கழும லப்பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத் தொழுது நின்றமண் குண்டர்செய் தீங்கினைச் சொன்ன பொழுது, "மாதவர் துயிலுமித் திருமடப் புறம்பு பழுது செய்வதோ! பாவிகா!!" ளெனப் பரிந்தருளி,
| 702 | (இ-ள்) கழுமலப்பதி...சொன்னபொழுது - சீகாழிப்பதியில் கவுணியர் குடியில் வந்த கற்பகக் கன்றாகிய பிள்ளையாரைத் தொழுது நின்று, அமணக் கீழ் மக்கள் செய்த தீங்கினைச் சொன்ன பொழுது; "மாதவர்....பாவிகாள்!" எனப்பரிந்தருளி - சிவனடியார்களாகிய மாதவர்கள் துயிலும் இந்தத் திருமடத்தின் புறப்பக்கத்தில் தீங்கு செய்வதோ! பாவிகளே" என்று பரிவு கொண்டருளி, (வி-ரை) கற்பகக் கன்று - கற்பகம் - வேண்டுவார் வேண்டுவதேயீயும் தெய்வத்தன்மையுடைய தொரு மரம் என்பர்; அஃதுபசாரம்; இறைவனே கற்பகமாவார்; "கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்"(தாண்); பிள்ளையாரைக் கற்பகக் கன்றென்றது அத்தன்மை பெற்றுடைய பிள்ளையாதலின் என்க. இங்கு, அமணர் - அரசன் - அம்மை - அமைச்சர் - அந்நாட்டு அன்பர் - அரனடியார் - முதலிய பல திறப்பட்டோருக்கும் அவரவர் வேண்டிய செய்திக் கேற்ற பயனை அருளும் செயலினுள் பிள்ளையார் புகுந்தருள்கின்ற அசவர மாதலின் இத்தன்மையாற் கூறினார். மாறுபாடு கொண்ட அமணர்க்கும் அரசனுக்கும் அவ்வவர் வேண்டியது ஈதல் யாங்ஙன மென்னில்? அமணர் தீமை வேண்டினராகத் தீமையின் பயனைப்பெற்று முடிவில் அரச தண்டனையினால் நிரய தண்டனையினின்றும் தப்பினர்; அரசன் அமணரின் தீமைக்கு உடன்பட்டு நின்றானாகத் தீய சுரம் பெற்றுத் திருநீற்றினால் நலமும் பெற்றனன் என்க. மாதவர்....பாவிகாள் - இத் தீீய செய்தி கேட்டவுடனே பிள்ளையாரது திருவுள்ளத்தில் முதலில் எழுந்த கருத்து அடியவர்பால் நேர்ந்த அபசாரம் பற்றியதே யாகும். அடியவர்பால் அபசாரப்பட்டது பெரும் பாவமாகும் என்பார், பாவிகாள் ! என்றார்; மாதவர் - சிவனடியார்; துயிலும் - துயில் கொள்ளும்போது இரவில் தீக்கொளுவினர் என்ற காலக் குறிப்பு; மக்கள் குடியிருப்பு இடத்தில் தீவைத்தல் இற்றை நாள் அரசாட்சிக் குற்ற நீதிச்சட்டத்திலும் பெருந்தண்டனைக் குள்ளாக்கும் பெருங்குற்றமாம் என்பர்; - (Arson). அதன்மேலும் மக்கள் துயிலும்போது வீட்டிற்குத் தீவைத்தல் மிகப் பெருங் குற்றமாம். அதன் மேலும் மாதவர் துயிலும்போது தீவைத்தல் அதனினும் பெருங் குற்றமும் பாவமுமாம் என்ற குறிப்பெல்லாம் படக் கூறியது காண்க. பாவிகள் - என்பதும் பாடம். பரிந்தருளி - பரிவு - இரக்கம்: இச்சமணர் அடியார்களிடம் அபசாரப்பட்டுப் பெருங் கொடு நரகத்துக்காளாகும் உய்தியில்லாத குற்றம் செய்தனரே என்று முதலில் அவர்கள் பால் இரங்கியருளினர் பிள்ளையார்; அருளி என்ற குறிப்புமது; அவ்வுயிர்கள் படுந் துன்பங்கண்டுழி இரங்கன் மாத்திரையே சீவன் முத்தர் பல்லுயிரனைத்தையு மொக்கப் பார்க்குந் தன்மையாம் என்று 12-ம் சூத்திரத்தினுள் ஞான நூல் பேசுதல் காண்க. இதன் தன்மை பற்றி மேல்வரும் பாட்டிற் "பின்னையும் அச்சம் முன்புறப் பின்பு முனிவுற"(2601) என்ற விடத் துரைப்பவையும் கருதுக. |
|
|