மந்திரி யாரைப் பின்னு மெதிர்செல மன்ன னேவச் சிந்தையுண் மகிழ்ந்து போந்தார்;செயலையான் சமயத் துள்ளோர் பைந்துண ரலங்கன் மன்னன் பரிசுகண் "டிதுவோ பண்பால் நந்தனிச் சமயந் தன்னை நாட்டுமா?" றென்று பின்னும், | 747 | (இ-ள்) மந்திரியாரை....ஏவ - மேலும், எதிர் சென்றழைத்து வரும் படி அமைச்சனாரை அரசன் ஏவியிட; சிந்தையுள் மகிழ்ந்து போந்தார் - மனத்தினுள் மிக மகிழ்ச்சி கொண்டு அவரும் போந்தனர்; செயலையான்...கண்டு - அசோகினனாகிய அருகனது செயத்தில் உள்ள அமணர்கள் பசிய கொத்துக்களாலாகிய வேப்ப மாலையை அணிந்த மார்பையுடைய பாண்டிய அரசனது தன்மையினைக் கண்டு; "இதுவோ.....நாட்டுமாறு?" என்று - நமது ஒப்பற்ற சமயத்தினைப் பண்பினால் நாட்டும் வழியிதுவோ? என்று கூறி; பின்னும் -மேலும் சொல்வார்களாய், (வி-ரை) மந்திரியாரை....ஏவ - பின்னும் - பொற்பீடம் முடியின் பக்கத்திடுக என வேவியதனோ டமையாது மேலும்; எதிர்கொள - முன் சென்று பிள்ளையாரை எதிர் கொண்டு அழைத்து வரும்படி; ஆசனத்தை முன்னே கற்பித்துப் பின் மூர்த்தியை அழைத்து அதில் எழுந்தருள வைத்துப் பூசிக்கும் முறை கருதுக; பிள்ளையாரது வருகையைத் தானும் கேட்டுமுட்டு என்று வருந்தியும், திருமடத்தில் வெந்தழற்பட விஞ்சை மந்திரத்தொழில் விளைக்க அமணர்க்குடன்பட்டிருந்தும, (2557) கவலையோடு முகம்புலர்ந்து(2588) அவரை நகரினின்றும் வெளிப் போக்க எண்ணியது முன்னை நாளிரவில் அரசனது நிலை; இது "காரிட்ட ஆணவக் கருவறையிலறிவற்ற கண்ணிலாக் குழலி" என்றபடி மலத்தாற் கட்டுண்டு நன்மை தீமை யறியாது "நன்றேல்லாந் தீதாயுந் தீதெல்லா நன்றாயும், கன்றி வரும்" உயிர்களின் நிலை; அவ்வான்மாக்கள்பால் இறைவரது திரோதான சறதி பிறவி வெம்மைப் பிணியின் உருவில் போந்து தொழில் செய்யச் செய்ய அவ்வாணவ இருள் சிறிதுசிறிதாக நீங்கி நல்லறிவு படிப்படியாக வெளிப்பட்டு நற்றொழிலில் செலுத்தும் என்பது ஞான நூற்றுணிபு; ஈண்டு, "அமணர் கொளுவும் சுடர், பைய வேசென்று பாண்டியற் காகவே" என்ற அருளிப்பாடாகிய நோய் தொழிற்படவே, முன்னர் வெறுப்புக்கொண்டு வெளிப்போக்க எண்ணியது மாறிப், பிள்ளையாரது வருகையில் விருப்பம் உண்டாயிற்று; அவரது நாம மந்திரமும் கூறி, அவர் விரும்பி நோக்கிற், றீயவிப் பிணியே யன்றிப் பிறவியும் தீரும் என்றபோது அவர் வந்தால் அவரது அருளா லிந்நோ யகலுமேல் அறிவேன் என்று(2620) அவரை அழைத்து வரை வுடன்பாடு விளைத்தது; அவர் வரவு கூற அவருக்குத் தன் முடியின் பக்கத்துப் பீடம் இடுக(2644) என்று கூறச் செய்தது; அதன் மேலும் எதிர் கொளும்படி அமைச்சரை ஏவச் செய்தது - (2645); முன்னர் அமணர் சொல்லு மெல்லாவற்றுக்கும் உடன்பட்டுநின்ற நிலை நீங்கிச் செய்தவப்பயன் வந்தெய்தும் செவ்விமுன் உறுதலாலே அமணர் கூற்றை மறுத்துக் "கைதவம் பேச மாட்டேன்"(2647) என்னவும், பிள்ளையார் எழுந்தருளியதனைக் காணப்பெற்றபோது கையெடுத் தெய்த நோக்கி முடியின் பாங்கர்த் தமனியப்பிடீங் காட்டவும், "கெழுவுறு பதியாதென்று விருப்புடன் கேட்கவும்"(2651) ஆகும் நிலைகளையும் செய்தது; அருள் பதியப் பதியப் இருள் படிப்படியாக நீங்குதலும், நலம் அங்கங்கும் விளைதலும் இவ்வாறு பின் "தேனலர் கொன்றை யார்தந் திருநெறி நடந்ததன்றே"(2758) என்பது ஈறாக வரும் எல்லா நிகழ்ச்சிகளிலும் படிமுறையில் வைத்து அங்கங்கே ஆசிரியர் காட்டக் கண்டுகொள்க; 2667 - 2668 - 2670 - 2690 - 2716 - 2717 -2718 - 2755 - முதலியவை பார்க்க. சிந்தையுண் மகிழ்ந்து - இதுவரைஅரசனது நலங்கருதித் தாமே செய்துவந்த அரசகாரியமாகிய பிள்ளையாரது வரவேற்பினை முன் அரசியார் ஏவல்வழி யமைந்து (2543) செய்ய நேர்ந்ததுபோல, இப்போது அரசனும் உடன்பட்டுப் பீடம் அமைக்கவும் எதிர் செல்லவும் ஏவியமையால் மகிழ்ந்தனர். செயலையான் - அருகன்; செயலை - அசோகமரம்; அசோகமரத்தின்கீழ் உள்ளவன் அருகக்கடவுள் என்பர். "செயலைத் தண்டளிர்" (முருகு). மன்னர் பரிசு - இவ்வாறு பிள்ளையாரை வரச்செய்து உபசரிக்க ஒருப்பட்டு முற்பட்ட தன்னை. இதுவோ.......நாட்டுமாறு - இது அமணர் அரசனுக்குச் சொல்லியது; தீமை செய்தேனும் தம் சமய நிலையை நாட்டுவது என்ற அமணரது கொள்கைக்கேற்பக் கூறியது; மேலும் தொடர்ந்து மேல்வரும் பாட்டிற் கூறும் நிலையும் காண்க. இதுவோ - ஓகாரம் இது அன்று என எதிர்மறை குறித்தது. பின்னும் - என்றார் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
|
|