பாடல் எண் :2652
"பொன்னிவளந் தருநாட்டுப் புனற்பழனப் புறம்பணைசூழ்
கன்னிமதிற் கழுமலநாங் கருதுமூ" ரெனச்சிறந்த
பன்னிரண்டு பெயர்பற்றும் பரவியசொற் றிருப்பதிகந்
தென்னவன்முன் பருள்செய்தார் திருஞான சம்பந்தர்.
754
(இ-ள்) பொன்னி....என - காவிரி பாய்ந்து வளந் தருகின்ற சோழ நாட்டிலே நீர் நிறைந்த வயல்களையுடைய மருதநிலம் சூழ்ந்த அழியாத மதில் சுற்றிய திருக்கழுமலம் என்பது நாம் கருதும் ஊராகும் என்று; சிறந்த....திருப்பதிகம் - சிறப்புடைய பன்னிரண்டு பெயர்களையும் பற்றிப் போற்றிய கருத்துடைய திருப்பதிகத்தினை; திருஞானசம்பந்தர் - ஆளுடைய பிள்ளையார்; தென்னவன் முன்பு அருள் செய்தார் - பாண்டியன் முன்பு அருளிச் செய்தனர்;
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
(வி-ரை) பொன்னி வளந்தரு நாடு - சோழநாடு; புனற் பழனப் புறம்பணை சூழ் - நாட்டு வளமும், சிறப்பும் நிலமும், பிறவும் குறித்துக் கூறியபடி.
கன்னிமதிற் கழுமலம் - நகரச் சிறப்பு; பதியாது என்று வினவியவன் தமது நாடல்லாத பிறநாட்டரசனாதலின், ஆறும் நாடும் நிலமும் பிறவுமாகிய சிறப்புக்களுடன் எடுத்துக் கூறி யறிவுறுத்துதல் முறையாதலின் வாளா பதியை மட்டில் கூறாது இத்துணையும் கூறிய தென்க. கன்னி - கட்டழியாத தன்மை.
பன்னிரண்டு...பதிகம் - சீகாழியின் பன்னிரண்டு திருப்பெயர்களையும் பற்றாகக்கொண்டு பரவிய சொன்மாலையாகிய திருப்பதிகம்; பற்றும் - பதிகம் என்றும், சொற்றிருப் பதிகம் என்றும் கூட்டுக; பற்றுதல் - பெயர்களையே பொருளாகக் கொள்ளுதல். பாவிய - பெயர்களை துதித்த; "கைதொழுது பாடு மூரே"(3) "நாம் புகழு மூரே"(5) "நாம் கருது மூரே" (2-6-9) எனவரும்பதிகம் பார்க்க. ஒவ்வொர் பெயர்பற்றிய ஒவ்வோர் பாட்டும் நூல் - பனுவல் - எனப்பட்டன.
பெயர்பற்றும் பரவிய - "பெயரை நாளும், பரவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலா"(12) என்ற பதிகத் திருக்கடைக் காப்பின் கருத்து; நாம் கருதும் பதியாகிய ஊரே அதனைப் போற்றினால் உய்தி தரவல்லது என்று அரசனுக்குக் கூறியபடி.
கழுமல நாம் கருது மூர் - இது பதிகத்தின் மகுடமாய் உள்ள கருத்து; பதிகப் பாட்டுத்தொறும் வரும் முடிபுகாண்க. பன்னிரண்டு பெயர்களும் ஏனைப் பதினொன்றும் கூறி அவற்றை உள்ளிட்டு இதனோடு பன்னிரண்டு பெயர்களாய் நிகழும் ஊர் என்பது; கழுமலப் பெயரால் முடித்து மகுடமாக்கிக் கூறியது அது பன்னிரண்டனுள் இறுதி ஊழியில் பெற்ற பெயராதலாலும், ஈண்டுப் பாண்டியனை மலங்கழுவி உய்யக்கொண்டு நாட்டினரை உய்விக்கும் ஆசாரியராக எழுந்தருளியுள்ள குறிப்பினாலுமாம்; அமண் மாசு கழுவுதற்கு"(2549) என்று எழுச்சியில் இக்கருத்தினைத் தொடக்கத்திலே காட்டியதனை நினைவு கூர்க.
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொற்றிருப் பதிகம் - "பிரமனூர் வேணுபுரம்" என்று தொடங்கிப் பன்னிரண்டு பெயர்களையும் பாட்டுத்தோறும் உட்கொண்டு போற்றிய காந்தாரப்பண் - திருச்சக்கரமாற்று என்ற பதிகம். பெயர் பெற்றுப் பரவிய என்பது பாடமாயின், ஒவ்வொரு பாட்டும் பன்னிரிண்டு பெயர்களை உட்கொண்டும், பிரமனூர் முதல் கழுமலமீறாக அவ்வரிசையில் வரும் பெயர்களை முதலாகக் கொண்டும், ஒவ்வொன்றும் தனித்தனி முடிபு பெற்ற நன்னூலாகிய பனுவன் மாலையாகிய என்றுரைத்துக் கொள்க; பெயர் பெறுதலாவது கொண்டு தொடங்கிய தலப் பெயரையே அவ்வப் பாட்டின் பெயராகப் பெறுதல்; முதற் பாட்டுப் பிரமனூர்ப் பாட்டு; இரண்டாவது பாட்டு வேணுபுரப் பாட்டு; மூன்றாவது பாட்டு புகலிப்பாட்டு என்றிவ்வாறு கொள்க; இப்பெயர் முறைபற்றி 1912ல் உரைத்தவை இங்கு நினைவு கூரத் தக்கன. "உள்ளிடடங் காதியாய"(பதிகம் - 1).
தென்னவன் முன்பு அருள் செய்தார் - பதி வினவிய அரசன் முன்பு அவனைத் தேற்றுதற் பொருட்டு அவனது அரண்மனையில் அருளப்பட்டது என்று பதிக வரலாறு கூறியபடி; சீகாழிப் பதிகமாயினும் மதுரையில் அருளப்பட்டது என்பதனை உளங்கொள வைத்து எடுத்துக் காட்டியது ஆசிரியரது அருட்கவிநலம்; இவ்வாறே பின்னர்த் தாதையார் சார்வினால் தோணியமர்ந்தாரைக் கண்டு பேற்றிய "மண்ணினல்ல" என்ற பதிகம் மதுரையில் திருமடத்தி லருளப்பட்டதென வரலாறு காட்டுவதும் காண்க.
திருஞான சம்பந்தர் - பிள்ளையாரது திருப்பெயர் முற்றும் கூறியருளியது திருக்கடைக் காப்பில் "நாவினலம் புகழ்சீர் நான்மறையான் ஞானசம்பந்தன்" என்றருளியதனைக் குறிக்கொள வைத்ததனோடு, பாண்டடியனுக்குத் திருஞானத்தைப் புகட்டி ஆட்கொள்ள வந்த குறிப்புப் பெற வைத்ததுமாம்.