மீனவன் செவியி னூடு மெய்யுணர் வளிப்போர் கூற ஞானசம் பந்த ரென்னு நாமமந் திரமுஞ் செல்ல, ஆனபோ தயர்வு தன்னை யகன்றிட, வமண ராகும் மானமில் லவரைப் பார்த்து மாற்றமொன் றுரைக்க லுற்றான்; | 721
| (இ-ள்.) மீனவன்...கூற - பாண்டியனது காதிலே மெய்யுணர்வு அளிப்பவர்களாகிய அம்மையாரும் அமைச்சனாரும் முன் கூறியவாறு சொல்ல; ஞான சம்பந்தர் என்று...செல்ல - அதனுள் திருஞானசம்பந்தர் என்னும் திருப்பெயராகிய திருமந்திரமும் உடன் செல்ல; ஆன....அகன்றிட - அப்போது அயர்ச்சி தன்னை நீங்குதலால்; அமணராகும்...உரைக்கலுற்றான் - அமணர்கள் என்னும் மானமில்லாத மாக்களைப் பார்த்து ஒருசெய்தி சொல்லலாயினன்; (வி-ரை.) செவியினூடு கூற - கருத்தொழிந்து உரை மறந்து கிடந்த நிலைமையிலிருந்தானாதலின் அவனது செவியின் பக்கத்துச் சென்று பொருந்தும் படி கூற வேண்டியதாயிற்று; இது ஆசாரியன் மந்திரோபதேசம் செய்யு முறையுமாம் என்பது ஆகமவிதிகளானுணரப்படும்; இக்குறிப்புப் பற்றியே மேல் "நாமமந்திரமுஞ் செல்ல" என்றார்; "அஞ்செழுத்தி னாமத்தான் காண்" (தேவா) என்றபடி திருவைந் தெழுத்தும் இறைவன் றிருநாமமேயாம்; மெய் உணர்வளிப்போர் - அம்மையாரும் அமைச்சனாரும். இதுவரையும் அரசன் செவியுறக் கூறிய ஏனையோர் அன்னரல்லாது தீயுணர்வே புகட்டி அவனைத் தீ நெறிக்கட் செலுத்தினர் என்பது குறிப்பு. ஞான சம்பந்தர் என்னும் நாமமந்திரம் - ஞான சம்பந்தர் - என்பது ஒன்று நீக்க ஐந்தெழுத்தே யாதலின் மந்திரம் எனப்பட்டது; நாவுக்கரசு என்றதும் இவ்வாறே அப்பூதியாரை உய்வித்த நாம மந்திரமாயினமையும் காண்க; "தான் செய்யுந் தன்மைகளு, மாக்கியிடு மன்பர்க் கரன்" (களிற்றுப்படி); மந்திரம் - நினைப்போனைக் காப்பது என்பது பொருள்; அத்தொழிலைச் செய்யும் சொல்லுக்கு ஆகு பெயராய் வந்தது; இங்கு இத் திருநாமம் மந்திரமே யான தன்மை, "கருத்தொ ழிந்துரை மறந்து" (2611)கிடந்த அரசன் இம் மந்திரம் செவிவாயாக உட்புகுதலும் (ஆனபோது) அயர்வு தன்னை யகன்று, மேல், உண்மை நெறி நிற்கத்தலைப்பட்டு உரைக்கத் தொடங்குகின்ற தனாலறியப்படும். மந்திரமும் செல்ல - உம்மை - முன் (2618)ல் கூறிய செய்தி சொல்லியதனோடு மந்திரமும் உட்செல்ல என்று இறந்தது தழுவிய எச்சவும்மை. செல்ல - அச்செய்திகூறிய வாக்கியத்தினுடனே மந்திரமும் உட்புக என்க. சொல்ல - என்பது பாடமாயின் அதற்குத்தக உரைத்துக் கொள்க. ஆனபோது அகன்றிட - அப்போதே அயர்ச்சி நீங்கிட; மந்திரசத்தி தொழிற்பட்டவுடன் பயன் தந்த விரைவு குறித்தது; போது - தேற்றேகாரம் தொக்கது; மின்சார வேகம் (Elctrict Spee) என்பது முதலாகத் தாமறியளவையில் சடசத்தியின் வேகம் பற்றி வழங்குவர் நவீனர்; ஆனால் இது சிவசிற்சத்தியின் றொழிற்பாடாதலின் நினைவின் மாத்திரையின் பயன் விளைப்பதாம். அகன்றிட - அகன்றிடலான்; கருத்தொழிந் துரைமறந்த நிலையில் நோய் முற்றிக் கிடந்த அரசன், நோய் நீங்காத நிலையிலிருந்தேயும் கருதவும் உரைக்கவும் வல்லனாயினதன் காரணங் கூறியபடி. மான மில்லவர் - அமணர்; வஞ்சனையும் பொய்யும் நிறைந்தும் அது புறத்துத் தோன்றாவகை கரந்து ஒழுகுதலும், தமது செயல் பயன்றராமை கண்டும் திருந்தாது மேலும் அவ்வாறே செயல் செய்தலும் முதலாயின உடையவர். மாற்றம் ஒன்று - மாற்றம் - சொல்; "வள்ளலார் நாமம் சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து"க் கூறிய (2584) முன்னை நிலையினின்று மாறுதல் பெற்ற என்ற குறிப்புப்பட இங்கு மாற்றம் என்றார். முன் அமணர் கூறியதும் பிள்ளையாரது நாமம் தான்; இங்கு அம்மையார் - அமைச்சனார் (2584) கூறியதும் அத்திரு நாமமேயாம்; ஆயின் இங்கு அதனையே மெய்யுணர் வளிப்போர் கூறியவாற்றால் அது முன்னை நிலையினை மாற்றியது என்க; ஒன்று - ஒப்பற்றது என்றும், பலபடியாகச் செல்லாது இனி ஒரே படியாய்ச் செல்வது என்றும் கொள்ள நின்றது.
|
|
|