பாடல் எண் :2588
மன்வ னுரைப்ப தின்றி யிருக்கமா தேவி யார்தாம்
"என்னுயிர்க் குயிரா யுள்ள விறைவனீ யுற்ற தென்னோ?
முன்னுள மகிழ்ச்சி யின்றி முகம்புலர்ந் திருந்தா; யின்று
பன்னிய வுள்ளத் தெய்தும் பருவர லருள்செ" யென்றார்.
690
(இ-ள்) மன்னவன்....மாதேவியார் தாம் - அரசன் இவ்வாறு சொல்லாடாது இருத்தல் கண்டு மாதேவியார்; "என்னுயிர்க்குயிராயுள்ள... அருள் செய்" என்றார் - எனது உயிர்க்குயிராக உள்ள என் நாயகரே! நீர் என்னோவுற்றீர்?; முன் உள்ள மகிழ்ச்சியில்லாமல் முகம் வாடியிருந்தீர்; இன்று இவ்வாறு எண்ணமிடும் உமது உள்ளத்திலே பொருந்திய வருத்தத்தினை உரைத்தருளும்" என்று சொன்னார்.
(வி-ரை) உரைப்பதின்றி - சொல்லாடாது; வாய் பேசாமல்; உயிர்க்குயிராயுள்ள இறைவன் நீ - "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்"(குறள்); "கொண்டவட்குத் தெய்வங் கொழுநனே" முதலிய நீதிநூற் றுணிபுகள் காண்க; கொழுநன் பொருட்டே உலக வாழ்வைத் தாங்கி நிற்றலும், அவனுக்குக் கேடுவரின் வாழ்க்கை துறத்தலும் நமது நாட்டில் பண்டைப் பெரியோர் வகுத்தொழுகிய நல்ல முறை; பதுமகோமளை, சூரபதுமன் இறந்தானென்று கேட்டலும் உயிர்துறந்தனள்;கணவன் தம்மை மனைவி என்ற நிலையினை நீத்த தறிந்தவுடன் உடலின் தசை முதலியவற்றை உதறித் துறந்து நல்ல பேய் வடிவம் பெற்றனர் காரைக்காலம்மையார். இவை முதலிய இலக்கியங்கள் உணர்ந்து போற்றத்தக்கன; இங்கு இவ்வொழுக்கத்திற் தலைசிறந்து நின்ற மாதேவியார் கூறியது உபசாரமன்றி முழுதும் உண்மைமொழிகளேயாம்; இதுவே கற்பினது உயர்ந்த குறிக்கோளும் இலக்கணமுமாம்; உண்மையிவ் வாறாகவும் இங்குக் கணவனாகிய அரசன் சமணத்தில் இருப்ப அதற்கு மாறுபட்டு அவன் முன்பு புலப்படா வகை மனைவியாராகிய அரசியார் தாம் சைவத்திறத்தில் நின்றொழுகிப் பிள்ளையாரை வரவழைத்து விளைத்த செயல்கள் எல்லாம் "கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை" என்பனவாதி முன்னர்க்கூறியவற்றோடு முரணுவனவே? என்னின், முரணா; என்னை? சொல்லாவன எல்லா உயிர்க்கும் உயிராகி ஆன்ம நாயகராகிய இறைவன் பணித்த வேத சிவாகமங்களே! அவற்றின் வழி திறம்பாது நிற்றலே கற்பாம்; இங்கு மன்னன் மயக்க முற்றுத் திறம்பி நின்றபோது தாமும் அம்மயக்கத்திலே நிற்றல் கற்பாகாது இழுக்கேயாகும்; அவனை மயக்கந் தீர்த்து நன்னெறிப் படுத்தி ஆன்மலாபம் பெறச் செய்து "பெற்றிமையாலுட னென்றும் பிரியாத உலகெய்த" வழிதேடுதலே உயர்ந்த கற்புநெறியாம்; மன்னவனும் நாடும் நன்மை பெறவே தேவியார் முயன்றனராதலின் அஃது உயர்வாகிய கற்புநிலையேயாம். இக்கருத்துப்பற்றியே பிள்ளையாரை முதலில் வணங்கி வரவேற்றபோது அம்மையார் "பவளவாய் குழறி, யானு மென்பதியுஞ் செய்ததவ மென்கொல்" என்றார், என்றதும் கருதுக; இவைபற்றிக் காரைக்காலம்மையார் புராணத்தும், பிறாண்டும் உரைத்தவை யெல்லாமும் கருதுக. அன்றியும் கணவன் பித்துக்கொண்டு தற்கேடு சூழ்ந்தால் மனைவி அவன் வழியே யமையாது பித்தம் தீர்த்து உய்வித்தல் கற்பன்றோ?
என்னோ உற்றது - உற்றது - பொருந்திய தீமை; எவன் வினா வினைக்குறிப்பு; ஓகாரம் - அசை; என் - நோ - என்று பிரித்து நோய் என்? என்றலுமாம்.
முன் உளமகிழ்ச்சியின்றி முகம் புலர்ந்திருந்தாய் - முன் உள மகிழ்ச்சி - வழக்கம் போல் என்றுமுள்ள உள்ள மகிழ்ச்சி; இதனால் அரசன் - அரசியாரது இல்வாழ்க்கைத் திறம் அன்பினிறைந்ததாய் மிகு மகிழ்ச்சிக்கிருப்பிடமாய் இருந்த தென்பது புலப்படும்; சமய நிலையில் வேறுபட்ட அம்மையார் செயல்கள் எல்லாம் அரசன் மாட்டுக் கொண்ட அடிப்படையாகிய அன்பு காரணமாக எழுந்தனவே யாதலின் இந்நிலை கூடிற்றென்க. முன்கூறிய கற்பினியல்பு இதனாலாகியது.
உளம் மகிழ்ச்சியின்றி முகம் புலர்ந்து - முகவாட்டம் உண் மகிழ்ச்சின்மையைக் காட்டிற்று என்பதாம்.
பன்னிய - வருத்தப்படப் பலபலவும் எண்ணமிட்ட. பருவரல் - வருத்தம்.
அருள்செய் - இரக்கம்பட விண்ணப்பிக்கும் முறை.