பாடல் எண் :2638
"ஆலமே யமுத மாக வுண்டுவா னவர்க்க ளித்துக்;
காலனை மார்க்கண் டர்க்காக் காய்ந்தனை; யடியேற் கின்று
ஞாலநின் புகழே யாக வேண்டு; நான் மறைக ளேத்துஞ்
சீலமே! யால வாயிற் சிவபெரு மானே!" யென்றார்.
740
(இ-ள்) நான்மறைகளேத்தும்...சிவபெருமானே! - நான்கு வேதங்கள் போற்றுகின்ற சீலமானவரே! திருவாலவாயில் எழுந்தருளிய சிவபெருமானே!; ஆலமே...காய்ந்தனை - தேவரீர் விடத்தையே அமுதமாக உண்டு, தேவர்களுக்கருள் அளித்ததனோடு மார்க்கண்டனுக்காகக் காலனையும் உதைத்துருட்டிளீர்!; அடியேற்கு இன்று ஞாலம் நின்புகழே ஆகவேண்டும் - இன்று அடியேனுக்கு இந்த நிலவுலகம் முழுதும் தேவரீரது புகழே ஆகப் பரவுதல் வேண்டும்; என்றார் - என்று விண்ணப்பித்தார்.
(வி-ரை) நான்மறைகள் ஏத்தும் சீலமே! என்றும், ஆலவாயிற் சிவபெருமானே! என்றும் இரண்டு தன்மைகளால் இறைவரை விளித்து, ஆல மமுதாக உண்டு வானவர்க் களித்ததும், காலனை மார்க்கண்டர்க்காகக் காய்ந்ததும் என்ற இரண்டு அருளிப்பாடுகளைப் பற்றிப் போற்றினார்; இவற்றினைக் கண்டு அடியேனும், இன்று அடியேற்காக ஞாலம் நின்புகழே மிக வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன் என்றபடி.
சீலம் - என்றது மறைகளாற் போற்றப்படம் சொரூபம் என்னும் (இறைவரது) சிறப்பிலக்கணம். "சீலமோ வுலகம் போலத் தெரிப்பரிது" என்புழிச் சீலம் இப்பொருட்டாதல் காண்க.(சித்தி - 1-50); சங்கார காரணனாயுள்ள தனி முதல்வன்.
ஆலவாயிற் சிவபெருமான் - என்றது ஐந்தொழில் செய்வதற்கு உன்முகமாகி நிற்கும் தடத்தம் என்னும் (இறைவரது) பொதுவிலக்கணம்.
ஆலமே அமுதமாக உண்டு வானவர்க் களித்தல் - அறக்கருணை; காலனைக் காய்தல் - மறக்கருணை; ஈண்டு இரண்டும் செயத்தக்க தென்பது குறிப்பு.
ஆலமே யமுதமாக உண்டு - "ஆலத்தி னாலமிர் தாக்கிய கோன்" (திருக்கோவை) தடையாயிருந்த தத்துவங்களால் சுத்தி செய்து சிவானுபவத்துக்குத் துணையாகுமாறு செய்தல் குறிப்பு.
வானவர்க்களித்து - சிறப்பாய்ப் பாண்டி நாட்டவர்க்கும் பொதுவாகச் சைவவுலகத்துக்கும் புரிதல் குறித்து நின்றது; வானவரை மயக்க எழுந்து வருத்திய விடத்தை ஒடுக்கித் தன் அளவில் அடக்கி வைத்தது போலப், பாண்டியனையும் பாண்டி நாட்டவரையும், அரனடியாரையும் மயக்கிப் பொய் மிகுத்து மறைவழக்கம் அருகிப் பூதிசாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழிய மேல் எழுந்து பரவிய சமண்கையர் சாக்கியர் தம் பொய்ந்நெறியினை மேலடராது ஒடுக்கித் தம் அளவில் நிறுத்தி என்ற குறிப்புப்படநின்றது.
மார்க்கண்டர்க்காக் காய்ந்து - மார்க்கண்டரை முன்னிலையாகக் கொண்டு காலனைக் காய்ந்த செயல்; அஃது அவர்களுக்கேயன்றி அடியவர்க்கெல்லா மாகியவாறு போல, ஈண்டு இதனை, "இன்று அடியேற்காக" வேண்டினும் இப்பயன் அடியார்க்கெல்லாமாகுதல் வேண்டும் என்பது குறிப்பு. "ஞால நின்புகழே மிக வேண்டும்" (தேவா) என்ற கருத்துக் காண்க. காலன் மார்க்கண்டரை அடரவந்தமைபோல ஈண்டுச் சமணரும் பிள்ளையார்பால் தீத்தொழில் செய்தமையும் கருதுக. "கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவர்க்கா"(தேவா). மிருகண்டர் மகன் மார்க்கண்டர் என்பது வடமொழியியல்.
அடியேற்கின்று ஞாலம் நின்புகழேயாக வேண்டும் - "ஞால நின்புகழே மிக வேண்டும்" என்ற தேவாரக் கருத்துரைத்தபடி.
நான்மறைக ளேத்தும் சீலமே! - சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்கருளும் கருணையே சீலம் எனப்பட்டது. "பாதி மாதுட னாய பரமனே!" (தேவா) என்ற பதிகக் கருத்து. இங்குச் சீலம் என்றது சிவனது இறைமைக் குணத்தை என்பது "நான்மறைக ளேத்தும்" என்ற விசேடணத்தால் அறிக: சீலமுடையாரைச் சீலம் என்றுபசரித்தார். "விடந்தனையுண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த, சீலங் கண்டு"(நம்பி. புன்கூர் - தக்கேசி - 5) என்ற கருத்துக் காண்க. சமணர்கள் கொண்ட கொள்கையாகிய அறம் - சீலம் - இவை வேறு; இங்குக் கூறிய சீலம் வேறு; சொற்பெயர் ஒற்றுமை கருதியே இவையிரண்டும் ஒன்றென மயங்கிக் கொண்டு ஆதி சமணர் இச்சீலத்தைப் பொருளாகக் கொண்டு வழிபாடு செய்தனர் என்றும், பிற்காலச் சமணர் அதனினின்றும் பிறழ்த்தனால் அத்தீமையைக் களையப் போந்தனர் பிள்ளையார் என்றும், பலவாறும் மயங்க வைக்கும் திரிபாகிய விசேட ஆராய்ச்சிகள் ஈண்டுச் செய்வாருமுண்டு; அவை பொருந்தாமை முன்னர்க் காட்டப்பட்டது; பின்னுங் காண்க.
ஞாலம் நின்புகழே மிகவேண்டும் என்றதனால் அற்றை ஞான்று அரன்புகழ் ஞாலத்தில் மிகாது குன்றி நிகழ்ந்த தென்பது பெறப்படும்; படவே அந்நிலையை நீக்கி அரன் புகழ் உலகு எங்கும் பரவச் செய்தலையே பிள்ளையார் வேண்டினர் என்பதும் பெறப்படும்; "மேதினிமேற் சமண்கையர் சாக்கியர்தம் பொய்மிகுத்தே, ஆதி யரு மறைவழக்க மருகியர னடியார்பாற், பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்டு" (1916) என்றது காண்க. "ஆழ்க தீயது எல்லா மரனாமமே, சூழ்க"(பாசுரம்) என்று இதன் முடிவில் வேண்டிய திருவாக்கும் கருதுக.
ஆலவாயிற் சிவபெருமானே! - எங்கும் நிறைந்து விளங்கும் அக்கருணை வெளிப்பட்டருளும் இடமாவது இஃது என்றதாம். "மண்ணகத்திலும் வானிலுமெங்குமாந், திண்ணகத் திருவால வாயாய்"(கொளசிகம் - 3).
மார்க்கண்டிக்கா - என்பதும் பாடம். இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.