பாடல் எண் :2617
இருதிறத் தவரு மன்ன னெதிர்பணிந்" திந்த வெப்பு
வருதிறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய வனுசித மதனால் வந்து
பெருகிய; திதற்குத் தீர்வு பிள்ளையா ரருளே" யென்று,
719
(இ-ள்.) இரு திறத்தவரும்....எதிர் பணிந்து - இரண்டு திறமுடையவர்களும் அரசனெதிரிற் பணிந்து; இந்த வெப்பு...பெருகியது - இந்த வெப்பு நோய் வரும் திறமாவது சீகாழிப் பதியில் வந்த வள்ளலாராகிய பிள்ளையார் மதுரையின்கண் வந்து பொருந்த அது கண்டு அமணர்கள் செய்த தீமையாகிய அநுசிதச் செயலால் விளைந்து பெருகியது; இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே என்று - இதற்குத் தீர்வு செய்ய வல்லது பிள்ளையாரது அருளேயாம் என்று எடுத்துக் கூறி,
(வி-ரை.) இருதிறத்தவர் - இத்திறத்தில் நின்ற இருவரும்; அம்மையாரும் அமைச்சனாரும்;
மன்னனெதிர் - மன்னவன் முன்பு - மன்னவன் கருத்தொழிந்து உரை மறந்து கிடந்தனனாதலின் (2611) மன்னவனைப் பணிந்து என்னாது எதிர் என்றார். ஆயின் பணிதல் எற்றுக்கெனின் மரபுபற்றி என்க; அற்றேல் அஃதாக; கருத்தொழிந்து கிடந்தவன்பால் அறிவுறுத்தல் எவ்வாறு நிகழுமெனின், அது மேல்வரும் (2619) பாட்டில் கூறுவது காண்க.
இருதிறத்தவர் - அம்மையார் சைவத்திறம் பற்றியேயன்றிக், கணவன் என்ற தன்மையானும் ஈண்டு ஆவன செய்தற் கடப்பாடுடையராதலின், சைவத் திறமும் அமைச்சுரிமையும் பூண்ட அமைச்சரினும் திறமுடையார் என்று குறிக்க, இருவர் என்னாது இருதிறத்தவர் என்றார்.
"இந்த வெப்பு......அருளே" என்றதும் மேல் "காயமும்....தீரும்" என்பதும் இருதிறத்தவரும் மன்னனுக்கு உரைத்தவை.
வருதிறம் - வந்து புகுந்த விதம்; அதனால் வந்து - அது காரணமாக - அதன் மூலமாக - விளைந்தது; இது நோயின் மூலமாம்; பெருகுதல் - மூளுதல்; பெருகிய தன்மைகள் முன் (2609 - 2610 - 2611) பாட்டுக்களில் உரைக்கப்பட்டன.
வள்ளலார் - வள்ளற்றன்மை. பாண்டி நாட்டவர்க்கருளும் பொருட்டுத் தாமே மதுரை நண்ணியருளியமையாலும், அமணர்கள் தீக்கொளுவிய போதும் செம்மையிற்றிறம்பி வேறு முனிவு கொள்ளாது, அரசனையும் நாட்டவரையும் ஆட்கொண்டு திருத்தியருளும் கருணையே திருவுள்ளமே கொண்டு "பையவே சென்று....ஆகவே" என்று ஆசி புரிந்தமையாலும், மேல்வருவனவற்றாலும் உணரப்படுதலை உட்கொண்டு கூறியது.
மதுரை நண்ண - ஆலவாயின் முதற் பெயர்; "மதுரைத் தொன்னகர் வந்தணைகின்றார்" (2528) என்றதனைத் தொடர்ந்து கூறியவாறு காண்க. "மதுரையின் புறத்து" (2544); "மதுரை தோன்றுதலும்" (2559); மதுரை என்ற பெயர் போந்த வரலாற்றில் அறியப்படுமாறு போல இங்குப் பிள்ளையாரால் புனிதமாக்கப்படும் நகரமாம் என்ற குறிப்பு;
தீய அநுசிதம் அதனால் - தீமையை வாக்கினாலும் சொல்லாகா தென்ற மரபு பற்றித் கூறியது; தீய - தீயை உட்கொண்ட என்ற குறிப்பும் காண்க.
இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே - முன்னர் இதன் கொடுமை என்றதனால் நோயினையும்; தீய அநுசிதம் என்றதனால் நோய் மூலத்தையும், கூறியவாறே, தீர்வு என்றதனால் "அது தணிக்கும் வா" யினையறிவித்தபடி; "வாய்ப்பச் செயல்" என்றதனை வரும் பாட்டுக்களிற் கூறுதல் காண்க. "நோய்நாடி நோய்முத னாடியது தீர்க்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" (குறள்); என்று - என்று சொல்லி; என்று - என்றார் எனமேல்வரும் பாட்டுடன் முடிக்க.
அருகர்கள் - எதிர்பணிந் தெய்த - இரவு செய்த அனுசிதம் - என்பனவும் பாடம்.