பாடல் எண் :2646
"நின்னற நெறியை நீயே காத்தருள் செய்தி யாகில்
அன்னவர் தம்மை யிங்கே யழைத்தனை யவரும் யாமும்
முன்னுற வொக்கத் தீர்க்க மொழிந்துமற் றவராற் றீர்ந்த
தென்னனும் யாமுந் தீர்த்தோ மாகவு மிசைவா" யென்றார்
748
(இ-ள்) நின்...ஆகில் - உனது அறநெறியாகிய சமயத்தை நீயே காத்தருள செய்வாயானால்; அன்னவா.... அழைத்தனை - அவரை இங்கே வரும்படி அழைத்தாய்; (அவ்வாறு அழைத்தாலும்); அவரும்......மொழிந்து - அவரும் நாங்களும் உனது முன்னே ஒருங்கு கூடி இந்நோயைத் தீர்க்கும்படி சொல்லி; மற்று.....இசைவாய் என்றார் - மற்று அவரால் நோய் தீர்ந்தாலும் நாங்களும் தீர்த்தோம் என்று சொல்ல உடன் படுவாயாக என்று சொன்னார்கள்.
இந்த(2645,2646) இரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன.
(வி-ரை) நின் அறநெறியை நீயே காத்தருள் செய்தியாகில் - நின் அறநெறியை - என்று அச்சமயத்தை அரசனது உடைமையாகக் கூறியது அரசனைத் தமது செயலுக்கு உடற்படுத்துதற் கருத்து; நந்தனிச்சமயம் என முன்பாட்டில் அரசனையும் தம்முடன் உளப்படுத்திக் கூறியதும், தமது நெறியின் மேம்பாடு காட்டிக் கூறியதும் இக்கருத்து; "தலைநெறியா கியசமயந் தன்னையழித் துன்னுடைய, நிலை நின்ற தொல்வரம்பி னெறியழித்த பொறியிலியை, அலைபுரிவாய்" (1354) என்று பாடலி புரத்தில் அமணர் பல்லவனுக்கும் இவ்வாறே உரைத்த கருத்தும் காண்க. இஃது அரசனே சமய காவலனாவான் என்ற பொதுவழியை அமணர் தமது நலங்கருதிப் பயன்படுத்திக்கொண்டமுறை. செய்தியாகில்- செய்வாயானால்;
நீயே காத்தருள் செய்தியாகில் என்றது சமயநெறி உனது உடைமை; உன் உடைமையைக் காத்தல் உனது கடமை; அரச கடமைகளிற் றிறம்பாது ஒழுக நீ மறுக்கமாட்டாய்; அற்றாகலின் - என்று அமணர் தமது தீய கருத்தைப் புகட்டுதற்கு முன்னுரை - பீடிகை - கூறியபடி. செய்தியாகில் - இசைவாய் என்று கூட்டுக.
அன்னவர் தம்மை இங்கே யழைத்தனை - சமயநிலையின் படி காணக்கூடாத அவரை - அழைக்கக்கூடாத அவரை - நகரைவிட்டுப் போக்குதற்குரிய அவரை - அவ்வாறே நீ அனுமதித்து உனது குரவர்களாகிய நாங்கள் முன் இரவு - "தீத்தொழில் விளைத்த அவரை - என்று இவ்வாறு பல குறிப்புக்களும் பெற அன்னவர் தம்மை என்று முன்னறிசுட்டினாற் கூறினார்;
அழைத்தனை - அழைத்தல் அடாத செயலே; ஆயினும் சில காரணம்பற்றி அழைத்துவிட்டாய்; இருந்தபோதிலும் நமது சமய காவலின் பொருட்டு அவ்வடாத செயல்தீர, இனி மேற்கொள்ளத்தக்கது நாம் கூறுமாறு இசையும் இஃது என மேற்கூறுதற்குரிய காரணமும் அமைதியும் காட்டியபடி.
அவரும்....இசைவாய் - சமயக் கொள்கைக்கு மாறுபாடானதொரு அடாத செயலைச் செய்ய நேர்ந்தபோது மேலும் சமயநெறி வழுவாது அதனைத் தீர்க்கவல்லதொரு உபாயம் கைக்கொள்ளத்தக்கது என்பது முறை; இவ்விடத்தில் அத்தகைய உபாயம் இதுவேயாம் என்று அரசனை இசைவுபடப் புகட்டியபடி; "இக்கூற்றால் அக்காலச் சமணர் உண்மைச் சமணத்தின் செந்நெறியினின்றும் வழுக்கி வீழ்ந்தவர் என்பது வெள்ளிடை மலையென விளங்குதல் காண்க" என ஈண்டு விசேட ஆராய்ச்சியுரை செய்வாருமுண்டு; இது தவறான ஆராய்ச்சி முறை என்பதை முன்னர்ப் பல விடத்தும் எடுத்துக் காட்டினாம்; "கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம்" (1302); "கொலையும் பொய்ம்மையு மிலமென்று கொடுந்தொழில் புரிவோர்" (1346); "கொலைபுரியா நிலைகொண்டு பொய்யொழுகு மமண்குண்டர் " (1354) முதலியவையும் பிறவும் காண்க. சமயத்திற்காகக் கொலை முதலியவும் செய்யத்தகும் என்னும் கொள்கை சமண சமயத்துக்கு மட்டுமேயன்றி, மற்றும் புறமும் அகமுமாகிய கூறுபாடுடைய பல சமயங்களினும் காணப்படும் என்பது அவ்வவற்றின் நூல்களானும், சரித வரலாறுகளானும் அறியப்படும் உண்மை; முற்பாலமோ இடைக்காலமோ எதுவாயினும் சமண சமயம் இக்கொள்கையைக் கொண்டிருந்ததென்பது தேற்றம்;
ஆதலின் முற்காலச் சமணம் வேறு - அது உயர்ந்த நிலையினது என்றும், பிற்காலச் சமணம் அதனின்றும் வீழ்ந்துபட்டதென்றும், பிறவும் இங்குச் செய்யும் ஆராய்ச்சிகள் ஒரு சார்புபற்றி எழுந்த மயக்க உணர்வு காரணமாக வருவன என்க. 1344 - 1347 - பாட்டுக்களினும், "நினையாதொரு போது மிருந்தறியேன்" (பதிகப்பாட்டுக் குறிப்பு - III பக்கம் - 87) என்றவிடத்தும், பிறாண்டும் உரைத்த சமயநிலை பற்றிய குறிப்புக்களும் ஈண்டு மனங்கொள்ளத்தக்கன; சைவத்திறத்தில் இதுபோன்று வருவனவற்றின் உள்ளுறையிம் இதற்கும் சைவநிலைக்கும் உள்ள வேறுபாடும், தண்டியடிகணாயனார் புராணம் (7), கோட்புலி நாயனார் புராணம், எறிபத்த நாயனார் புராணம் முதலியவற்றுட் கண்டு கொள்க.
இசைவாய் என்றார் - இங்கு அமணர் இவ்வாறு பொய்ம்மையுள் இசையும்படி புகட்டியது சமயக்காவலை மேற்கொண்டதும், தமது விருத்தியினையுட் கொண்டதும் ஆம்.
அறநெறியை - இவ்வமணர் இப்பொய்ம்மையைத் தம் சமயக் கொள்கையாக மேற்கொண்டனர் என்பது குறிக்க இங்கு அறநெறி என்றார். முன்பாட்டிற் "செயலை யான் சமயத்துள்ளோர்"(2645) என்றும், "தனிச்சமயம்" என்றும், மேல்வரம் பாட்டில் "பொய் தவமாகக் கொண்ட"(2647) என்றும் கூறுதல் இக்கருத்துடையன.