பாடல் எண் :2626
ஞானத்தின் றிருவுருவை, நான்மறையின் றனித்துணையை,
வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்,
தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங்
கானத்தி னெழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்.
728
(இ-ள்) ஞானத்தின் திருவுருவை - சிவஞானத்தினாலமைந்த திருவுருவத்தினையுடையவரை; நான்மறையின் தனித் துணையை - நான்மறைகளினுடைய ஒப்பற்ற துணையாயினாரை; வானத்தின்.... கொழுந்தை - வானத்தின் மேலேயன்றி மண்ணுலகத்தின்கண் வளர்மதியின் கொழுந்துபோல்வாரை; தேன்நக்க...எழுபிறப்பை - தேன் ஊறி வழிகின்ற கொன்றை மலரைச் சூடிய சிவந்த சடையினையுடைய சிவபெருமானது சீர்களைத் தொடுத்தெடுத் திசைக்கின்ற கானத்தின் ஏழு பிறப்புக் கிடமாகிய பிள்ளையாரை; கண்களிப்பக் கண்டார்கள் - கண்கள் களிப்படையும்படி கண்டார்கள்.
(வி-ரை) அம்மையாரும் அமைச்சனாரும் ஆளுடைய பிள்ளையாரை அன்று கண்ட காட்சியினை அவர்கள் மனத்துட்கொண்ட அவ்வாறே எடுத்துக் காட்டுவது இத்திருப்பாட்டு. இவ்விருவரும் தனித் தனியும், ஒருங்கேயும், முன்னை நாளும் கண்டனர்; அவ்வாறு கண்டநிலை வேறு; இடையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளாலும் அவைபற்றி இவர்கள் மனத்தினுள் எழுந்த பல்வேறு வகைப்பட்ட எண்ணங்களாலும் இங்குச் கண்ட நிலை வேறு என்பதனை விளக்கமுறக் கூறியபடி.
இனி, முன்கண்ட காட்சி பொதுக் காட்சியும், இங்குக் கண்டது சிறப்புக் காட்சியுமாம்; சிறப்பு, பொதுவினைத் தன்னுளடக்கி விரித்துக் காட்டுமாதலின் முன்னர் விரிக்காது ஈண்டு விரித்தார் என்க.
அன்றியும், இங்குக் கண்ட இந்நிலையே எழுந்தருளிப் பிள்ளையார் - திருவாலவாய்ப் பெருமானைக் கும்பிட்டு, அவரது திருவருட் குறிப்பு நோக்கம்பெற்று அரசனுக்குக் காட்சியருளியும் நோய் நீக்கியும் ஞானோபதேசம் செய்தும் ஆட்கொண்டருள்வாராதலானும், இந்நிலையே மதுரைமா நகரினுள்ள பலதிறப்பட்ட மக்களும் அமணர்களும் கண்டு தத்தமது தரத்திற் கேற்றவாறு பயன்பெறக் காட்சியருள்வாராகலானும், இவ்வாறு இவர்கள் கண்டதுபற்றி விரித்தருளினார் என்றலுமாம். "எழுச்சியிற் காட்சிபெற்றார், நண்ணிய சமயம் வேறு நம்பினரெனினும் முன்பு, பண்ணிய தவங்க ளென்கொல் பஞ்சவன் றஞ்ச மேவிப், புண்ணிய மூர்த்தி வந்து மதுரையிற் புகுத வென்றார்" (2642) என்றும், "தென்ன னாடு வாழவந் தணைந்தார்" (2700) என்றும், "சிவிகைமேற் பிள்ளையார்தாம் வருமழ கென்னே யென்பார் வாழ்ந்தன கண்கள்"(2701) என்றும், மேலும் வருவன காண்க.
அன்றியும், ஞானோபதேசத்தால் அரசனையும் நாட்டினரையும் உய்விக்கக் குருமூர்த்தியாக எழுந்தருளும் எல்லையாதலின் இவ்வாறு கண்டார்கள் என்ற கருத்தும் காண்க. இவ்வாறே, பின்னரும், திருநல்லூர்ப் பெருமணத்தில் புண்ணியத் திருமணத்தின் வந்தார் யாவருக்கும் ஞான மெய்ச்சொல் உபதேசித்து முத்திப் பெரும்பேறு தந்தருள வந்தருளும் காட்சியினையும் விரித்துக் கூறுதல் காண்க. இங்குப் பிள்ளையார் ஞானதேசிகராய் எழுந்தருள்கின்றார் என்பது பாண்டியனாகிய சற்சீடனுக்கு, "வினைகளொத்துத் துலையென நிற்றலாலே" "ஆல வாயிலான் பால தாயினார் ஞால மாள்வரே" (தேவா) என்பது முதலாகப் பாவனா தீக்கை, சட்சுஷீ தீக்கை, பரிச தீக்கை, வாசக தீக்கை முதலியன செய்து, வைகைக் கரையையே தீக்கை மண்டபமாக வைத்து, "முன்னைவல் வினையு நீங்கி முதல்வனை யறியும் தன்மை" தந்து திருவடியும் சூட்டும் வரலாறுகள் இங்குக் கருதத் தக்கன; இக்கருத்தே பற்றி "மன்ற பாண்டியன், கேட்பக் கிளக்கு மெய்ஞ்ஞானத்தின், ஆட்பா லவர்க்கரு ளென்பதை யறியே" (இருபாவிருபஃது-2) என்றார் ஞானநூ லுடையாரும். இவை ஞானோபதேசமாதல் மேல் ஆசிரியர் தாமே ஆண்டு விரித்தருளுமாற்றால் உணர்க. இதுவரை வரலாறு கூறிவந்தயாப்பினை மாற்றி, நாற்சீரடிச் கொச்சகக் கலிப்பாவினால் மேல் வரலாறு கூறத் தொடங்கும் ஆசிரியரது திருவுற்றக் கருத்தும் கருதுக.
இனி, ஞானத்தின் றிருவுரு முதலாக சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பு என்றது வரை நான்கும் முறையே ஞானம், யோகம், கிரியை, சரியை என்னும் சைவ நன்னெறி நான்கினையும் குறிப்பினாலுணர்த்தி நிற்கும் வகையான் இந்நான்கு நெறிகளால் இறைவனையடையும் வழிகாட்டியருளும் மெய்க் குரவராகிப் பிள்ளையார் நின்ற நிலை குறித்தலும் காண்க.
இன்னும் இவ்வாறு பற்பல அரிய குறிப்புக்களும் பெறவைத்த இத்திருப்பாட்டினருமை அனுபவமுடைய தேசிகர்வாய்க் கேட்டறிந்து சிந்திக்கத் தக்கது.
ஞானத்தின் திருவுரு - சிவஞானத்தினாலமைந்த திருமேனியை உடையவர். "உணர்வரிய மெய்ஞ்ஞானம்"(1967) தாமுணர்ந்த தவமுதல்வராதலின் ஏனையோர் போலப் பசுபாச ஞானங்களாலன்றிப் பதிஞானத்தானே திருவடியை எப்போதும் மறவாது கண்டு கொண்டிருப்பவர் என்பது; அத்திருவடி நிறைவாகிய மெய்ஞ்ஞானத்தாலே பிள்ளையார் முற்று முணர்ந்த நிலையுடையார் என்பது முன்னர் "வேயுறு தோளிபங்கன்" என்ற பதிகக் கருத்தானும், அதனுட் "புத்தரொ டமணை வாதி லழிவிக்கு மண்ண றிருநீறு செம்மை திடமே" என்றதனாற் சிறப்பாகவும், மற்றும் பலவாற்றானும் விளக்கமாகவும் அறியக் கிடத்தல் காண்க; இவ்வாறு காலங்கடந்த முற்றுணர்வாகிய சிவமெய்ஞ்ஞானமே எல்லாம்வல்ல பேராற்றலுடைய தாதலின் அது தமது வலிய இடர்களை யெல்லாம் நீக்கி யுய்விக்க வல்லதாம் என்பதும் குறிப்பாகக் கண்டனர் என்க. "உணர்வரிய, காலங்கள் செல்லாத காத லுடனிருத்தி, காலங்கண் மூன்றினையுங் கண்டு"(களிற்றுப்படி. 31). இக்கருத்தினைப் பின்னர் "ஓடுநீ ருடன்செ லாது நிற்குமோ வோலை யென்பார், நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்ல ரென்பார்"(2705) என்று பிள்ளையாரை இவ்வாறேகாட்சிபெற்ற ஆலவாய் மக்களது வாக்கில் வைத்து ஆசிரியர் உணர்த்துதலும், "ஏகமாஞ் சிவமெய்ஞ்ஞான மிசைந்தவர்" (புரா - 1237); "அலகின்மெய்ஞ் ஞானத் தெல்லை யடைவுறுங் குறியால்" (புரா - 1234), "ஞானமெய்ந் நெறிதான்....நமச்சிவா யச்சொ லமென்று....அருள்செய்து"(புரா - 1247); என்பனவற்றாலுணர்த்துதலுமாம் "போதநிலை முடிந்தவழி" (புரா - 1253) என்று முடித்துக் காட்டுதலும் காண்க. நான் மறையின் தனித் துணையை - சிவஞானத்தின் துணையானே மறை வழக்கினையும் சைவ நெறியினையும் சமணர் வஞ்சனையினின்றும் மீட்டு ஒங்கத் துணை செய்தலே ஈண்டு இவர்கள் வேண்டியதாதலின், அதனை அடுத்து நான்மறையின் றனித்துணையாகக் கண்டனர்: "வேத வேள்வியை நிந்தனை செய்துழல், ஆத மில்லியமண்", "மறைவ ழக்கமிலாத மாபாவிகள்" "ஓதி யோத்தறி யாவமண்" "அழலதோம்பு மருமறை யோர்திறம் விழல தென்னு மருகர்" "நீற்று மேனிய ராயினர் மேலுற்ற, காற்றுக்கொள்ளவு நில்லாவமணர்" முதலாக வரும் திருவாக்குக்கள் காண்க. தனி - ஒப்பற்ற; தனி முதலாகிய; துணை செய்வாரைத் துணை என்று உபசரித்தார்.
வானத்தின் மிசையன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை - மிசையன்றி - மிசை உள்ள மதிபோலன்றி; அதற்குள்ள குறைபாடுகள் இன்றி என்பது குறிப்பு. மேல் வளர் என்ற குறிப்புமது; வான்மதியானது வளர்தல் குறைதல் உள்ளது - இது என்றும் வளர்வது; அது பௌதிக ஒளி தருவது - இது ஞான ஒளி தருவது என்பனமுதலாகக் கண்டு கொள்க. கொழுந்து - இளமையும், இனி 16 கலையளவும் நிறைந்தது மாறாத நிறைவு பெறும் தன்மையும் குறிப்பு. மதிதரும் ஊன வொளிபோலன்றி ஞானவொளியும் ஞானவெற்றியும் ஈண்டுக் கருதப்பட்டன. மேல் "நிலத்திடை வானினின்று நீளிரு ணீங்க வந்த கலைச்செழுந் திங்கள் போலுங் கவுணியர்"(2649) என்பதனாலும் காண்க. "கண்ணிறை கதிரே கலைவளர் மதியே"(1990) என்று தொடக்கத்திற் றொண்டர்களும் தோணிபுரத்தவர்களும் கண்டு துதித்ததும் இக்குறிப்பு.
தேன்நக்க....எழுபிறப்பை - தேன்நக்க - தேன் துளித்து விரிகின்ற; நகுதல் - விரிதல் என்னும் பொருட்டு; அரும்பு விரியும் பருவம் நகைத்தல் போன்றிருத்தலின் இவ்வாறு கூறுதல் வழக்கு; இறைவரது திருமேனியில் அணியப் பெறுதலால் மகிழ்கின்ற என்பதும் குறிப்பு; "முருகுயிர்க்க நகைக்கும் பதத்தினுடன் பறித்த அலகின் மலர்கள்"(1023); "நல்ல கமழ்முகை யலரும் வேலைத், தெய்வ நாயகர்க்குச் சாத்தும் திருப்பள்ளித் தாமம்"(559); என்றவை காண்க. திருமுடியிற் சாத்தும் போது தேன்பிலிற்ற மலர்கின்ற என்பது.
கொன்றை - சடையார் - சீர் - தொடுக்கும் கானம் - சடையார் சீர் என்றதனால் சடை சிவபெருமானுக்கே யுரிய சிறப்படையாளமாதலும், கொன்றையும் அவ்வாறே குறித்தலானும், சிவபெருமானது சிறப்புக்களையே யன்றிப் பிறிதொன்றும் பேசாத தொடையின் கானம் என்றவாறாயிற்று; "மதுமலர் நற்கொன்றையா னடியலாற் பேணா" "கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்து"(தேவாரம்) என்றற்றொடக்கத்த திருவாக்குக்கள் காண்க. கொன்றை மலர் - பிரணவத்தினைக் குறித்தலால் "ஓமெனும் பதத்தில் வேத மாதியுற்பவிக்கு மாலவித்தினுதிக்கு மாபோல்" என்றபடி பிள்ளையார் தொடுத்த கானம் வேதமேயாதல் குறிக்கப்பட்டது.
கானத்தின் எழுபிறப்பு - கானம் எழுவகைப்பட்ட சுரங்களிற் பிறந்து விரிவதாதலின் எழுபிறப்பு என்றார்; "பாலையீரேழு கோத்த பண்" என்பது முதலாக அறியப்படும் முதற் பண்களும், இவற்றின் வழிப்பிறந்து வருவனவாகிய பண்களின் பேதங்களும் அடக்கக்கானத்தின் எழுபிறப்பு என்றார்; இவற்றை மேளகர்த்தா இராகங்கள் என்றும் சன்னிய ராகங்கள் என்றும் கூறுதல் நவீன வழக்கு; கானம் என்பது காந்தர்வ வேதம் என உபவேதங்கள் நான்கனுள் வைத்து எண்ணப்படும். இது எல்லாக் கடவுளர்க்கும் உவகை வரச்செய்யும் என்ப; சிவனை யல்லாத பிறதெய்வங்களையும், மக்களையும், ஏனையுயிர்களையும் பாடி வரும் பாட்டுக்களுக்குப் பயன் பட்டுத் தான் பயன் பெறாது வருந்தித் தவங்கிடந்த கானம் என்ற தெய்வம் ஏழு பிறவியும் பிறந்து இறுதியில், "கொன்றையா னடியலாற் பேணா" - வெம்பிரானாராய திருஞானசம்பந்த நாயனாரது திருவாக்கினின்றும் போந்த திருப்பதிகங்களுட் பொருந்தி உறுதிபெற்றதென்ற குறிப்பும், கானத்தினெழுபிறப்பு என்றதனாலும், எழு என்றதனாலும், "கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்" என்று உடம்பொடு புணர்த்தியோதிய குறிப்பினாலும், பெறப்படும்; எழு - இங்குத் தீவினை தீர்த்து எழுவிக்கும் என்ற குறிப்புமாம்; சீரினையே என்ற பிரிநிலை யேகாரம் தொக்கது.
தேனக்க மலர்க் கொன்றை என்றும் - தேனக்க கானம் - என்றும் இரட்டுற மொழிந்துகொள்க; எழுபிறப்புக் கானத்தின் - என்று மாற்றியு ரைக்கவும் நின்றது.
கண்களிப்பக் கண்டார்கள் - கண்களிப்ப - களித்தல் - உயிரின் உணர்வு நிகழ்ச்சி. கண்ணாகிய புற இந்திரியமும் மனமும் ஆகிய இவற்றுடன் ஆன்மா இயைந்து கண்ட காட்சியினால் உயிர் களிப்பையடைந்தது என்க; "அவற்றினான் ஆன்மா ஒற்றித்துக் காணினல்லாது அவை ஒன்றையும் விடயியலா ஆகலான், ஐயுணர்வுகள் ஆன்மாவா லுணரும்" என்ற சிவஞானபோதம் 5-ம் சூத்திரக் கருத்துக் காண்க. ஈண்டுக் கண் என்ற பொறியின்வழி உயிரில் விளைந்த நிகழ்ச்சியாகிய களிப்பினைக் கண்ணின் நிகழ்ச்சியாக உபசரித்தார்.
இத்திருப்பாட்டின் தொகைக்குறிப்பாவது: செங்கண்விடையார் திருமலர்க்கை தீண்டப்பெற்ற சிறுவனார், அங்கண் மாயை யாக்கை யின்மே லளவின் றுயர்ந்த சிவமயமாய்ச் சூழ்ந்தவொளியிற் றோன்றினார்(1260) என்று சேய்ஞலுர்ப் பிள்ளையாரைக் கண்டதுபோல யாவர்க்குந் தந்தைதா யெனுமவரிப் படியளித்தா ராவதனா லாளுடைய பிள்ளையாரும், தாவிறனிச் சிவஞான சம்பந்தருமாய்க் கலைஞானமு முணர்வரிய மெய்ஞ்ஞானமு முணர்ந்தாரையும், அச்சிவஞானத்தின் திருவுருவேயாகக் கண்டார்கள் என்றும்; அச்சிவஞானமே இறைவனருளிய மறைகளின் விளக்கத்துக்கு இடையூறு நேர்ந்தபோது அது வராமற் காக்கும்தனித் துணையாவதென்றும், மண்ணில் வந்து பிறவி வெப்பந் தீர்த்துத் தண்ணிய ஞானவொளி செய்யும் மதிக்கொழுந்து போன்றார் இவரென்றும்; இவர் அவ்வாறு துணை செய்தருளுதல் சடையாரது சீர்களையே பரவும் திருவாக்குக்களால் ஆவதாதலின் அந்தக் கானத்தின் எழுபிறப்பு இத்திருவுருவமே என்றும் இவ்வாறு கருத்துட்கொண்டு களித்தனர் என்பதாம். இது அவர் நிலைக்கேற்றவாறு அருளும் திருவருட்குறிப்புணர்த்தக் கண்ட காட்சி என்க.
ஞானத்தின்றிருவு - ஞானத்தினாலமைந்த திருவுரு; மூன்றாம் வேற்றுமையுருபும் பொருளும் உடன்றொக்க வழிச், சாரியைகள் தொகாது வந்தன.
உண்மையுணர்ந்து பிழம்புணரப்படாத பண்புகளுள் கண்ணீரும் முலைப்பாலும் போல் பிள்ளையாரது திருமேனியும் மெய்ஞ்ஞானத்தினாலமைந்தது என்பதாம். அருண்மெய்ஞ்ஞானம் பெற்றாருடைய மாயேயவுடலம் பகல் விளக்குப்போல அவ்வருண் ஞானத்துள் மறைந்து அதனுளடங்கித் தான் புலப்படாது நிற்குமாதலின் பிள்ளையார் திருமேனி ஞானத்தினாலமைந்ததேயாம். முன்னரும் "பேருணர்விற் பொலிகின்ற பிள்ளையார்" என்றதும் ஈண்டுணரற்பாற்று.