பாடல் எண் :2623
மன்னவ னிடும்பை தீர மற்றவன் பணிமேற் கொண்டே
யன்னமென் னடையி னாரு மணிமணிச் சிவிகை யேறி
மின்னிடை மடவார் சூழ வேற்படை யமைச்ச னாரும்
முன்னணைந்தேகச் சண்பை முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.
725
(இ-ள்.) மன்னவன்....மேற்கொண்டே - அரசனது துன்பம் தீரும் பொருட்டு மற்று அவனது பணியினை மேற் கொண்டவர்களாகியே; அன்னமென் நடையினாரும் - அன்னம் போன்ற மெல்லிய நடையினையுடைய மங்கையர்க்கரசியாரும்; அணிமணி.....ஏக - அழகிய மணிகளிழைத்த சிவிகையின் மேல் ஏறிக்கொண்டு, மின் போன்ற இடையினையுடைய காவற் பெண்கள் சூழ்ந்து வரவும், வேற்படை யினையுடைய அமைச்சனாராகிய குலச்சிறையாரும் முன்பு அணைந்து செல்லவும்; (இவ்வண்ணமாகச்) சண்பை முதல்வனார் மடத்தைச் சார்ந்தார் - சீகாழித் தலைவராகிய பிள்ளையாரது திருமடத்தைச் சார்ந்தனர்.
(வி-ரை.) மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேற் கொண்டே - "அத்துயரம் நீங்கப் - பணிவாராகி" (2622) என்று முன் உரைத்த ஆசிரியர், இங்கு "மன்னவ னிடும்பை தீர" என்றருளிய தென்னை? எனின்; முன் சொன்னமை தமது பொருட்டும், இங்குக் கூறியது மன்னவன் பொருட்டும் என இருபொருளும் கருதிச் சென்றனர் என்க; இதற்கு முன் இவர்கள் செயல் யாவும் இவ்விரு பொருளுங் கருதிச் செய்தனவே யாயினும் (2557 - 2570 - முதலியவை பார்க்க). அவை யெல்லாம் அரசனது மன வொற்றுமையியைபு இல்லாது தாமே செய்தன; இங்கு அவனுடைய உடம்பாடும் கூடிய தென்ற வேற்றுமை குறித்தற்கு இவ்வாறு பிரித்து வெவ்வேறு பாட்டுக்களிற் கூறினார்; மற்று அவன் பணிமேற் கொண்டே என்று மேலுங் கூறிய கருத்துமிது; மற்று - இதுகாறும் மாறுபட்டு நின்றவன் என்ற குறிப்புடன் நின்றது. சிறப்புப் பற்றித் தமது துயரந்தீர்தலை முன் வைத்தார்; மேற் கொள்ளுதல் - தாங்குதல்; மேலாக ஏற்றல்; மேலே புறப்பார்வையிற் காணும்படி தாங்குதல் என்ற குறிப்பும் தருவது காண்க; ஏகாரம் - பிரிநிலை; பணியே மேற்கொண்டு என்று பிரித்துக் கூட்டி யுரைத்தலுமாம்.அவன் பணி - அவனது ஆணை; பணி - பணித்து ஆணையிட்ட செயல்; "அழையும்" என்ற ஆணை (2621)
மடவார் சூழ - அமைச்சனாரும் முன் அணைந்து ஏகச் சிவிகை ஏறிச் சார்ந்தார் - என்க; சிவிகை ஏறிச் செல்லுதலும் மடவார் சூழச் செல்லுதலும், அந்நாள் உயர் குலத் தோரினும் வழங்கும் வழக்கு; இவை அரசியாரின் உயர்ந்த உலக நிலைக்கும் பொருந்துவன; இங்கு மடவார் என்றது படையேந்திய காவற் பெண்டிரும் ஏவற் பெண்டிராகிய தோழியருமாம்; அமைச்சனார் பரியேறிச் சென்றமை மேற்பாட்டிற் காண்க.
வேற்படை அமைச்சனார் - படை - அமைச்சர் நிலையில் அவர் தாங்கும் உடைவாள் முதலியவை; படை - படைஞர் என்றலுமாம்.
நடையினாரும் - முன்னர்ப் பிள்ளையாரை எதிர் கொள்ளுதற்கு அமைச்சனாரைப் பணித்தமையே போல (2543), ஈண்டும் அவர் ஒருவரே பணி மேற்கொண்டு சென்றழைத்தல் சாலுமாயினும் அவ்வாறமையாது அன்புமேலீட்டினால் அம்மையாரும் சென்றனர் என உம்மை எச்சப் பொருள் தந்து நின்றது.
நடையினாரும்.....சார்ந்தார்
- அமைச்சனார் முன் ஏகப், பின் மடவார் சூழச் சிவிகை ஏறிச் சார்ந்தார் என இம்முறையே சென்றாராயினும், நடையினாரை முன்னர் வைத்துக் கூறிய அமைதி மனத்தின் விரைவினால் அவர் முற்சென்றனர் என்ற குறிப்புப் பற்றியது.
மடத்தில் - என்பதும் பாடம்.
ஐந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிவுகொண் டுரைக்க நின்றன.