பாடல் எண் :2634
.ஆவது மழிவு மெல்லா மவர்செய!; லமண ராகும்
பாவகா ரிகளை நோக்கும் பழுதுட னீங்க வெல்லச்
சேவுயர் கொடியி னார்தந் திருவுள்ள மறிவே னென்று
பூவலர் பொழில்சூழ் சண்பைப் புரவலர் போதுகின்றார்;
736
(இ-ள்) ஆவதும்....செயல் - ஆக்கமும் அழிவும் ஆகிய எல்லாம் "அவர்" என்று மறைகள் சுட்டிக் கூறும் இறைவரது செயலேயாகும்; அமணராகும்....வெல்ல - அமணர் என்னும் பாவஞ் செய்வோர்களைப் பார்க்கவும் பேசவும் மற்றும் செயல் செய்யவும் நேர்தலால் வரும் பழுது அச்செயல்களுடனே நீங்கவும், அவர்களை வென்றிடவும்; சேவுயர்...அறிவேன் என்று - இடபத்தை உயர்த்திய கொடியினையுடைய சிவபெருமானது திருவுள்ளக் குறிப்பினை அறிவேன் என்று கூறி; பூவலர்....போதுகின்றார் - பூக்கள் அலர்கின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவராகிய பிள்ளையார் செல்கின்றாராகி,
(வி-ரை) ஆவதும் அழிவும் - ஆக்கமும் கேடும் என அவ்வத் தொழில்களைக் குறித்த பெயர்களாய் நின்றன; வெல்லுதல் - அழித்தல்; அருளுதல் - ஆகுதல் என இவ்விரண்டும் முன்னர் (2631) அவர்களால் வேண்டப்பட்டமையால் அவையிரண்டும் அவரருளன்றி நிகழா என்பார் எல்லாம் அவர் செயல் என்றார்; ஆக்குதலும் அழித்தலும் என்னாது ஆவதும் அழிவும் என்றது அவர் செயலினாலே இவை தாமே விளைவன என்றபடி. அவர் - அவன் என்று மறைகளுட் பேசப் பெற்ற அவர் என உலகறி சுட்டு.
அவர் செயல் - ஆதலின் - திருவுள்ளம் அறிவேன் என்று காரணப் பொருள்படக் கொள்க.
பாவகாரிகள் - பாவத்தைச் செய்பவர்கள்; காரி - செய்பவன்; அதன் மேல் கள் விகுதி பெற்றது. பாவகாரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க - பாவிகளைப் பார்த்தலும் பழுது; நோக்கும் பழுது - நோக்குதலால் விளையும் தீமை; "பிரட்டரைக் காணாகண்; வாய்பேசாதப் பேய்களோடே" (திருவிசைப்பா); "வெண்ணீறணி கிலாதவரைக் கண்டா லம்ம நாமஞ்சுமாறே" (திருமா) என்பன வாதி திருவாக்குக்கள் நிற்கத், "தீயாரைக் காண்பதுவும் தீதே" என்று நீதி நூலும் பேசும்; "கண்டு முட்டு" என்னம் சமணர் கொள்கையும் இந்தக் கருத்துடையதாம்; பாவகாரிகளை நோக்குதல் பழுதாவது போல அவர்களால் நோக்கப்படுதலும் பழுது தருவதாம் என்பதும் அறிந்தோர் மரபு.
உடன் நீங்க - நோக்கின் அப்பொழுதே அந்தப் பழுது ஊன்றாது கழிய; உடன் நீங்குதல் - தோன்றிய அவ்வளவே அழிவெய்துதல்; பார்த்தலால் வரும் விளைவுகளைப் பற்றி முன் ஆண்டாண்டும் உரைத்தவையும், இனியும், 2636லும், பிறாண்டும் உரைப்பவையும் நினைவு கூர்க.
நீங்க வெல்ல - நீங்கவும் அவர்களை வெல்லவும்; எண்ணும்மைகள் தொக்கன; பாவகாரிகளை நோக்குதலும் அவர்களுடன் பேசி வாது செய்தலும் ஆகிய தீமை ஒன்று; அதன்மேல் தொடர்ந்து அவர்களை வெல்லுதலும் அழித்தலும் ஆகிய செயல் மற்றொன்று; இவற்றை முறையே, "நோக்கி நான் வாதுசெயத் திருவுள்ளமே?" என் ற பதிகத்தானும், "வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே" என்ற வேறுமொரு பதிகத்தானும் வேண்டிப் பாடித் திருவுள்ள மறிதல் காண்க.
சேவுயர் கெரடியினார் - "சாலவும், ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கியேர் காட்டுங், கோதிலா வேறாங் கொடி"(திருவா - தசாங்கம் - 10); "சேவுயருந் திண்கொடியான்" (பிள். தேவா. கழுமலம் - மேகரா - 1) "ஏதமில் வீர வெள்விடைக் கொடியும்" (11-ம் திருமுறை. கோயினான் - 4); பற்றலரை வெற்றி கொள்ளும் கொடி என்பது குறிக்க இத்தன்மையாற் கூறினார்.
திருவுள்ளம் அறிதல் - அறியும் வகை மேல் 2636 - 2637 - 2639 பாட்டுக்களிற் காண்க.
என்று - போதுகின்றார் - போந்து - புக்கார் - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க; போதுகின்றார் - போதுகின்றாராகி; முற்றெச்சம்.
அழிவதெல்லாம் - நீங்கிவெல்ல - என்ற பாடங்களுமுண்டு.