திருமடஞ் சாரச் சென்று, சேயரிக் கண்ணி னார்முன் வரிபரி யிழிந்து நின்ற வமைச்சனார், "வந்த பான்மை சிரபுரப் பிள்ளை யார்க்கு விண்ணப்பஞ் செய்வீ" ரென்னப், பரிசனத் தவரும் புக்குப் பதமறிந் துணர்த்து கின்றார்; | 726
| (இ-ள்) திருமடம் சாரச் சென்று - திருமடத்தினைச் சார அணுகிச் சென்ற பின்; சேயரிக் கண்ணினார்....என்ன - செவ்வரி படர்ந்த கண்களையுடைய அம்மையாரின் முன்னே இவர்ந்து வந்த குதிரையினின்றும் கீழே இறங்கி நின்ற அமைச்சனார், "நாங்கள் வந்த தன்மையினைச் சீகாழிப் பிள்ளையார் பால் விண்ணப்பஞ் செய்வீர்களாக" என்று பரிசனத்தவர்களிடம் கூற; பரிசனத்தவரும்...உணர்த்துகின்றார் - அந்தப் பரிசனங்களும் உள்ளே சென்று விண்ணப்பிக்க ஏற்ற செவ்வியினை அறிந்து சொல்வார்களாகி, (வி-ரை) சார - அணிமையாக; சேயரிக் கண்ணினார் - மங்கையர்க்கரசியார்; செவ்வரி படர்ந்திருத்தல் மாதர் கண்ணழகியல்பு களுள் ஒன்று. முன்வரு பரியிழிந்து நின்ற - அமைச்சனார் பரியின்மிசை ஏறி வந்தமை இங்குக் கூறினார்; அம்மையார் சிவிகை யேறிப் போந்த பின்னர்த் தாம் பரியேறி, முன்னர் வந்து அம்மையார் திருமடத்தினைச் சாருமுன் வந்து பரியினிழிந்து நின்றனர் என்ற மரபு குறிக்கொள்க. இக்கருத்தினைப் புலப்படுத்தவே அம்மையார் "சிவிகை யேறி" என்ற முன் பாட்டில் இதனைக் கூறாது இப்பாட்டிற் கூறியது மென்க; இழிந்து நின்ற என்ற கருத்தும் மரபும் காண்க. "வந்த....செய்வீர்" என்ன - இது திருமடத்தின் வாயில் காப்போராகிய பரிசனங்களை நோக்கி அமைச்சனார் கூறியது; "பரிசனத்தவரை நோக்கி" என்பது மேற்கூறுதலின் உய்த்துணர வைத்தார்; சொற் சுருங்கக் கூறும் அழகும் அமைதியும் பற்றி; மேல்வரும் பாட்டினும்(அவரும்) "மீண்டு போந்து அழைக்க" என்ற விடத்தும் இவ்வாறே கூறுதல் காண்க. இவை அமையத்துக் கேற்றபடி செயல் நிகழ்ந்த விரைவும் குறித்து நின்றன. முன் அறிவிப்புச் செய்ய விண்ணப்பித்து விடை பெற்று உட்செல்லுதல் அந்நாளிலும் பெரியோரிடத்தும், அரச சமூகத்தும், இவை போன்ற உயர் விடங்களிலும் வழக்கு என்பது முன்னரும் கூறப்பட்டது. 2507 - 2508 - 2509 முதலியவை பார்க்க. பதம் அறிந்து இன்முகச் செவ்வியினை அறிந்து; இஃது செய்தியறிவிக்கும் ஏவலாளர் தலைவரின் செவ்வி நோக்கி யறிவித்தல் வேண்டு மென்னும் தகுதி குறித்தது; "நகைமுகச் செவ்வி நோக்கி" (2509) என்று முன்கூறியதும் காண்க. உணர்த்துகின்றார் - பிள்ளையார் - உணரும்படி கூறுவாராகி; முற்றெச்சம்; நிகழ்காலத்தாற் கூறியது காலவழுவமைதி; உணர்த்து கின்றாராகி - விண்ணப்பஞ் செய்ய என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. விண்ணப்பஞ் செய்வீர் என்று கூறிய மரபு காண்க; மேலும் "விண்ணப்பஞ் செய்ய" என்றதும் காண்க. பிள்ளையாரது சந்நிதானத்தை இறைவரது திருமுன்பேயாகக் கருதிய நிலை காட்டப்பட்டது. வந்த பான்மை - மாதேவியராகிய அம்மையாரும் தாமும் வந்துள்ள தன்மையினை; வந்த என்பதில் எழுவாயும், பான்மை என்றதில் இரண்டனுருபும் தொக்கன. இவையும் விரைவுக் குறிப்பு. செய்தி என்னாது பான்மை (தன்மை) என்று பண்பு குறித்துக் கூறினார்; குறிப்பினால் நிகழ்ச்சிகளை உணர்ந்து கூறும் அறிவுடைப் பரிசனங்கள் என்பது குறித்தற்கு.
|
|
|