பாடல் எண் :2586
"வந்த வந்தணன் றன்னைநாம் வலிசெய்து போக்குஞ்
சிந்தை யன்றியச் சிறுமறை யோனுறை மடத்தில்
வெந்த முற்பட விஞ்சைமந் திரத்தொழில் விளைத்தால்
இந்த நன்னக ரிடத்திரா; னேகு"மென் றிசைத்தார்.
688
(இ-ள்) வந்த...சிந்தை யன்றி - வந்த அந்தணனை நாம் வலிமை செய்து போக்கும் எண்ண மன்றி; அச்சிறு மறையோன்...ஏகும் என்று இசைத்தார் - அந்த மறைச்சிறுவன் தங்கும் மடத்தில் வெவ்விய தழல் சேரும்படி விஞ்சை மந்திரத் தொழில் விளைப்போமாயின், இந்த நல்ல நகரத்தினிடம் இராது வெளியே சென்றுவிடுவான் என்று சொன்னார்கள்;
(வி-ரை) வந்த அந்தணன் - நமது நகரத்திற்கு விருந்தினனாய் வந்த அதிதி என்பர் வடவர்; அரச ஆணை முறையில் வலிசெய்து போக்கல் முறையாகாதெனப் பின்னர்க் கூறுதற்குக் காரணங் கூறுவார் போன்று வந்த என்று தொடங்கினர். இது தங்கள் தீத்தொழிலினை மறைப்பதற்குச் சமணர் செய்யும் சூழ்ச்சிகளுள் ஒன்று.
வலிசெய்து போக்கும் சிந்தையன்றி - வலிந்து போக்கும் சிந்தை நமக்கு வேண்டாம்; இது தகுதியன்று என்பது; பின்னர்த் தாம் கூறும் யோசனையாகிய விஞ்சையின் கொள்கை உண்மையில் அதுவேயாம்; அன்றியும், பின்னர் அவர்கள் தீயினையே பொதிந்து விட்ட செய்தியாகிய புறநிகழ்ச்சியும் அதுவேயாம். இவற்றையும், தமது உள்ளுறையினையும் மறைக்கத் தமக்கு அச்சிந்தையில்லை என்றார்; இஃது மேலுமொரு சூழ்ச்சித் திறம்.
சிறு மறையோன் - மறைச் சிறுவன் என்னாது இவ்வாறு கூறியது இலேசுபடும் குறிப்புபடக் கூறுதல். இஃது மேலுமொரு சூழ்ச்சி; தாம் செய்வது சிறுகாரியம் என்று அரசன் எண்ணச் செய்யும் சூழ்ச்சியாம்.
வெந்தழற்பட விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால் - தழற்பட - தழல் போன்று காட்ட; இவ்வாறு விஞ்சை மந்திரத்தால் வரும தழல், அணிமையில் தீ மூள்வது போலவே காட்டுதலின்றிப் பெருங்கேடு விளைக்காது என்பது அத்தொழிலினர் கண்டது; விஞ்சை - வித்தை; உண்மையல்லாத தொன்றை உண்மை போலக் கருதவைக்கும் இந்திரசாலம். "மணிமாளிகை மேடை சதுரங்க சேனையுடனே, வந்ததோர் வாழ்வுமோ ரிந்திரசாலக் கோலம்"(தாயுமானார்). "இந்திர ஞாலம் போலவந் தருளி, யெவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத், தானே யாகிய தயாபர னெம்மிறை" என்று மணிவாசகப் பெருமான்(திருவா) இதனை விளக்கியருளினர்.
மந்திரத் தொழில் - மந்திரத்தின் மூலம் செய்யும் தொழில் - கையானன்றி மந்திர செபத்தினாற் செய்தல்; இவ்வாறு மூன்றாகக் கூறியதும் மேலுமோர் சூழ்ச்சித்திறமாம். என்னை; விஞ்சையாகிய மந்திரத்தின் தொழில் என்ற பொருளும் பிறிதோர் வழியால் விஞ்சையும், அது பயன் றராதாயின் மந்திரமும், அதுவும் பயன்படாதாயின் தொழிலும் என உம்மைத் தொகையாக்கி உரைக்க நின்ற பொருளும் படக் கூறியது காண்க; மேல்நிகழ்ச்சியும் காண்க.
வெந்தழற்பட...தொழில் - இவ்வாறாகிய மந்திர விஞ்சைத் தொழிலும் ஒன்று உண்டு. அதனை ஏவுதல் என வழங்குவர்; அது அவ்வுபாசனை கைவந்தோரது ஏவல் வழி நிற்கும் சிறு தெய்வங்களின் செயலா லாவது; இதனைச் "சென்றுநாம் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோம்"(தாண்) என்று அரசுகள் காட்டி அருளினர். கந்தபுராணத்தினுள் அக்கினிமுகாசுரன் இவ்வாறு தன்னகர்க் காளியினை வீரவாகு தேவர் மேல் ஏவி விடுத்த சரிதமும் காண்க; ஆனால் அவை முதல்வன் மாட்டும் அடியார் மாட்டும்செல்ல மாட்டாமையும் ஆண்டே கண்டு கொள்க; இதன் உண்மை 2596-ல் ஆசிரியர் காட்டுதலும் காண்க. வெந்தழற் பட - பட என்பது யாம் அத் தீக்காரணமாக வாதம் மூண்டு பட்டொழிய என்று பிற்சரித விளைவுக் கறிகுறியதாக அவர் வாக்கிலே போந்த திறமும் காண்க.
இந்த நன்னக ரிடத்திரான் ஏகும் - தமது சார்பு நற்சார்பு என்றும், சைவர் சார்பு அங்ஙனமல்லாத தொன்றாய் விலக்கப்படற் குரியது என்றும் குறிப்புப் பெற நன்னகர் என்றது மேலுமொரு சூழ்ச்சித்திறம். இரான் - இரானாகி; முற்றெச்சம். முற்றாகவே கொள்ளினு மிழுக்கில்லை.
மாநகரிடத்து - என்பதும் பாடம்.
இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.