"மாலை வெண்குடை வளவர்சோ ணாட்டுவண் புகலிச் சூல பாணிபான் ஞானம்பெற் றானென்று சுருதிப் பால னன்பர்தங் குழாத்தொடும பனிமுத்தின் சிவிகை மேல ணைந்தன னெங்களை வாதினில் வெல்ல",
| 685 | (இ-ள்) மாலை...என்று - (ஆத்தி) மாலையினையும் வெண் கொற்றக் குடையினையும் உடைய சோழர்களது வண்மையுடைய சீகாழியில் சூலபாணியாகிய சிவனிடத்தில் ஞானம் பெற்று னென்று; சுருதிப்பாலன்...வெல்ல - மறைச்சிறுவன் அன்பர்களின் கூட்டத்தினோடும் குளிர்ந்த முத்துச் சிவிகையின் மேல் எங்களையும் வாதினில் வெல்ல அணைந்தனன். (வி-ரை) மாலை வெண்குடை வளவர் - மாலை -ஆத்தி மலர் மாலை; மாலை என்ற பொதுப்பெயர் வளவர் என்ற பெயர்க்கு அடை மொழியாய் இடநோக்கி இங்குச் சோழர்க்குரிய ஆத்திமாலையைக் குறித்து நின்றது. வெண்குடை - முடி மன்னர்க்குரிய சிறப்படையாளங்களுள் ஒன்று. வளவர் சோணா(ட்)டு - வளவர் நாடு என்றாலே அமையுமாதலின் சோழ நாடு என்றதில் சோழ என்றது வாளாபெயராய் நின்றது: சோழநாடு சோணாடு என மருவியது; வளவர்கட்குப் பிறநாடுகளும் ஒவ்வொரு காலங்களில் உரிமையாயின. அது குறிக்கக் கூறிய குறிப்புமாம். சோணாட்டு - புகலி - ஞானம் பெற்றானென்று - வெல்ல - அணைந்தனன் - அரசன் அவர்கள் அணைந்தது ஏன்? அவர்கள் யார் என்று வினவியதற்கு மறு மொழியாக அவர்களின் தலைவரது நாடும், ஊரும், பேரும், தகுதியும், அணைந்த கருமமும் எடுத்துக் கூறியவாறு காண்க. அரசனது வினாவுக்கு விடையாகக் கூறியவற்றை மட்டும் சிறப்பாக இப்பாட்டாற் கூறி, விடையல்லாது தாம் அறிந்தவற்றை யெல்லாம் தாமறிந்தபடி ஒன்றும் ஒழியாது எடுத்து சொல்லியவற்றைப் பொது வகையால் மேற்பாட்டிற் கூறும் கவிநயம் காண்க. சூலபாணி பால் ஞானம் பெற்றானென்று - வெல்ல - அணைந்தனன் - சூலபாணிபால் ஞானம் பெற்றான் - எல்லா ஞானங்களுக்கும் கர்த்தா ஆதி சூலபாணி என்பது வேதம். அக்குறிப்புப்பெறக் கூறியதாம்; பெற்றானென்று - பெற்றானென்று சொல்லிக் கொண்டு; பெற்றதனால் என்ற உண்மைக் குறிப்பும்பட நின்றது; வெல்ல அணைந்தனன் - அணைந்ததென்? என்ற வினாவுக்கு வெல்ல அணைந்தனன் என்றனர்; வெல்ல - வெல்வதற்கென்று எண்ணி; வெல்வதற்காக என்று பிற்சரிதக் குறிப்புப்பட நின்றமையும் காண்க. அவர்களையறியாமலே அவர்கள் வாக்கில் உண்மைக் குறிப்பு நிகழ்ந்தது காண்க. எங்களை - உனது ஆதரவு பெற்ற எங்களை என்பது உரைக் குறிப்பு; சிறப்பும்மை தொக்கது. மேல் அணைந்தனன் - மேன்மை பெற என்றது குறிப்பு. |
|
|