பாடல் எண் :2573
செல்வ மல்கிய திருவால வாயினிற் பணிசெய்
தல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கணைந் திறைஞ்சி
"மல்கு காரம ணிருள்கெட வீங்குவந் தருள
எல்லை யிஃறவஞ் செய்தன" மெனவெடுத் திசைத்தார் ;
675
(இ-ள்) செல்வம்...இறைஞ்சி - செல்வம் பெருகிய திருவாலவாய்த் திருக்கோயிலின் கண்ணே திருப்பணிகள் செய்து வாழும் பெருகிய திருத்தொண்டர்கள் பிள்ளையாரின் பக்கத்தில் வந்து வணங்கி ; " மல்கு...செய்தனம்" என - வந்து சேர்ந்த சமணராகிய இருள் கெட்டொழிய இங்குத் தேவரீர் (முழுமதிபோல்)வந்தருளுதற்கு எல்லையில்லாத பெரிய தவஞ் செய்தோம் என்று; எடுத்து இசைத்தார் - எடுத்துத் துதித்தனராக,
(வி - ரை) செல்வம் - அருட் செல்வம். இஃது ஈண்டு இறைவர் தம்மை வந்தடைந்த எல்லாவுயிர்க்கு மெளியராய்ச் செய்தருளிய பலதிறப்பட்ட அருட்டிரு விளையாடல்களால் எளிதிலறியப்படும்.
பணிசெய்து அல்கு தொண்டர்கள் - அல்குதல் - தங்குதல்; மிகுதல் என்றலுமாம்; குறைதல் என்று கொண்டு மன ஊக்கங் குறைந்து நிற்றல் என்றலுமாம்; இவர்கள் திருக்கோயிற் பணி செய்யும் திருத்தொண்டர்கள்; "இருவர்தம் பாங்கு மன்றிச் வைசமங் கெய்தா தாக" (2501) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; மூர்த்தி நாயனார் புராண வரலாறும் அவ்வாறுள்ள பிறவும் நினைவு கூர்க; அரசியாரும் அமைச்சனாரும் வணங்கி விண்ணப்பித்த பின்னரும் அமைதிபெறாது பணிசெய் தொண்டரும் அணுகவந்து வரவேற்று விண்ணப்பித்த முறையும் ஆர்வ மிகுதியும் காண்க.
மருங்கு அணைந்து - இதுவரை சிறிது துரத்தே நின்றிருந்த இவர்கள் இப்போது அணுக வந்து. இருள் கெட - வந்தருள் - இருள்கெட என்றதனால் முழுமதி போல என்று வருவிக்கப்பட்டது; "நிலத்திடை வானி னின்று நீளிரு ணீங்க வந்த, கலைச்செழுந் திங்கள் போலுங் கவுணியர்" (2649) என்று மன்னவன் காணும் நிலையினையும், "வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தை" (2626) என்று அம்மையாரும் அமைச்சனாருங் காணும் நிலையினையும் உரைப்பது காண்க; அடியார்களது சுழலார் துயர் வெயில் வெப்பம் நீக்கிக் குளிர்ச்சி தருதலின் மதியாகவே பின்னர் உருவகித்தார். அதுபற்றி ஈண்டும் முழுமதி என்று வருவிக்கப்பட்டது. இவ்வாறன்றி ஆதித்தன் போல என்று வருவித்துரைப்பர் ஆறுமுகத் தம்பிரானார்; அதன் பொருத்தம் ஆராயத்தக்கது; அரசனது முன்பு, முதலில் அமணர்கள் கண்டு சினந்து சூழ்ந்தபோது "காலை எழுங் கதிரவனைப் புடைசூழுங் கருமுகில்போல்" (2654) என்பது ஈண்டுக் கருதத்தக்கது; ஆனால் பகைவரைக் காயும் தன்மையால் ஆண்டு அவ்வாறு வேறு திறம்பட உருவாக்கப்பட்டது என்க; அவ்விடத்தும் கதிரவன் என்று வாளா கூறினால் கடும் வெயிற் காய்பவன் என்ன வருமாதலின், பிள்ளையார் தன்மையிடத்து அவ்வாறு கொள்ளல் தகுதியன்றென்று கருதுவார் போன்று ஆசிரியர் "காலை எழுங் கதிரவனை" என்று சிறப்பித்தமையும் கருதுக. - அடியார்க்குத் தண் நிழல்செய்யும் மதி போலவும் அல்லார்க்கு அழல் போலவும் உள்ளவன் இறைவன்; "அழல் தான்" "நிழல் தான்" (தேவா - பிள் - நெல்லிக்கா). அத்தன்மையே பிள்ளையார்பாலும் உளதாம். (திரு.வ.சு.செ. அவர்கள் குறிப்பு).
எடுத்திசைத்தல் - வரவேற்கும் முறையாற் போற்றுதல்.