பாடல் எண் :2576
வழுதி மாநக ரதனிடை மாமறைத் தலைவர்
பழுதில் சீரடி யாருடன் பகல்வரக் கண்ட
கழுது போல்வருங் காரமண் குண்டர்கள் கலங்கி
இழுது மையிருட் கிருளென வீண்டின ரொருபால்.
678
(இ-ள்) வெளிப்படை - பாண்டியரது பெருந்திரு நகரத்தின்கண் பெருமறைகளின் தலைவராகிய பிள்ளையார் குற்றமற்ற சிறப்புடைய அடியார்களுடனே பகலில் வரக்கண்ட, பேய்போன்று வரும் கரிய அமண் குண்டர்கள் கலக்க மடைந்து குழம்பாகிய மை போன்ற இருளுக்கும் மேம்பட்ட இருள்போல ஒரு புறத்துக் கூடினர்.
(வி-ரை) வழுதி மாநகர் - பாண்டியர்களது தலைநகரமாகிய மதுரை; மாநகர் - தலைநகர்;
பகல்வரக் கண்ட - குண்டர்கள் என்று கூட்டுக; பகல் - பகலில் அரசன் அமண் சார்பினிருப்பவும் அஞ்சாது மறைவாயன்றி வெளிப்படையாக வர என்றதும் குறிப்பு ; பகல் - ஞாயிறு என்று கொண்டு ஞாயிறுவரக் கண்ட என்றலுமாம்; பிள்ளையாரும் அடியாரும் கூடிய கூட்டத்தில் விளக்கம் ஞாயிற்றினை ஒத்தது என்பதாம்.
அடியாருடன் வரப் பகல் கண்ட கழுதுபோல் - கலங்கி - என்று கூட்டி உரைத்தலுமொன்று ; கழுது - பேய் ; பேய்கள் இரவில் வெளியிற் சரிந்து உலவும் தன்மையும் பகல் கண்டவுடன் கலங்கி ஒரிடத்து ஒதுங்குந் தன்மையு முடையன; "வாதுசெய் சமணும் சாக்கியப் பேய்கள்" (பிள் - தேவா - அச்சிறு பாக்கம்).
காரமண் குண்டர்கள் - கார் - கரிய நிறமுடைய ; உடல் போலவே அகமும் கருமையுடையார் என்ற குறிப்புப் பெறக் காரமண் என்றார், அகத்துட் கருமையாவது பொய், சினம், வஞ்சனை,பொறாமை முதலிய தீக்குணங்கள் நிறைதல்; குண்டர் - கீழ்மக்கள்; இருட்கிருள் - புற இருளும் அக இருளும் குறித்தது.
இழுது மை இருட்டு இருள் என - இழுது - குழம்பு; மையிழுது என்க. மைக்குழம்பு.
மைஇருட்கு இருளாம் என - மைக்குழம்பு போன்ற திணிந்த இருளுக்கும் மேம்பட்ட இருள்; கு என்ற நான்கனுருபு எல்லைப் பொருளில் வரும் ஐந்தனுருபின் பொருளில் வந்தது; "வண்ண நீடிய மைக்குழம் பாமென, நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து" (455) "கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட், டுருகுகின்றது போன்றது" (454) என்ற கருத்துக்கள் காண்க;
இருளென - கரிய அமணரை இருளுக்கு உவமித்தார்; உருப்பற்றி வந்த உவமம். இருளென ஒருபால் ஈண்டினர் - பகல் வந்தபோது இருள் ஒருபுடை ஒதுங்குதல் இயல்பாதலின் வினைபற்றி வந்தவுவமுமாம்; கழுதுபோல் என்றதும் இவ்வாறே உருவும், பிறரைப்பற்றி அலைத்தலாகிய வினையும் பற்றி வந்தவுவமம்; கழுதுபோல் வரும் என்றது இரவிற் பேய் போன்று என அவர்தம்மியல்பு பற்றியும், இருளென ஒருபால் ஈண்டினர் என்று பகலில் இருள் போன்று எனப் பிள்ளையார் முன் அவர்தம் நிலைபற்றியும் தெரிவிக்க இரண்டு வகையால் உவமை கூறினார் ; " இருட் குழாஞ் செல்வது போல" (1349)-ல் உரைத்தவையும், "அவ்விருளன்னவர்" (1387) முதலியவையும் பார்க்க.
பகல்வரக் கண்ட இருளென ஒருபால் ஈண்டினர் - பகலில் வந்தபோது இருள் செயலின்றி ஒருபுடை ஒதுங்கும் இயல்பும் குறித்தது;
ஒருபால் ஈண்டினர் - வஞ்சகச் சூழ்ச்சி புரிவார் வெளிப்படையானன்றி ஒருபுடை மறைவிடத்துக் கூடுதல் இயல்பாம் என்ற குறிப்பு.
இழுகு மெய்யிருட்கிருள் - என்று பாடங் கொள்வாரு முண்டு; இப் பொருட்கு, மெய்யிருட்கு இவர்களின் உடலின் இருளி (கருமை) னுக்கு; இருள் இழுகும் - பூத இருளும் பின்னடையும் என்றுரைக்க; இழுகுதல் - பின்னடைதல்;
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன ; எல்லிவந்து அணையும்படி இரவி மேல்கட லணைந்தனன் என்று கூட்டி முன்பாட்டைத் தனிமுடிபாக்கி யுரைப்பினு மிழுக்காறு.