பொய்தவ மாகக் கொண்ட புன்றலைச் சமணர் கூறச் செய்தவப் பயன்பந் தெய்துஞ் செவ்விமுன் னுறுத லாலே "யெய்திய தெய்வச் சார்வா லிருதிறத் தீருந் தீருங்; கைதவம் பேசமாட்டே;" னென்றுகை தவனுஞ் சொன்னார். | 749 | (இ-ள்) பொய்தவமாக....கூற - (மேற்கண்டவாறு) பொய்யைத் தவமாகக் கொண்ட புன்மை பொருந்திய தலையினையுடைய அமணர்கள் சொல்ல; செய்தவப் பயன்....உறுதலாலே - முன் செய்த தவத்தின் பயன் வந்து பயன்தரும் பக்குவம் முன்வந்து பொருந்துதலினாலே; எய்திய.....சொன்னான் - சேர்ந்த உங்கள் தெய்வங்களின் சார்பினாலே இருபக்கத்தீர்களும் தீருங்கள்; நான் நடுநிலை கோடி வஞ்சகம் பேசமாட்டேன் என்று பாண்டியனும் சொன்னான். (வி-ரை) பொய்தவமாகக் கொண்ட - பொய்யினையே தவமாக மேற்கொண்ட; முன்பாட்டில் அமணர் கூறியதனை அனுவதித்துக் காட்டியபடி; 2689 பார்க்க. தலைமயிர் பறித்தலை ஒரு தவமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பு. புன்தலை - புல்லிய - புன்மையுடைய - தலை; புன்மையாவது மயிர் பறித்தலாலும், பிராணிபடும் என்று கழுவாது விடுதலாலும் இழிவுபடுதல். செய்தவப்பயன்....உறுதல் - பாண்டியன் முன்னைப் பிறவியிற் செய்த தவப்பயன் பக்குவப்பட்டு வந்து கூடும் சமயம் வாய்த்தல்; இதுகாறும் சமணர்களுடன் கூடி அவர்களது தீமைகளுக்கு உடன்பட்டு நன்மையறியாது நின்ற அரசன் இப்போது அவர்கள் கூற்றை மாறுபட்டு அவர்தங் கொள்கைக்கு உடன்பட மறுத்து நடுநிலையினின்றும் பிறழமாட்டேன் என்றது; கைதவம் பேசமாட்டேன் - என்று கூறவந்த நிலை முன்னைத் தவத்தாலாகியது என்பது; அற்றாயின் அந்த முன்னைத்தவம் இதுகாறும் அமணர்க்குடன்பட்டபோது கைகொடாது நின்றதென்னையோ? எனின், முன்னைத் தவம் பக்குவப்பட்டு வந்து கூடும் காலத்தேதான் வெளிப்பட்டுப் பயன்படும் என்க. செவ்வி - தவப்பயன் வந்துகூடிப் பலிக்கும் பரிபக்குவ காலம்; பின்னர் "பினைக ளொத்துத் துலையென நிற்றலாலே"(2717). உறுதலாலே - என்று - சொன்னான் - என்று கூட்டுக. முன்னைத் தவப்பயன் வரும் செவ்வி கூடியிராதாயின் முன்போலவே அமணரது மாயைக்குட்பட்டு நிற்பன என்பதாம். எய்திய தெய்வச் சார்வால் - நீங்கள் தனித்தனி பொருந்திய தெய்வங்களின் சார்பாகிய பலத்தினால்; அவ்வவரின் தெய்வ பத்தினால். "மருத்து நூலவர்......தொழில் யாவையும் செய்யவும் மேன்மேல், உருத்தெ ழுந்தவெப் புயிரையும் உருக குவதா"யிற்று(2611); ஆதலின், மருந்தினா லன்றி மணி மந்திரங்களாகிய தெய்வபலத்தினாலேதான் தீரத்தக்கதென்று கண்டறிந்துகொண்ட அரசன் கூறியபடி. இருதிறத்தீரும் தீரும் - இருபக்கத்தவரும் தனித்தனி தீருங்கள்; "ஒக்கத் தீர்க்க மொழிந்து"(2646) என்று அமணர் கூறியதை மறுத்து, அரசன் இருவரையும் வெவ்வேறு பிரித்துத் தீருங்கள் என்றான். இதுபற்றியே அமணர் "நாங்கள் - ஒருபுடை வாம பாகம், முன்னம் மந்திரித்துத் தெய்வ முயற்சியாற் றீர்த்தும்" என்று (2660) பின்னர்த் தமது தொழிலுக்கு இடத்தையும் காலத்தையும் வேறு பிரித்துக் கூறுவது காண்க. கைதவம் - வஞ்சனை - நடுநிலை கோணிய பண்பு, அதுபற்றி வரும் மொழிக்கு ஆயிற்று; ஆகுபெயர். கைதவன் - பாண்டியர்களது மரபுப்பெயர்; கைதவம் - கைதவன் - சொற்பின் வருநிலை. கைதவனும் - முன்னரெல்லாம் அமணர்க்குடன் பட்டிருந்த அவனும் என உம்மை சிறப்பும்மை. |
|
|