பாடல் எண் :2628
உரைகுழறி மெய்ந்நடுங்கி யொன்றுமறிந் திலராகித்
தரையின்மிசைப் புரண்டயர்ந்து சரணகம லம்பற்றிக்
கரையில்கவ லைக்கடற்கோர் கரைபற்றி னார்போன்று
விரைவுறுமெய் யன்பினால் விடாதொழிவார் தமைக்கண்டு,
730
(இ-ள்) உரை குழறி....அறிந்திலராகி - மொழி தடுமாறி உடல் நடுங்கி மனங் கலங்கியதனால் ஒன்றும் அறிந்திலர்களாகி; தரையின்...பற்றி - நிலத்தின் மேலே புரண்டு அயர்ச்சி அடைந்து பிள்ளையாரது திருவடித் தாமரைகளைப் பற்றிக்கொண்டு; கரையில்..தமைக் கண்டு - எல்லையில்லாத கவலையாகிய கடலின் வீழ்ந்து அயர்வார்கள் அதினின்றும் ஏறுதற்கு உரியதொரு கரையினைப் பற்றிக் கொண்டவர்கள் போல விரைகின்ற மெய்யன்பு காரணமாக விடாமல் பற்றிக் கொண்டபடியே கிடந்த அவர்களைக் கண்டு,
(வி-ரை) உரைகுழறுதல் - மெய் நடுங்குதல் - ஒன்றுமறிந்திலராதல் - தரையிற் புரளுதல் - அயர்தல் - இவையும் முன்பாட்டிற் கூறிய மெய்ப்பாடுகளின் தொடர்பால் ஒன்றன்மேலொன்றாய்ப் பரம்பரையின் முதிர்ந்து புறத்து நிகழும் மெய்ப்பாடுகள்.
ஒன்றுமறிந்திலர் - முன்னர்க் கண்டவுடன் களிப்பு வந்தது; அதனைத் தொடர்ந்து மேல் நினைவு வந்ததனால் வருத்தம் வந்தது; இவை மாறி அவ்விரண்டு நிலையுமின்றி மனமழிதலால் ஒன்றுமறியா நிலை வந்தது.
தரையின்மிசைப் புரளுதலும் அயர்தலும் மிக்க துன்பத்தான் நிகழ்வனவாம் என்பது உலகநிலை யனுபவங்களினும் காணலாம்.
சரண கமலம் பற்றி - முன் பாட்டில் மலர்க்கை என்றும், புண்டரிகச் சேவடி என்றும் கூறிய கருத்தையே தொடர்ந்து கூறிய நயம் காண்க.
கரையில்....போன்று - கவலைக்கடல் - கவலையாகிய கடல்; மிகுதிபற்றிக் கடல் என்றார்; கவலைக்கடற்கு - கடலைக் கடந்தேறுதற்கு; கரைபற்றுதல் - கரையினைத் தலைப்படுதலால் அதனை நெகிழவிடாது பற்றிக்கொள்ளுதல். "பிறவிப் பெருங்கடனீந்துவர்" என்றும், "தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றலரிது" என்றும் வரும் திருக்குறட் கருத்துக்களை நோக்குக.
கரையில் கவலைக் கடலாவது - பெருங் கவலைகளின் தொகுதி; இவை முன் 2593-2594ல் கூறிய அச்சங்களின் குறிப்பினாலும், மேல் 2630-2631ல் கூறுவனவற்றாலும் உணரப்படும்; தாம் தம் வாழ்வாக அழைக்க வந்த தெய்வமாகிய பிள்ளையார்பால் தம் கருத்துக்குமாறாக அபசவாரம் நிகழ்ந்துவிட்டமையும், அவர் அருளால் மன்னனையும் நாட்டினையும் உய்யச்செய்ய எண்ணியதற்கு மாறாக அடியார்பா லபசாரப்படுதலால் அரசன் தீப்பிணியான் மயங்கிக் கிடந்தமையும், நாடு பாவப்பயன்பெற நின்றமையும், பிறவுமாம்.
கரைபற்றினார் போன்று - பயன்பற்றி வந்தவுவமம்.
விரைவுறும் மெய்அன்பு - விரைதல் - வேகமாகப் புறத்தோற்ற நிகழ்தல்; விடாது ஒழிவார் - பற்றுவிடாத நிலையினர்; சரணம் பற்றியபடியே கிடந்தனர் - என்க. ஒழி - துணிவுப்பொருள் வகுதி.
அறிந்திலர் தம்மை - என்பதும் பாடம்.