"என்பொ ருட்டவர் செய்ததீங் காயினு மிறையோன் அன்ப ருக்கெய்து மோ?"வென்று, பின்னையு மச்சம் முன்பு றப்பின்பு முனிவுற முத்தமிழ் விரகர் "மன்பு ரக்குமெய் முறைவழு" வெனமனங் கொண்டார | 703
| (இ-ள்) "என் பொருட்டு....எய்துமோ?" என்று - இது என் பொருட்டாக அவர்கள் செய்த தீங்கு ஆயினும், இறைவரது அடியார்களுக்குப் பொருந்துவதாகுமோ? என்று உட்கொண்டு; பின்னையும்...முனிவுற - மேலும் அச்சம் முன்னே வரப் பின்பு கோபமும் வர; முத்தமிழ்விரகர்....என மனங் கொண்டார் - முத்தமிழ் விரகராகிய பிள்ளையார் "அரசன் காவல் புரியும் நீதி முறை வழுவிற்று" என்று திருவுள்ளங் கொண்டாராய்; (வி-ரை) "என் பொருட்டு.....எய்துமோ?" என - இது சமணர்கள் செயலைப் பற்றிப் பிள்ளையார் மேலும் துணிந்தருளிய நிலையைக் கூறியபடி; "என் பொருட்டு அவர் செய்த தீங்காயினும்" - இத்தன்மையினை அமணர்கள் இவ்வடியார்களின் பொருட்டன்றி என்பொருட்டே செய்தனர் என்பதனை அறிவேன்; ஆதலின் அதனைப் பொருட் படுத்தாது அவர்களது அறியாமைக்கு இரங்கி விடுத்தலோ, தடுத்தலோ, தண்டம் செய்வித்தலோ இவை என்பாலதேயாம்; ஆயின் என்பாற் செய்த அபசாரத்தை நான் பொறுத்து விடினும் அடியார் பாற் செய்த அபசாரம் அவ்வாறு விடுத்தற்கு எய்துமோ? (பொருந்துமோ?); பொருந்தாது எனத் திருவுள்ளங் கொண்டனர் பிள்ளையார். பின்னையும் அச்சம் முன்பு உறப்பின்பு முனிவு உற - பின்னையும் - மேலும்; பரிவு கொண்டதன் மேலும் என்பதாம்; பரிவு கொண்டது அமணரின் பொருட்டு; அச்சங் கொண்டது அடியவர்களின் பொருட்டு? (அச்சம் - இது பற்றி மேற்பாட்டும் பதிகக் குறிப்பும் பார்க்க); பின்னையும் வந்தவை இரண்டு நிலைகள். அவை அச்சம் முனிவு என்பன. அவற்றுள் முன்பு வந்தது அச்சம்; பின்பு வந்தது முனிவு என்க; இவர்களால் ஏதப்படும் வகையில் அடியார் நின்றது பற்றியது அச்சம்; அடியவர்கள்பால் ஏதப்படுதலின் ஒறுத்துத் தூய்மைகள் செய்தலும், இனியும் அவர்கள் அவ்வாறு அபசாரப் படாமைக் காத்தலும் பற்றி முனிவு எழுந்தது; "தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் - தஞ்சொ லாற்றில் வந்திடா விடிலு றுத்தி வளாரினா லடித்துந் தீய, பந்தமு மிடுவ ரெல்லாம் பார்த்திடிற் பரிவே யாகும்; இந்த நீர் முறைமை யன்றோவீசனார் முனிவு மென்றும்" (சித்தி - 2 - 106). எனவே ஈண்டுப் பிள்ளையார் மேற்கொண்டது ஆணவக் குணமாகிய முனிவு அன்று எனவும், இறைமைக் குணமாகிய கருணையின் விளைவு எனவும் கண்டு கொள்க. முத்தமிழ் விரகர் - பிள்ளையாரது தமிழின் மூலம் கோபமும் பிரசாதமும் இனி வர வுள்ளமையால் இங்கு இத்தன்மையாற் கூறினார்; சுடர், பையவே சென்று பாண்டியற் காகவே" "வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக், கொப்ப ஞான சம்பந்த னுரை பத்தும்" என்ற பதிகக் குறிப்புக்கள் காண்க. மன்புரக்கு மெய் முறை வழுவென மனங்கொண்டார் - குடிகளுக்கும், தன்நாட்டில் வருவோர்க்கும், தன்னாலும் தன்பரிசனத்தாலும் கள்வர், பகைவர்களாலும் வேறுயிர்களாலும் வரக்கூடிய ஐந்து பயங்களையும் காத்து அறத்தைக் காவல் புரிவது அரசன் கடமை. இதன் தன்மை முன்(121) விளக்கப்பட்டது. ஈண்டு அமணரால் விளைந்த தீமைக்கு அரசனே பொறுப்பாளி என்பது அறநூலின் வழியும் துணியப்படும். மன் - அரசன்; புரக்கும் முறை - அரசன் நாடு காவல்புரியும் நீதிமுறை வழு - வழுவியதனால் விளைந்தது; மெய்ம்முறை - வெறும் மேற்பார்வைக்காக அன்றி உண்மையாகச் செலுத்தும் நீதி; "மாதவர் நோன்பும் மடவார் கற்புங் காவலன் காவலின்றித் தங்கா" என்பது (மணிமே); மூர்த்திநாயனார் புராணத்தினுள் வடுகக் கருநாடகர் மன்னன் சமண் சார்பினால் அடியாரை வன்மை செய்து பட்ட வரலாற்றின் பகுதிகளும், ஆளுடைய அரசுகளின் வரலாற்றுப் பகுதிகளும், தண்டியடிகள் வரலாறும், பிறவும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன. மன்புரக்கு மெய்முறை வழு - என மனங்கொண்டார் - ஈண்டு அமணர்களே இத்தீச்செயல் செய்தோர் என்றறிந்த பிள்ளையார் இத்தீங்குக்கு அமணர் முதற் காரணராயினும் அது வாராமற் காவல் புரியும் முறையில் அரசன் வழுவியது மேலும் துணைக் காரணமாம் என்று திருவுள்ளத்திற் துணிபு கொண்டனர்; இஃது அடியார் பால் செய்த அபசாரத்திற்குப் பொறுப்பு யாவர் என்று துணிந்தபடியாம்; பரிவும் அச்சமும் முனிவும் உற்ற நிலையில் ஏனை மக்கள் போலத் துளங்குதலின்றி நேர்மையில் மனம் வைத்துத் துணியும் பெரியோர் நிலையாம். இத்துணிபினால் இக்குற்றத்திற்காகச் செய்யப்படும் தண்டம் முதற்கண் அரசனையே சாரத் தக்கதென்பதை மேல்வரும் பாட்டிற் கூறுவார். மனங் கொள்ளுதல் - மனத்தினுள் ஆய்ந்து கொள்ளுதல்.
|
|
|