பாடல் எண் :2636
"நோக்கிட விதியி லாரை நோக்கியான் வாது செய்யத்
தீக்கனன் மேனி யானே திருவுள்ள மே?"யென் றெண்ணில்
பாக்கியப் பயனா யுள்ள பாலறா வாயர் மெய்ம்மை
நோக்கிவண் டமிழ்செய் மாலைப் பதிகந்தா னுவல லுற்றார்,
738
(இ-ள்) தீக்கனல் மேனியானே! - மிக்கு எரியும் தீப்போன்ற திருமேனியினையுடைய இறைவரே!; நோக்கிட...வாதுசெய்ய - நோக்குதற்கு விதியில்லாத அமணரை நோக்கி யான் வாது செய்வதற்கு; திருவுள்ளமே என்று - தேவரீருக்குத் திருவுள்ளமோ? என்று; எண்ணில்...பாலறாவாயர் - எண்ணில்லாத பாக்கியங்களின் பயன்போன்றுள்ள பாலறாவாயராகிய பிள்ளையார்; மெய்ம்மை நோக்கி - உண்மைத் திறத்தை நோக்கி; வண்தமிழ்....நுவலலுற்றார் - வண்மையுடைய தமிழால் இயன்ற மாலையாகிய திருப்பதிகத்தைப் பாடியருள்வாராகி,
(வி-ரை) நோக்கிட விதியிலாரை நோக்கி - முன் "பாவகாரிகளை நோக்கும்" (2634) என்றதும், ஆண்டுரைத்தவையும் காண்க. விதி - நூல்களின் விதி; நோக்குதற்கும் நோக்கப்படுதற்கும் என இருபாலும் கொண்டுரைத்துக் கொள்க; அமணர்கள் பிள்ளையாரது அருள்நோக்கம் பெறுதற்கு அப்போது ஊழ்விதியுடையரல்லர் என்பதாம்; இப்பொருளில் விதி - ஊழ், நியதி என்று கொள்க.
நோக்கி - வாதுசெய்ய - திருவுள்ளமே - அமணரை நோக்குதலும் கூடாது; வாது செய்தலும் கூடாது; இரண்டும் சைவத்திறத்தில் விலக்கப்படும். தீயோரை நோக்குதலும் கூடாது என்ற விதியின் நுட்பம் முன்(2634) விளக்கப்பட்டது; நோக்குதலும் வாது செய்தலும் கூடாவெனின், இங்குப் பிள்ளையார் அவற்றைச் செய்ய முற்படுதல் தகுதியாமோ? எனின், கூறுதும்; "வாது செய்து மயங்கு மனத்தராயேது சொல்லுவீ ராகிலு மேழைகாள்!, யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம், மாதே வன்னலாற் றேவர்மற் றில்லையே" என்பது அரசுகளது ஆணை; ஏனைச் சமயங்களின் உண்மைகள் எல்லாம் சைவத்தில் ஒவ்வோர் அங்கமாயமைந்து அடங்குவன; ஆனால் சைவத்திறம் வேறெதனினும் அடங்காது; இவ்வாறு ஒவ்வோர் பகுதியாகிய சிலசில கொள்கைகளை மட்டில் கொண்ட சமயங்கள் தாந்தாம் முழு உண்மையும் கொண்டவை என்றகங்கரித்தெழுந்து உலக மாக்களை வஞ்சித்துப் பரசமயக் குழியில் வீழ்த்தக் கண்டபோது உலகம் ஏமாறாமல் உய்யும்பொருட்டு அவ்வவற்றின் உண்மை நிலைகளை இகலிலராய்த் திருவருள்வசமாய் நின்று வாது செய்து காட்டியருளுதல் உலகத்தை வழிப்படுத்தும் பெரியோர் கடமையாகும்; அன்றியும் நமது பெருஞ் செல்வங்களாகிய சைவக் கோயில்களையும், சைவக் கொள்கை நிலைகளையும், பிறசமயிகள் கவர்ந்து ஆக்கிரமித்தபோது நமது உடைமையை மீட்டுப் பாதுகாவல் செய்வதும் நமது கடமையாகும். இங்குப் பிள்ளையார் நிகழ்த்தியவை இம்மட்டே அடங்குவன; புறச்சமயங்கள் தம்மளவில் நில்லாமல் மேலெழுந்து கவரத் தொடங்கியபோது அச்செயலினின்றும் உலகம் ஏமாறாது காவல் புரிதலே பிள்ளையாரும் அரசுகளும்(பழையாறை வடதளி) இயற்றிய அருட்செயல்களாம். சமயங்கள் எவற்றையும் அழித்தல் சைவத்திறம் அன்று; எல்லாச் சமயங்களும் உயிர்களின் பக்குவ பேதம்பற்றி வேண்டப்படுவனவே; இவைபற்றி முன் 1562-ல் உரைத்தவையும், பிறவும் பார்க்க. சைவத்தின் உண்மைச் சமரசமாவது பக்குவபேதம்பற்றிப் படிமுறையால் எல்லாவற்றையும் அவ்வந்நிலையில் அமைத்துக் காணுவதேயாம். இதுவன்றிச் சிலசில சொற்களும் கருத்துக்களும் ஒன்றாக வருதல் கொண்டே எல்லாம் ஒன்று என்று கூவிச் சமரசங் காணுதல் போலிச் சமரசமென்றொழிக. அவையெல்லாம் சைவவுண்மைகளை உள்ளபடி உணர்ந்த தேசிகர்பால் ஒழுங்குபட உபதேசம்பெறாமலும், அனுபவத்தில் ஒழுகாமலும் போந்த குறையால் நேர்ந்த போலியுரைகளென்க.
தீக்கனல் மேனியானே - தீக்கனல் - ஒரு பொருட் பலசொல் தன்மை மிகுதி குறித்தது; மிக்க தீ என்க. தீ ஒன்றே அடுதலும் செய்யும்; சுடுதலால் காத்தலும் செய்யும். தீ மிகின் உயிர்போம்; தீ இன்றாயினும் உயி்போம்; எனவே, இங்கு அழித்தலும் காத்தலும் செய்யவல்ல திருமேனி கொண்டவர் என்பார் தீக்கனல் மேனி யென்றார் என்பதுமாம்; தீயினையும் எரிக்கும் தீப்போன்ற என்ற குறிப்புமாம். "நெருப்பையு மெரிக்கும்" (திருப்புகழ்); அமணர் இட்ட தீயினை மேம்பட்டு அதன் விளைவைப் பாறச் செய்வது என்பதுமாம். கனல் - கனல்கின்ற என்றலுமாம்.
"திருவுள்ளமே" என்று மெய்யமை நோக்கி - தேவரீருக்குத் திருவுள்ளந்தானோ? என்று இறைவரது மெய்ம்மையுள்ளே தாம் "அவனே தானே யாகிய அந்நெறி, யேகனாகி" நின்று நோக்கிக் கண்டு" என்க. அந்நிலையில் நின்றாரது உள்ளத்தில் உணரும்படி நல்குவன் இறைவன்; "சீர் அடியார் தங்கள் வழித்தொண்டை யுணரநல்கி" (341) முதலியவை பார்க்க; "அவனருளா லல்லது ஒன்றையும் செய்யா" ராகித் தம் வயமற்று அவனருளே கண்ணாகக் காணும் பெருமக்கள் சிவனது நிறைவினுள் அடங்கி எல்லாங் காண வல்லவராவர்; இந்நிலை அவ்வாறு நில்லாத பிறர்க்கு விளங்குதலரிது; நிமித்தமறிதல், திருவுளச்சீட்டு இடுதல், குறிபார்த்தல், பூக்கேட்டல் முதலியனவாக இந்நாள் வழங்கும் பலவும் இதன்வழியே அவ்வவர் தரத்துக்கேற்ப வந்தவை என்க; பின்னர்ப் பிள்ளையார், "திருமுறையினைத் தாமே நீற்று வண்கையால் நிமிர்"க்கத் (2680) திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏடுவர, அதனுள்ளே திருவருள் வெளிப்பாட்டினைக் காணும் நிகழ்ச்சியும் இக்கருத்தே பற்றியது.
எண்ணில் பாக்கியப்பயன் - அளவில்லாத ஆன்மாக்கள் செய்த அளவில்லாத தவங்களாற்பெற்ற பாக்கியங்களுக்கெல்லாம் இவரைப் பெறுதலே பயன் என்க. இதனை "எங்கள் பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ் சேக்கிழான்" என்று எமது பாக்கியப் பயனாகிய மாதவச் சிவஞான முனிவர், ஆசிரியர் சேக்கிழார் பெருந்தகையாருக்கு ஆக்கி எடுத்தாண்டு இதன் அரும்பொருளை விளக்கியருளியமை காண்க.
பாலறாவாயர்
- அம்மையார் ஊட்டியருளிய ஞானப்பாலின் மணம் இடையறாது கமழ்ந்து ஞானவாக்குப் பிறந்து வரும் திருவாய் என்பதாம்; ஆதலின் அந்தச் சிவஞான வயத்தால் இறைவரது திருவுள்ளத்தை நோக்கிக் கண்டனர் என்பது குறிக்க இப்பெயரால் ஈண்டுக் கூறினார்; "சுந்தரப்பொற் றோணிமிசை யிருந்தபிரா னுடனமர்ந்த துணைவி யாகும், பைந்தொடியா டிருமுலையின் பாலறா மதுரமொழிப் பவளவாயர்"(1995) என இக்கருத்தை ஆசிரியர் முன்னர் விளக்கியருளியதனை நினைவுகூர்க. இப்பெயர்ச் சிறப்பையும் அருமையினையும் நோக்கியே பின்வந்த பெரியார்கள் தம் மக்களுக்கு இப்பெயரை இட்டு வழங்கிப் பயன்பெறும் உலக வழக்கு உளதாயிற்று; ஆசிரியரது தம்பியார் "பாலறாவாயர்" என்ற பெயர் சூட்டப்பெற்ற வழக்கும் கருதுக.
வண்தமிழ் செய்மாலை - வண்மையாவது அறத்தாற்றின் நின்று அருள்வழியே சென்று உயிர்க்குறுதி காட்டுதல்; அமணர்பால் ஈண்டுத், திருவருள் மறக்கருணையாய்ச் செல்லும் நியதியின் விளைவின் வெளிப்பாட்டுக்குக் காரணமாதல்பற்றி அவர் திறத்தும் வண்மையாயிற்றென்க.
நுவல லுற்றார் - உற்றாராகிப் பாடி என்று முற்றெச்சமாக்கி மேல்வரும் பாட்டுடன் முடிக்க.