பாடல் எண் :2603
பாண்டிமா தேவியார் தமது பொற்பிற்,
பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும்,
ஆண்டகையார் குலச்சிறையா ரன்பி னாலு,
மரசன்பா லபராத முறுத லாலும்,
மீண்டுசிவ நெறியடையும் விதியினாலும்
வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறுடைய னாத லாலுந்
தீப்பிணியைப் "பையவே செல்க" வென்றார்.
705
(இ-ள்) பாண்டிமா தேவியார்....பாதுகாத்தும் - பாண்டிமா தேவியாரது அழகிய மிக்க நீண்ட திருமங்கல நாணைப் பாதுகாத்தல் வேண்டப் படுதலாலும்; ஆண்டகையார்.....அன்பினாலும் - ஆண்டகைமையுடைய குலச்சிறையாரது அன்பினாலும்; அரசன்பால்... உறுதலாலும் - அரசனிடம் அபராதம் சேர்ந்ததனாலும்; மீண்டு....ஆதலாலும் - மீண்டும் சிவநெறியினை அடையும் விதியிருத்தலாலும், வெப்பு நோய் தீரும்படி அரசனது மேனியைத் தீண்டித் திருவெண்ணீற்றைச் சீகாழி மன்னர் இடும் பேறு அரசன் உடைமையாலும்; தீ.....என்றார் - தீப்பிணியைப் "பையவே செல்க" என்று பணித்தனர்.
(வி-ரை) தீப்பிணியை....என்றார் - "பையவே சென்று" என்ற பதிகத்துக்குக் காரணம் விரித்துக் கூறியது இப்பாட்டு;
பாண்டிமா தேவியார்....பாதுகாத்தும் - அம்மையாரது திருமங்கலநாண் பாதுகாவல் பெறவேண்டி யிருத்தலின் அதன் பொருட்டு அரசனைத் தீயால் அழிவுபடாது காத்தல் வேண்டப்பட்ட தென்பதாம்; "யானுமென் பதியுஞ் செய்த தவம்"(2570) என்றது காண்க.
ஆண்டகையார்.....அன்பினாலும் - குலச்சிறையார் அரசன்பாற் கொண்ட அன்பு நீடித்தல் ஒரு காரணம். "நற்றமிழ் வேந்தனு முய்ந்து, வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கு மேன்மையும் படைத்தனம்" (2557) என்றதனால் அவரன்பு தேற்றமாதல் காண்க.
அரசன்பால் அபராதம் உறுதலாலும் - அம்மையார்க்கும் அமைச்சனார்க்கும் அருளுதல் வேண்டப்படின் அரசனைத் தீப்பிணி வாராது வாளா விடுத்திருக்கலாமே? எனின், அற்றன்று; அரசனிடம் வந்த சிவாபராதத்திற்குக் கழுவாய் செய்து தூயனாக்க வேண்டிய கடப்பாடு பற்றி இவ்வாறருளினார் என்பதாம். மீண்டு.....ஆதலாலும் - இவையிரண்டும் தொடர்புடைமை பற்றி ஒரு காரணமாகக் கொள்ளப்பட்டன; மீண்டு சிவநெறி யடைதல் விதி - இறைவர் நியதி - என்பதும், அதற்கு வாயிலாகிய சாதனம் அவன்தனது முன்னைத் தவத்தால் பெற்றுடையன் என்பதுமாம்; "என்பதியும் செய்த தவமென்கொல்"(2570) என்று அம்மையார் கூறியருளியது காண்க. புகலி வேந்தர் தீண்டி வெண்ணீறு இட என்க; பேறு முன்னைத்தவம். இடுதல் - பூசுதல்.
தீப்பிணியை - தீயாகிய பிணிப்பினை; ஈண்டுப் பிணி என்றது கட்டி வீழ்த்தும் வினை என்ற பொருள்பட நின்றது. பிணித்தல் - கட்டுதல் தமது அருளால் தீயின் உருவாய் வரும் பிணி - நோய் - என்றலுமாம்.
குறிப்பு - வரலாறு கருதலில் முன்னும் மேலும் தொடர்ந்து செல்லும் கலிநிலைத்துறைச் சந்த யாப்பினிடையில் இப்பாட்டுத் தனித்து எண்சீர் விருத்தமாகப் புகுந்து நிற்கின்றதனாலும், ஆசிரியரது சிறந்த பொருட்செறிவும் சொற்பண்பும் இன்மையாலும், பாதுகாத்தும், அன்பினாலும், உறுதலாலும், விதியினாலும், ஆதலாலும் எனவரும் முடிபுகள் பொருந்தாமையாலும், குலச்சிறையார் அன்பினால் என்றது பொருந்தாமை யாலும், தீயைச் செல்க என்றதன்றிப் பிணியைச் செல்க என்பது பதிகத்துச் சொல்லும் கருத்து மன்றாதலாலும், "புத்தரொ டமணை வாதி லழிவிக்கு மண்ண றிருநீறு செம்மை திடமே" (தேவா) என முன்னர் அருளியமையாலும், "வெண்ணீறு வேந்தனையு மிடுவித்து" (2512) என்று தொண்டர்கள் செய்த விண்ணப்பத்தின்படி ஆக என்று முன்னரே "அருள் புரிந்த"ன(2513) ராதலால் இப்பாட்டு வேண்டப்படாமையாலும், இஃதன்றியே வரலாறு இடையீடின்றித் தொடர்ந்து செல்வதாலும், பிறவாற்றாலும் இப்பாட்டுப் பிற்காலத்துப் புலவரால் நேர்ந்த இடைச் செருகலோ? என்பது எனது பணிவாகிய ஐயப்பாடு; அன்பர்கள் கூர்ந்து நோக்கித் தெளிந்து கொள்வார்களாக. 1