பாடல் எண் :2608
ழுஅரச னுக்குவெப் படுத்த"தென் றருகுகஞ் சுகிகள்
உரைசெ யப்பதைத் தொருதனித் தேவியார் புகுத
விரைவு மச்சமு மேற்கொளக் குலச்சிறை யாரும்
வரைசெய் பொற்புய மன்னவன் மருங்குவந் தணைந்தார்.
710
(இ-ள்.) "அரசனுக்கு வெப்பு அடுத்தது" என்று......பதைத்து - "அரசனுக்கு வெப்புநோய் மேவிற்று" என்று மெய் காவலராய் அருகில் உள்ள கஞ்சுகி மாக்கள் கூறப் பதைபதைத்து; ஒரு...புகுத - ஒப்பற்ற பெருந்தேவியார் (அரசனதுறையுளில்) புகுத; விரைவும்.....வந்து அணைந்தார் - விரைந்த செலவும் பயமும் பொருந்தக் குலச்சிறையாரும் மலை போன்ற அழகிய புயங்களையுடைய அரசன் பக்கத்தில் வந்து அணைந்தனர்.
(வி-ரை.) வெப்பு - வெப்பு நோய்; வெப்பு - என்ற பண்பு அதனையுடைய நோய்க்கு வந்தது பண்பாகு பெயர்; அடுத்தது - வந்து நேர்ந்தது; செய்வோர் செயலுக்குத் தக்கதே அடுக்குமாதலின் அவ்வாறு அடுத்தது என்ற குறிப்பும் காண்க.
அருகு கஞ்சுகிகள் - அரசனருகில் எப்போதும் இருந்து காவலும் ஏவலும் உரிய மாக்கள்; கஞ்சுகிகள் - சட்டையணிந்த சேவகர்; இந்நாளில் அரசாங்க உயர் நிலைகளில் ஆணையாளர் பக்கம் அதற்கென்று குறித்த அடையாளங்களை யுடைய சட்டைகளை அணிந்த காப்பாளர் - தூதுவர் - இருந்தல் காண்க. இங்குக் குறித்தவர்கள் அரசன் பக்கம் இருக்கும் காவல் மாக்கள்; அருகு - பக்கம். அருகு - வெம்மையால் அருகிய என்றுரை கொள்வாருமுளர்; அது பொருந்தாமையறிக. கஞ்சுகம் - மெய்யுறை. கஞ்சுகி - மெய்க்காப்பாளர்.
உரை செய - தேவியாரிடமும், அமைச்சரிடமும் சொல்ல.
பதைத்து ஒருதனித் தேவியார் புகுத - பதைத்து - தமது நாயகருக்கு வெப்பு வந்தமையால் அவருடன் பாதியாக எண்ணப்படும் நாயகியாருக்குப் பதைப்பு உற்றது; ஒரு தனி தேவி என்ற குறிப்புமிது; புகுத - அரசன் இருந்த உறையுளில் புகுத.
விரைவும் அச்சமும் - தீர்வு தேடுதலில் விரைவும், சிவாபராத மாதலின் தீர்வு எவ்வாறு நேருமோ என்ற ஐயப்பாட்டினால் அச்சமும் உண்டாயின.
இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.