பாடல் எண் :2618
"காயமு மனமு மாசு கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமு மிந்த நோயை வளர்ப்பதே! வளர்வெண் டிங்கண்
மேயவே ணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கிற்
றீயவிப் பிணியே யன்றிப் பிறவியுந் தீரு" மென்றார்.
720
(இ-ள்.) காயமும்....வளர்ப்பதே - உடம்பிலும் மனத்தினும் பொருந்திய மாசு கழுவாத சமணர்கள் இனிச் செய்யும் மாயத்திறங்களும் இந்த நோயினை வளர்ப்பதேயன்றிக் குறைத்தல் செய்யா; வளர்வெண் திங்கள்....தீரும் என்றார் - வளரும் வெண்மதி பொருந்திய சடையினையுடைய இறைவர்பால் ஞானம்பெற்ற அப்பிள்ளையார் விரும்பி நோக்கினாராகில் தீய இந்தப் பிணியேயன்றிப் பிறவி நோயும் தீரும் என்று சொன்னார்கள்.
(வி-ரை.) காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் - அமணர்: காயம் கழுவாமை பிராணிகள் சாம் என்று உடல் குளியாதிருக்கும் சமணரது வழக்குக் குறித்தது; "கழுவாவுடலம்" (ஆளு - பிள் - திருவந் - 28); மனமாசு கழுவாமை - மனம் தூய்மை செய்யாது வஞ்சனை நிறைதல். செய்யும் மாயம் - தாம் செய்த வஞ்சத் தீச்செயலினையும், அதனால் இது விளைந்த தென்றதனையும் வெளிப்படுத்தாது ஒன்று மறியாதார் போன்று நடித்து நோய் தீர்க்க முயலும் வஞ்சம்; மாயம் - பாசாங்கு - மறைவு - என்ற பொருளில் வந்தது.
வளர்ப்பதே - தணிப்பதன்றி வளர்ப்பதனையே செய்யும்; ஏகாரம் பிரிநிலை செய்யும் (ஆகும்) என்பதும் தொக்கு நின்றது.
வளர் வெண்திங்கள் மேயவேணியர்பால் ஞானம் பெற்றவர் - இறந்துபட நின்ற மதியினை வளர்வித்த இறைவன்பால் பெற்ற ஞானம் ஆதலின் அந்நிலையினின்ற அரசனையும் உய்விக்க வல்லது என்பது குறிப்பு; பால்ஞானம் - பாலின் வழிபெற்ற என்ற சரிதக் குறிப்பும் தர நின்றது.
விரும்பி நோக்கப்....பிணிதீரும் - விரும்பி நோக்க - "இருநோக் கிவளுண்கனுள்ள தொருநோக்கு, நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" (குறள்) என்புழிப் போலக் கொள்க; பாண்டியற்காகவே என்ற மறக்கருணை நோக்கால் வந்த நோய், விரும்பி நோக்கும் அறக்கருணை நோக்கினால் தீரும் என்பது;
விரும்பி நோக்கிற் - பிறவியும் தீரும் என்றது பார்த்த பார்வையால் மலநீக்கம் செய்து முத்தி சாதனம் தரும் பரமசாரியராதல் குறிக்கப்பட்டது; "சிரபுரத் தலைவர் தீண்டி - நீறு பூசப்பெற்று - முதல்வனையறியுந் தன்மை, துன்னினான் வினைக ளொத்துத் துலையென நிற்ற லாலே" (2717) என்றும், "மீனவற் குயிரை நல்கி மெய்ந்நெறி காட்டி" (2757) என்றும் வரும் தீக்கைமுறைக் குறிப்புக்கள் காண்க. "மன்றபாண்டியன் கேட்பக் கிளக்கு மெய்ஞ்ஞானம்" (இருபா - 2) என்ற ஞானசாத்திரமும் காண்க.
பிறவியும் தீரும் - தீராத பிறவியும் என உம்மை சிறப்பும்மை; எச்சவும்மையுமாம். மேல் தீக்கையின் விளைவாகிய சரிதக் குறிப்பும் காண்க.
விரைந்து நோக்க - என்பதும் பாடம்.
இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.