பாடல் எண் :2642
கண்ணினுக் கணியா யுள்ளா ரெழுச்சியிற் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு நம்பின ரெனினு முன்பு
"பண்ணிய தவங்க ளென்கொல் பஞ்சவன் றஞ்ச மேவிப்
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையிற் புகுத" வென்றார்.
744

(இ-ள்) கண்ணினுக்கு.......எனினும் - கண்ணினுக்குரிய அணியாக விளங்கும் பிள்ளையாரது திருவெழுச்சியின் காட்சியினைப் பெற்ற அந்நகர மாந்தர்கள் தாங்கள் சார்ந்த சமணமாகிய வேற்றுச் சமயத்தை நம்பினராயினும்; பஞ்சவன் தஞ்சம் மேவி - பாண்டியன் அடைக்கலம் புகும் பொருளாகப் பொருந்தி; புண்ணிய....புகுத - புண்ணிய வடிவினராகிய இவர் தாமே வந்து மதுரையிற் புகுவதற்கு; பண்ணிய தவங்கள் என்கொல்? - (இப்பாண்டியன்) முன்னே செய்த தவங்கள் தாம் எவையோ? என்றார் - என்று சொன்னார்கள்.
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
(வி-ரை) கண்ணினுக்கு அணியாய் உள்ளார் - கட்புலனுகர்ச்சிக்குப் பேரழகுடையராய் விளங்கும் பிள்ளையார்; செவி - கை முதலியவற்றுக்குப் போலக் கண்ணுக்கு அணிகலம் இடுவாரிலர்; ஏனையவற்றிற் சிறப்புடைய கண்ணுக்கணியின்றி யிருத்தல் சாலாமையின் சிறந்த அதற்குச் சிறந்த அணியே வேண்டும்; அச்சிறந்த அணியாவது பிள்ளையாரது அழகினைக் காண்டலே யாம் என்பது. "நாவினுக் கருங்கல நமச்சி வாயவே"(அரசு - தேவா); "கண்ணுக் கணிகலங் கண்ணோட்டம்"(குறள்) என்பனவாதி கருத்துக்கள் காண்க.
உள்ளார் எழுச்சி - உள்ளாரது எழுச்சி; ஆறாம் வேற்றுமைத் தொகை.
எழுச்சியிற் காட்சி பெற்றார் - எழுச்சியினைக் கண்ணாரக் காணும் பேறு பெற்றவர்கள்.
வேறு சமயம் நண்ணினர் நம்பினர் எனினும் - காட்சி பெற்றார் என்றார் - என்று கூட்டுக. நண்ணிய, என்றதனால் முன்பு தொன்ற தொட்டு வரும் தமது சமயமல்லாது புதிது புகுந்த சமயம் என்றும், வேறு-என்றதனால் அது புறச் சமய மென்றும், நம்பினர். எனினும் - என்றார் - என்றதனால் அதில்கொண்ட நம்பிக்கை புறத்தளவில் ஒழிய அதனை அடிப்படுத்தி உள்ளூற நின்ற முன்னைய வுண்மை யுணர்வே மேம்பட்டு வெளி வந்தது என்றும் கூறியது கண்டு கொள்க.
எழுச்சியிற் காட்சி பெற்றார் - இவர்கள் நகரமாந்தர். சமணத்திற் புதிதாகப் புக்கவர்கள்; சமணக் குருமார் வேறு; அவர்களே கண்டு முட்டு முதலிய கொடிய கொள்கை பற்றி நின்று வாதில் வென்றழிக்கப்பட்டவர் என்பதறிதல் வேண்டும்; அக்குருமார் வயப்பட்டு எழுச்சி காணாது சென்றோரும், அன்றிப் பொறாமை உணர்வின்மை, ஊழின்மை, அறியாமை, மடிமை முதலியவற்றால் காணாது ஒழிந்தோரும் நீங்க, ஏனையார்களில் எழுச்சியின் காட்சிப் பேறு பெற்ற நகர மாந்தர்கள் என்பதாம்.
"முன்பு பண்ணிய...புகுத" என்றார் - முன்பு - முற்பிறவிகளில்; "படிமுறையானன்றி இவ்வொரு பிறவியிற் செய்த தவந்தானே அமையாதென்பது உணர்த்துதற்கு முற் செய்த தவம் என விசேடித்தார்" என்று வரும் சிவஞான போதக்(8-சூத்) கருத்துக்கள் காண்க. அன்றியும், இப்பிறவியில் அரசன் சமணரது மாயத்தழுந்தி அபசாரப்பட்டுக் கிடத்தலால், இப்பேறு கிடைத்தற்குரிய தவம் ஏதும் செய்தில னாதலின் இது முன்பு பண்ணிய தவங்களின் பயனாகப் பெற்றபே றென்றார்; தவங்கள் - ஒரு வகையாலன்றிப் பல படியாகவும் தவங்கள் செய்திருந்தாலான்றி இது பெறுதல் அரிதாம் என்பது.
என்கொல்? - எவையோ? யாம் அறியோம் என்றபடி. எதிர்மறை அனுமானத்தால் முன்னைத் தவங்களுண்டென்று நிச்சயித்துக் காண்பதன்றி அவை இன்னவென்ப தறிகின்றிலம் என்றார் என்க.
பஞ்சவன் தஞ்சம் மேவி - பஞ்சவன் - பாண்டியன்; தஞ்சம் - அடைக்கலம் புகுமிடம்; மேவி - தாமாகமுன் வந்து; பஞ்சவனுக்கு அடைக்கலம் புகுமிடமாகத் தாமே வலிய எழுந்தருளி; நான்கனுருபு தொக்கது.
புண்ணியமூர்த்தி - புண்ணியமே வடிவாக வுடையவர்;
மூர்த்தி - மூர்த்திமான் உண்ணிறைந்து இருத்தற்கிடம் மூர்த்தி எனப்படும்; ஆசனம் - மூர்த்தி - மூர்த்திமான் என்னும் சிவாகம மரபு காண்க.
வந்து - புகுத - அறியாது கிடக்கும் அரசன் முன்பு தாமே எழுந்தருளி வந்து புகுவதற்கு.
எழுச்சியிற் காட்சி பெற்றார் - தவங்கள் என்கொல் - என்றார் - காட்சி என்பது அகப்பொரு ணிகழ்ச்சிகளில் முதலில் நிகழ்வது; அதன் பின்பு ஐயம், தெளிதல், நயப்பு, உட்கோள், தெய்வத்தை மதிழ்தல் என்பன முறையே நிகழ்வன. அவற்றினியல்பு எல்லாம் அகப்பொருளிலக்கியமாகிய திருக்கோவையாருள்ளும், பொருளிலக்கணத்துள்ளும் விரிக்கப்படும். ஆண்டுக் கண்டு கொள்க. ஈண்டுப் பிள்ளையாரது எழுச்சியினால் இருபாலும் காட்சி என்ற நிகழ்ச்சியுட்படும் நல் ஊழ்பெற்றோர் பஞ்சவன் தஞ்சமாக வந்து இப்புண்ணிய மூர்த்தி தாமே நமது மதுரையிற் புகுந்து எங்களுக்குக் காட்சியருளி ஆட்கொள்ள வந்த பெருமையினைப் பெற நாங்கள் முன்னையிற் செய்த நல்ல புண்ணியம் தான் என்னே? எனப் பிறிதொரு பொருளும் குறிப்பிற் பெறப்படுதல் காண்க; "இக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த, விளைவையல் லால்விய வேனய வேண்றெய்வ மிக்கனவே"(திருக்கோவை - 6)" "பிணியு மதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும், பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே" (மேற்படி - 5) முதலிய திருவாக்குக்களின் கருத்துக்கள் ஈண்டு வைத்துக் கருதத்தக்கன.
சமணர் கொளுவிய தீ பிள்ளையார்பால் அணுகாது, கொளுவுதற் கிசைந்த அவர்களது அரசன்பாலே அணுகி அவர் ஆணையினால் தீப்பிணியாய் எழுந்ததுவும், அப்பிணியினைத் தீர்த்தற்கும் அவரருளே ஆணையாய் எழுந்து போதுவதும் என்றிவ்வொரு காட்சி கண்ட துணையானே, தாம் முன் கொண்டமையல் நீங்கினவர் இங்குக் கூறும் நகரமாந்தர்; இனி, இதன்மேல், பிள்ளையாரது ஆணையினால் மருவும் தீப்பிணி நோய் தீர்ந்து வழுதியு முழுதும் உய்ந்தமையும், அனல் வாதத்திற் பிள்ளையாரது அருளின் வெற்றிப்பாடும் கண்டு புனல் வாதத்தினை மேற்கொண்டு பிள்ளையார் எழுந்தது போது வதனைக் காணும் நகர மாந்தர்களாகிய மாதர் மைந்தர்கள், அக்காட்சித் துணையாக "நம் விழுமந் தீர்த்த ஞானசம் பந்த ரிந்த நாயனார் காணீர்"(2700); "நாதனு மால வாயி னம்பனே காணும்"(2702); "போற்றுவா ரெல்லாஞ் சைவ நெறியினைப் போற்றும்"(2706) என்பனவாதியாக மேலும் உண்மையுணர்ந்து கூறும் உயர்தரம் காண்க; இவர்கள் முன் கூறியவர்களின் அடுத்த மேல்தரமாகிய பக்குவமுடையோர்; இனி, அதன் மேல் வைகைக் கரையாகிய தீட்சா மண்டபத்தில் பாண்டியனுக்குப் பெருங் குருவாகிய பிள்ளையார் திருப்பாசுரத்தால் ஞானோபதேசம் செய்து ஆட்கொண்டு திருநீறு அளித்தபோது புனல் வாதத்தின் வெற்றியும் கண்டு, தாமும் உய்ந்து, "மற்றவன் மதுரை வாழ்வார், துன்னி நின்றார்க ளெல்லாந் தூயநீ றணிந்து கொண்டா ராகி"(2755) ஆட் கொள்ளப் பட்டவர் அதற்கடுத்த மேல்தரமாகிய பக்குவமுடைய நகர மாந்தர்; என்றிவ்வாறு பலதிறப்பட்ட பக்குவான் மாக்களுக்கும் எமது ஞான குருநாதர் அருளிச் செய்த பலதிறப்பட்ட அருளின் வண்ணங்களைக் கண்டு கொள்க.