செய்ய மேனியர் திருமக னாருறை மடத்தில் நையு முள்ளத்த ராயமண் கையர்தர நணுகிக் கையி னாலெரி யிடவுடன் படுமெல்லி கரப்ப வெய்ய வன்குண கடலிடை யெழுந்தனன் மீது. | 707
| (இ-ள்) செய்ய....மடத்தில் - சிவந்த திருமேனியினையுடைய இறைவருடைய திருமகனாராகிய பிள்ளையார் எழுந்தருளிய திருமடத்தில்; நையும்...எரியிட - கவலையினால் வாடும் உள்ளத்தையுடையவர்களாக அமணராகிய கீழ்மக்கள் பக்கத்தில் வந்து கையினால் கொண்டுபோய்த் தீக்கொளுவ; உடன்படும் எல்லி கரப்ப - உடனிருந்து சம்மதித்த இராப்போது மறைய; வெய்யவன்...மீது - சூரியன் கீழ்கடலின்மீது வந்து எழுந்தனன். (வி-ரை) செய்ய மேனியர் - "எரிபோன் மேனிப்பிரான் றிறம்" (தேவா). "செய்யனே" என்ற பதிகக் குறிப்புப்பட நின்றது. திருமகனார் - அத்தனே, ஐயனே, அப்பன், என்ற பதிகக்குறிப்புக் காண்க; மகனார் - பாலூட்டியதனால் மகன்மை முறைமை கொண்டவர். இதுபற்றி முன் உரைத்தவை பார்க்க. நையும் உள்ளம் - நைதல் - கவலையினால் இது கைகூடுமோ என்று வருந்துதல்; நணுகிக் கையினால் எரியிட - விஞ்சை மந்திரத்தொழில் செய்த இடத்தினின்றும் பிள்ளையாரது திருமடத்தை அணுகி; மந்திரத் தொழில் வாய்த்திலதாயினமையாற் கையினாலே எரிகொண்டு கொளுவினர் என்ற சரிதக் கருத்து. உடன்படும் எல்லி - எல்லி - இராப்பொழுது; உடன்படும் - தற்குறிப்பேற்ற அணி; கரப்ப என்றதும் அது; தீவினை செய்தலைக் கவனித்தும் உடன் வாளாவிருந்த மையால் உடன்படும் என்றார். வெய்யவன் - எழுந்தனன் - குற்றஞ்செய்த அரசனை வெதுப்ப உள்ளவனாதலின் வெய்யவன் என்றார். மீது எழுந்தனன் - விண்ணின்மீது எழுந்தான்; இதுவும் தற்குறிப்பேற்றம். கடலிடை - இடையினின்றும் . இப்பாட்டினால் சமணர் எரிகொளுவிய இரவு போய்ப் பகல் வந்தமை கூறப்பட்டது. அம்மையார் கருத்துமுற்றி மேலெழுதல் குறிப்பு என மேல்வரும் பாட்டுக் காண்க.
|
|
|