பாடல் எண் :2607
பெருகு மச்சமோ டாருயிர் பதைப்பவர் பின்பு
திரும டப்புற மருங்குதீ தின்மையிற் றெளிந்து
"கருமு ருட்டமண் கையர்செய் தீங்கிது கடைக்கால்
வருவ தெப்படி யா?"மென மனங்கொளும் பொழுது,
709
(இ-ள்.) பெருகும்....பதைப்பவர் - மேன் மேற் பெருகுகின்ற அச்சத்துடனே அரிய தமதுயிர் பதைக்கும் அவ்விருவரும்; பின்பு......தெளிந்து - அதன்பின், திருமடத்தின் புறப்பக்கத்திலும் தீங்கு இல்லாமை கேட்டதனால் தெளிந்து; "கருமுருட்டு....எப்படியாம்?" என மனங் கொளும் பொழுது - "கரிய முருட்டு உடலுடைய சமணக் கீழ்மக்கள் செய்த இந்தத்தீங்கு இதன் வழித்தாய் விளைவது எவ்வாறாகுமோ?" என்று மனத்தில் எண்ணமிட்ட போது;
(வி-ரை.) பெருகும் அச்சமோடு ஆருயிர் பதைப்பவர் - அச்சம் பெருகுதல் - அமணர் செய்த தீங்கினைக் கேட்டார்களன்றி அது உடன் பிள்ளையார் திருவார்த்தை கேட்டாரலர்; சிதைக்கப் பட்டதனையும் தீதின்மையனையும் கேட்டலும் முலை சுரந்த தலையன்பின் நிலையுடையவர் அம்மையாராதலின் இங்குத்தீங்கு கேட்டவுடன் அச்சம் பெருக உயிர் பதைத்தனர்; பிள்ளையார் திருமறைக்காடு சேர்ந்த நன்னிலை - கேட்ட அப்பொழுதே - சேட்படு புலத்தாரேனும் சென்றபடி பணிந்தார் ஒத்தாராயினர் அம்மையாரும் அமைச்சனாரும் (2502 - 2504) என்றது காண்க. "நாம் மாய்வதே" எனும் துணிவு கொண்டாராதலின் அதன்படியே உயிர்பதைத்தனர். அடுத்தார்க்குத் தீயவை நேரக் கேட்டபோது உயிர் போகும் நிலை வருதல் தலையன்பின்றிறம் என்க.
பின்பு.....தெளிந்து - உயிர் பதைக்கு நிலை வந்த பின்னர்த் தீதில்லாத செய்தியைக் கேட்டனர்; அதனால் பதைப்பு நீங்கித் தெளிந்தனர். திருமடத்தில் அமணர் தீத்தொழில் செய்து விட்டனர்; ஆனால் தீதில்லை எனக் கேட்ட செய்தியில் முற்பகுதி கேட்டவுடன் உயிர் பதைத்தலும், உடன் பிற்பகுதி கேட்டலும் தெளிதலும் நிகழ்ந்தன. ஒரு கணத்தில் முற்பகுதியில் ஒன்றும், பிற்பகுதியில் மற்று ஒன்றுமாக நிகழ்ந்த இருவேறு மன நிகழ்ச்சிகளை இவ்வாறு பாகுபடுத்தி அறிவித்த தெய்வக் கவிநலம் காண்க. (றி இவ்விரண்டும் காலத்தால் இடையீடு பெறாமல் நிகழ்ந்ததனைப், பதைப்பவர் - பதைப்பவராய் (எதிர்கால முற்று எச்சப்பொருளில் வந்தது) தெளிந்து என்றதுடன் கூட்டி முடிக்க வைத்த கவிநலமும் காண்க.
திருமடப்புற மருங்கு - "திருமடப்புறத்தயல்" (2598); திருமடப் புறச்சுற்று; (2599); புறச்சமயிகள் புறத்தின் மருங்கன்றி அணுகலார் என்ற குறிப்பினைக் காட்டிச் செல்லும் கவிநலம் காண்க.
தீதின்மை - தீத்தொழிலால் தீமை விளையாமை; தீதின்மை கேட்டலால் என்க.
கடைக்கால் வருவ தெப்படியாம்? - கடைக்கால் - ஒரு விடயத்தைத் தொடங்கும் நிலை - கட்டிடத்துக்கு அகல நீள உயர முதலியவை அமையும், இங்கு அமணர் தீத்தொழிலில் அடி நிலை தொடங்கினார் களாதலின் அதன்மேல் கிளம்பும் பயன்களும் தீத்தொழில் அடி நிலை தொடங்கினார்களாதலின் அதன்மேல் கிளம்பும் பயன்களும் அதனை ஒட்டியே நிகழும்; அஃது எவ்வண்ணமோ என்றார்; கடைக்கால் - முடியும் வேளை என்பாரு முண்டு; அது பொருந்தாமையறிக.
மனங் கொள்ளுதல் - எண்ணமிடுதல். எண்ணமிடலாவது தீத்தொழில் கேட்டலும் உயிர் பதைத்தனர்; தீதின்மை கேட்டு அது தெளிந்தனர்: பின்னர்த் தீத்தொழில் அப்போது தீமை செய்யா தொழியினும், எக்கருமமும் பயன் தந்தே விடுமாதலின், பின்னர் என்ன பயனைத் தரும்படி எப்படி வந்து முடியுமோ என்றிவ்வாறு எண்ணுதல்.