வாயில் காவலர் மன்னவன் றனையெதிர் வணங்கி "யாய மாகிவந் தடிகண்மா ரணைந்தன"ரென்ன, வேயி னானணை வாரென, வவருஞ்சென் றிசைந்தார்; பாயி னாலுடன் மூடுவார் பதைப்புடன் புக்கார்.
| 681 | (இ-ள்) வாயில் காவலர்...என்ன - வாயில் காப்போர் சென்று அரசன் முன்பு வணங்கி "அடிகண்மார்கள் எல்லாரும் கூட்டமாக வந்தணைந் துள்ளார்" என்று அறிவிக்க; ஏயினான் "அணைவார்" என - அவ்வடிகண் மாருடனே ஒத்த கருத்துடையானாகிய அரசன் "அவர்கள் அணைவார்களாக " என்று கூற; அவரும் சென்று இசைத்தார் - அவர்களும் புறத்துச் சென்று அடிகண்மார்களிடம் அதனைச் சொன்னார்கள்; பாயினால்...புக்கார் - பாயுடுக்கையினால் உடலை மூடும் அச்சமணமுனிவர்கள் பதைப்போடும உள்ளே புகுந்தனர். (வி-ரை) என்ன: - என; - இசைத்தார்; - புக்கார்; என வாயில் காப்போர் அரசனிடம் அறிவித்த செயலும் அரசன் கூறியதும், அதனை அவர்கள் அடிகண்மாருக்கு அறிவித்ததும், அதன்படி அவர்கள் உள்ளே புகுந்ததும் ஆகிய நான்கு செயல்களையும் இவ்வொரு பாட்டிற் செறிவு பெறக் கூறினார். அவை நிகழ்ந்த மிக்க விரையும், மனக் கலக்கத்துடன் பதைத்து நின்ற நிலையும் உணர்த்துவதற்கு. அம்மையாரும் குலச்சிறையாரும் விடுத்த பரிசனங்கள் திருமறைக்காட்டிற் சென்று பிள்ளையார் பால் சேர்ந்தறிவித்த நிலையினை முன் 2505 - 2509. வரை - 5 பாட்டுக்களாற் கூறிய அமைதியினை ஈண்டு ஒப்பு நோக்குக. சைவ ஆக்கத்தின் பெருக்கமும், சமணத்தின் அழிவாகிய சுருக்கமும் குறிப்பிற் பெறவைத்த நயமும் காண்க; ஆயமாகி - கூட்டமாகக் கூடி; அடிகள்மார் - சமண முனிவர்கள்; கள் - சிறப்பும், மார் பன்மையும் உணர்த்திய விகுதிகள்; ஏயினான் "அணைவார்" என - ஏயினான் - ஒத்தவன்; அடிகள்மாருடன் ஒத்த கருத்துடையவன்: ஏய்தல் - ஒத்தல்; (மனம்) பொருந்துதல் என்றலுமாம்; அணைவார் - அணைவாராக ; ஏயினான் - இசைந்தவனாய் என்றலுமாம். சென்று - வாயிற் புறத்து நின்ற அடிகண்மார்களிடம் போய்; பாயினால் உடல் மூடுதல் - பாயுடுத்தல் அமண குருமார் வழக்கு; பதைப்புடன் புக்கார் - பதைப்பு - 2576ல் கூறிய மனக்கலக்கத்தாலும், பொறாமையை மறைத்து அதனை அரசனிடம் மிகுதிப்படுத்திக் காட்டும் சூழ்ச்சியாலும் நிகழ்ந்தது; இது உலகியல் வழக்கிலும் காணப்படும்; பாயினால் உடன் மூடுவார் பதைப்புடன் புக்கார் - உடலைப் பாயினால் மூடுதல் போல உள்ளத்தில் மூண்டு வந்த கலக்கத்தையும் பொறாமை காரணமாக மூண்ட வஞ்சச் செயலையும் மேற்கொண்ட பதைப்பினால் மூடினார் என்ற குறிப்பும் காண்க. ஏயினாரணைவா ரென - என்பதும் பாடம். |
|
|