பாடல் எண் :2587
"ஆவதொன் றிதுவே யாகி லதனையே விரைந்து செய்யப்
போவ"தென்றவரைப் போக்கிப் பொய்பொரு ளாகக்கொண்டான்
யாவது முரையா டாதே யெண்ணத்திற் கவலை யோடும்
பூவணை யமளி புக்கான்; பொங்கெழிற் றேவி சேர்ந்தாள்.
689
(இ-ள்) ஆவதொன்று...போக்கி - "செய்யலாவது ஒன்று இதுவேயானால் அதனையே விரைந்து செய்யப் போவீராக" என்று கூறி அவர்களைப் போகும்படி விடுத்து; பொய் பொருளாகக் கொண்டான் - பொய்யினைப் பொருள் என்று கொண்ட மன்னவன்; யாவதும்...புக்கான் - யாதும் யாவரிடமும் பேசாமல் மனத்தில் நிறைந்த கவலையினோடும் மலர்கள் பரப்பிய படுக்கையிற் சேர்ந்தனன்; பொங்கெழில் தேவி சேர்ந்தாள் - மிக்கெழுகின்ற எழிலையுடைய பாண்டிமா தேவியார் அங்குச் சேர்ந்தனர்.
(வி-ரை) ஆவது ஒன்று இதுவே ஆகில் - ஆவது - செய்யலாவது; செய்யத்தக்கது; ஒன்று - வேறு பலவன்றி ஒன்றேயாக; இதுவே யாகில் - இதுவேயன்றிப் பிறிதில்லையானால்; அரசன் கூறும் பொறுப்புவாய்ந்த நிலைகாண்க; விருந்தாக வந்தவனைப் போக்குதல் நீதிநுல் விலக்கு; அரசாங்க முறைக்கும் தவறு; குடியிருக்கும் மடத்தில் தீப்பட விளைத்தல் அரசாங்க முறைக்கும் தான் மேற்கொண்ட சமண சமய நுலுக்கும் விலக்கு; இவற்றையெல்லாம் உணர்ந்து அறிவினுட்கொண்ட அரசன் "செய்தக்க செய்யாமை யானுங் கெடும்"(குறள்) என்பது நீதியாதலின், அக்குறிப்பினை உட்கொண்டு செய்யலாவது ஒன்று என்றான்; ஒன்று - இது ஒன்று தவிர வேறொன்றுமில்லை யெனும்படி ஒரேவழி - என்பது குறிப்பு - இதுவே யாகில் - ஏகாரம் பிரிநிலை ; இதனை விட்டு வேறு வழியில்லையாயின்; முன்னரும் உற்ற செய் தொழில் என்ற குறிப்புக் காண்க.
அதனையே - ஏகாரம் தேற்றம்; ஆகில் அதனையே - அஃது ஆவதோ அன்றோ என முடிக்கும் பொறுப்புத் தன்னிடமாக மேற் கொள்ளாது அவ்வடிகளிடமே சார்த்தின அரச தந்திர முறையின் மேன்மை கருதுக.
போவது - போவீராக; போவது செய்க என்ற வியங்கோள் தொக்கு நின்றது; இதனுடன் தொலைந்து முடிவுற் கழுவேறிக் கழிந்து போவது என்ற குறிப்பும் காண்க.
போக்கி - மன்னனிடத்து அவர்களுக்கு இருந்த மேன்மை நிலை இதனுடன் கழிந்து போவதாயிற்று என்ற பிற்சரித விளைவுக் குறிப்புக் காண்க. உயர் நிலையேயன்றி இத்தொழில் முடிவில் மன்னனுரையினாலே இவர்களுயிரும் போவதாகும் என்ற குறிப்பும் காண்க.
பொய் பொருளாகக் கொண்டான் - பொருளல்லாத பொய்யினைப் பொருளாக உட்கொண்டவன்; "பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும் மருள்"(குறள்) பொய் பொருள் - பொருள் - மெய் என்று கொண்டு, ஒன்றினையே பொய்யும் மெய்யுமாம் என்ற சமணர் கொள்கையுடைய என்றலுமாம். அத்திநாத்தி - என்ற அவர்களது மந்திரம், உண்டுமாம் - இல்லையாம்; மெய்யும் பொய்யுமாம் என்ற குறிப்பினை உடையது.
யாவதும் உரையாடாதே எண்ணத்திற் கவலையோடும் - மனத்திற் கவலை மிக்கபோது பிறரிடம் பேச்சு நிகழாது; இது மனத் தத்துவ இயல்பு; கவலை - இஃது இன்னதென்பதனைப் பின்னர் 2589 - 2590 பாட்டுக்களில் அரசன் தன் வாக்கினாலே அறிவிக்கச் செய்யும் கவிநலமும் தகுதியும் காண்க.
பூவணை அமளி - பூவணை - அமளியிற் புதுப் பூக்கள் பரப்புதல் வழக்கு; பூ - மென்மை - அழகு என்றலுமாம். அமளி - படுக்கை. "போதா ரமளிக்கே" (திருவா - திருவெம்பாவை - 2).
பொங்கெழில் தேவி - பொங்கு - மேன்மேலும் மிகுகின்ற; பிள்ளையார் வரப் பெற்றமையால் குறைநீங்கி அரசனும் உய்தி பெற்றுச் சைவமோங்கு நிலை கைவரப் பெற்றோம் என்ற உன் மகிழ்ச்சியினால் புறப்பொலிவும் மிகுவதாயிற்று என்பது குறிப்பு.
தேவி - பாண்டிமா தேவியாராகிய(2592 - 2593) மங்கையர்க்கரசியார்.
அமளி - புக்கான்; தேவிசேர்ந்தாள் - என்றமையால் அஃது இரவுக்காலம் என்று குறிப்பித்த நயம் காண்க.
எழிற்றேவி சார்ந்தும் - உரையாடாதிருந்தான் எனக் கவலை மிகுதி உணர்த்தியது காண்க.
பொய்ம்மையைப் பொருளாக் கொண்டான் - புகுந்தனர் தேவியாரும் - என்பனவும் பாடங்கள்.