பாடல் எண் :2595
இவர்நிலை யிதுவே யாக; விலங்குவேற் றென்ன னான
அவனிலை யதுவா; மந்நா ளருகர்தந் நிலையா தென்னில்
தவமறைந் தல்ல செய்வார் தங்கண்மந் திரந்தாற் செந்தீ
சிவநெறி வளர்க்க வந்தார் திருமடஞ் சேரச் செய்தார்;
697
(இ-ள்) இவர் நிலை இதுவே ஆக - இவர்களது நிலைமை இவ்வாறே யாகிநிற்க; இலங்கு....அதுவாம் - விளங்கும் வேலேந்திய பாண்டியனாகிய அவனிலை முன்கூறிய அதுவாம்; அந்நாள் - அற்றை நாளில்; அருகர்...என்னில் - அருகர்களின் நிலை யாதாம்? என்றால்; தவமறைந்து...சேரச் செய்தார் - தவவேடத்துள் மறைந்து நின்று, அல்லாத தீச்செயல்களைச் செய்வார்களாகிய அவர்கள் தங்களது மந்திரத்தினாலே, சிவநெறி வளர்க்கத்திருவவதரித்து வந்த பிள்ளையாரது திருமடத்திலே செந்தீயினைச் சேரும்படி செயல் செய்தனர்.
(வி-ரை) இப்பாட்டினால் அரசியார் அமைச்சனார் ஒரு திறமும், அரசன் ஒரு திறமும், அமணர் மற்றொரு திறமுமாக மூவேறு திறத்தவரது நிலைகள் மூவேறு திறம்பட நின்ற தன்மை கூறப்பட்டது; அவற்றுள், இவர் நிலையிதுவே - இவர் - அரசியாரும் அமைச்சனாரும்; நிலை இதுவை - இது - முன் 2592 - 2593 பாட்டுக்களில் உரைக்கப்பட்டது; இவர் - இது என்று அண்மைச் சுட்டினாற் கூறியது இது இறுதியாகக் கூறிய அணிமைபற்றி; இவர்களே நமக்கு அணியார் என்ற குறிப்புமாம். முதலிற் கூறிய குறிப்புமது;
இலங்குவேல் தென்னனான அவன்நிலை அதுவாம் - இவர்களுக்கு அடுத்து முன் கூறியது அவன் நிலையாதலின் அதனைஅடுத்துவைத் தோதினார். அவன் நிலைமுன் 2587 - 2590ல் உரைக்கப்பட்டது.
அருகர்தம் நிலை - அது அவன் நிலைக்கு முன் 2586ல் உரைக்கப்பட்டது; அதனை இங்குத் "தவம்மறைந்து அல்ல செய்வார்" என்றார்.
தங்கள்....செய்தார் - அவர்கள் தமது நிலையே பற்றி அதற்கேற்ற செயலும் செய்தனர் என்பார் செய்வார் - செய்தார் என முடித்தார்.
செந்தீ திருமடம் சேர என்க; சேரச் செய்தார் - "சேர்க" என்று மந்திரம் கணித்து ஏவினர்; சேர்தற் பொருட்டுத் தாம் குறித்த தொழில் - செயல் - செய்தனர். விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால் (2586).
தங்கண் மந்திரத்தால் - தீயை ஏவல் கொள்ளும் சிவ மகா மந்திரங்களும் உண்டு; ஆயின் இவர்கள் அவ்வாற்றானன்றித் தங்கள் சமய மந்திரத்தினையே நம்பி அதனையே கொண்டு செயல் செய்ததனால் தங்கள் மந்திரம் என்றார். "அமணர் கொளுவும் சுடர், பையவே சென்று பாண்டியற் காகவே" என்று ஏவிய மகா மந்திரச் சார்பினில்லாத தங்கள் மந்திரம் என்பதும் குறிப்பு; மேல் வரும் பாட்டில் "ஆதி மந்திர மஞ்செழுத் தோ துவார்"(2596) என்ற குறிப்புமிது.
சிவநெறி வளர்க்க வந்தார் - பிள்ளையார்; வந்தார் - திருவவதரித்தவர்; அங்கு அந்நாட்டிற்கு வந்தவர் என்ற வரலாற்றுக் குறிப்புமாம். வளர்க்க என்றதனால் சிவநெறி எந்நாளும் அழியாததாதலின் முன்னைப்போல் நிகழ்விக்க என்ற அளவில் பொருள் கொள்க.
தவம் மறைந்து அல்ல செய்வார் - தவம் என்ற மேற்போர்வையினுள் மறைந்து கொண்டு அல்லாதவற்றையே செய்கின்றவர்கள்; அல்ல - அற மல்லாதவற்றை - பாவச் செயல்களை; அகர வீற்று பலவறி சொல். செயப்படு பொருளில்வரும் இரண்டனுருபு தொக்கது. "கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம்"(1302) என்ற விடத்துரைத்தவை பார்க்க.