பாடல் எண் :2597
தளர்ந்த மற்றவர் தாஞ்செய்த தீத்தொழில் சரியக்,
கிளர்ந்த வச்சமுன் கெழுமிய கீழ்மையோர் கூடி
"விளங்கு நீண்முடி வேந்தனீ தறியினம் மேன்மை
புளங்கொ ளா;னமர் விருத்தியு மொழிக்கு" மென் றுணர்வார்,
699
(இ-ள்) தளர்ந்து...சரிய - மற்று அவர்கள் தாம் செய்த அத் தீத்தொழில் பயன்தராது வீழக்கண்டு மனந் தளர்ந்து; கிளர்ந்த....கூடி - எழுந்த அச்சமானது முன்னே மிகுந்ததனால் கீழ்மைத் தன்மையோர் களாகிய அந்த அமணர்கள் கூடி; விளங்கு....உணர்வார் - விளங்கும் நீண்ட முடி மன்னனாகிய பாண்டியன் இதனை அறிந்தானாயின் நமது மேம்பாட்டினில் இனி மனம் வைக்க மாட்டான்; நமது பிழைப்பு வழியினையும் ஒழித்து விடுவான்" என்று உணர்வாராகி,
(வி-ரை) சரியத் - தளர்ந்து என்க; தீத் தொழில் - தீய தொழில்; இரட்டுற மொழிதலால் தீயைச் சேரச் செய்த தொழில் என்றலுமாம் சரிதல் - பயன்தாரா தொழிதல்; சரிய - சரிய அதனைக் கண்டு;
விளங்கும் நீள்முடி வேந்தன் - இது காறும் நின்றது போலன்றி இனி விளக்கம் பெற நீளும் முடியினைச்சாரும் என்றது தொனிக் குறிப்பு. நீண்முடி விளங்கும் என்று கூட்டினுமாம்; நீளுதல் - நெல்வேலிச் செரு வென்று வாகை பூழியர் வேம்புடன் புனைந்தமையாலும், விளங்குதல் - "திருநீற்றி னெறிவிளங்க வுரைசெய் பெரும் புகழ்விளக்கி"ய திறனாலும் காணப்படும்(நின்றசீர் நெடுமாறர் புரா 7 - 8 - பார்க்க); புகழும் புண்ணியமும் பெருகும் நிலைக்குறிப்பு.
நம்மேன்மை உளம் கொளான் - நமது சமயம் மேன்மையுள்ள தென்று கருத மாட்டான். இதுவரை நாம் மேன்மையுடையோம் என்று உள்ளத்திற் கொண்டான். இனி அக்கருத்தினை உள்ளத்தில் வைக்காது அகற்றி விடுவான்; நம்மேன்மை - நம் சமயத்தில் உள்ளதாகக் கொண்ட மேன்மை; "இருதிறத் தீருந் தீரும்; கைதவம் பேசமாட்டேன்" (2647); "நீங்க டேறிய தெய்வத் தன்மை யென்னிடைத் தெரிப்பீர்"(2657); "வெந்தொழி லருகர் தோற்றீ ரென்னைவிட் டகல நீங்கும்" (2667); "வெப்புநோய் கவர்ந்தபோ தொன்றுமங் கொழித்திலீர்களென்னவா துமக்கு"(2674); "பொய்யினால் மெய்ம்மை யாக்கப் புகுந்தநீர் போமின்"(2690) என்பனவாதியாகப் பின் அரசன் கூறுவன காண்க. இதுவரை அரசன் இவர்களது மேன்மை உளங்கொண்டிருந்த நிலை 2580 - 2591 பாட்டுக்களின் நிகழ்ச்சியாற் கண்டு கொள்க.
நமர் விருத்தியும் ஒழிக்கும் - "மெய்வ கைத்திற மறிந்திடின் வேந்தனும் வெகுண்டு, சைவ னாகிநம் விருத்தியுந் தவிர்க்கும்"(1347) என்றிவ்வாறே உட்கொண்டு அரசுகளது சரிதத்தினுள் சமணர்கள் பல்லவ அரசன்பால் முறைப்பட்ட வஞ்ச நிகழ்ச்சியினையும் இங்கு நினைவு கூர்க. வேற்றுச் சமயத்தார் அரசர் சார்பினைப் பலதிறப்பட்ட சூழ்ச்சிகளாலும் பெற்று அதனால் தத்தம் சமய நிலைகளைப் பரவச் செய்தலும், அதுகொண்டு தாம் சீவனோபாயமும் பொருளும் தேடிக் கொள்ள வழிசெய்து கொள்ளுதலும், பற்பல காலங்களில் இத்தமிழ் நாட்டிலும், பிற நாட்டினும் இன்றுவரை நிகழ்ந்துவரக் காண்கின்ற உண்மை; பௌத்தர் ஈழநாட்டினும் பரவி அரசன் சார்பு கொண்டு பிழைத்துச் சைவ வாதம் செய்யத் தில்லைக்குவந்த வரலாறு திருவாதவூரர் சரிதத்துட் காணலாம்; ஈழ நாட்டின் இந்நாளிலும் அவர்களின் பரவுதல் காணவுள்ளது; இந் நாட்டிற் சமணம் புத்தம் இரண்டும் பரவித் தாம் தாம் பிழைப்புத் தேடி அதன் பொருட்டுச் சைவ விளக்கத்தைக் குறைத்து நிகழ்ந்தமை சமயாசாரியர்களின் வரலாறும் நாட்டுச்சரித நிகழ்ச்சிகளும் உண்மைப்படுத்தும்; கிறித்தவர், முகமதியர்,முதலிய புற நாட்டச் சமயங்களின பரப்புதல்களும் இன்று வரை நம் நாட்டில் இவ்வாறே நிகழ்தலும் காணவுள்ளன; ஒருவனைத் தாழ்த்தி மற்றவன் பிழைத்தல் என்றது உலகியல் நிலையிலேயன்றிச் சமய நிலையிலும் காண்பது ஆணவத்திற் கட்டுண்ட மனிதனின் இயல்பாய் நின்றது; பல வகையாலும் நிகழும் உலகியற் போர்களுக்கும் இதுவே உள்ளுறை என்க; இவ்வுண்மையினை உணர்ந்து ஒழுகினால் உலகம் கலகமின்றி நலம் பெற்று வாழ வழியுண்டாகும்; விருத்தி - சீவனோபாயம்; சீவிதம் - சர்வமானியம் என்பர். அமர்விருத்தி - அமர்த்திய - நியமித்த - தொழில் என்றலுமாம்.
உணர்வார் - உணர்வாராகி; உணர்தல் மனத்தில் துணிதல். உணர்வார் - புரிந்தனர் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.