அவர்க்கே மிக்க பயன் செய்யு நிலையும்பற்றி என்க.
செய்ததவம் - தேவரீர் இங்கு எழுந்தருளும் இப்பேறு பெறுதற் பொருட்டு என்பது குறிப்பெச்சம்.செய்த - இந்நாள் இது பெறுதற்குரிய பெருந் தவம் ஒன்றும் யாம் செய்திலோம்; பெருந்தவத்தாலன்றி இப்பேறு வாராது; ஆதலின் தவம் முன் செய்திருத்தல் வேண்டும் என்பார் செய்த - என முன்னை நிலைபற்றிக் கூறினார்.
தவம் என்கொல்! - யாங்களறிய வாராத அத்துணைப் பெரிது என்று அதிசயக் குறிப்புப்பட வந்த வினா; "நன்னிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தாற் கேட்டார்" (2503) என்றது இங்கு நினைவு கூர்தற் பாலது.