காலையெழுங் கதிரவனைப் புடைகுழுங் கருமுகில்போற் பீலிசேர் சமண்கையர் பிள்ளையார் தமைச்சூழ்வார் ஏலவே வாதினால் வெல்லதனுக் கெண்ணித்தாங் கோலுநூ லெடுத்தோதித் தலைதிமிர்ப்பக் குறைத்தார்கள் | 756 | (இ-ள்) காலை....போல் - காலையில் இளங்கதிர் பரப்பி எழும் சூரியனைப் பக்கங்ளிற் சூழம் கரியமுகிற் கூட்டம் போல; பீலிசேர்...சூழ்வார் - மயிற் பீலிகளை ஏந்திய சமண்கையர் பிள்ளையாரைச் சூழ்வாராய்; ஏலவே...எண்ணி - பொருந்தும்படி வாதினால் வெல்வதற்கு எண்ணங் கொண்டு; தாம்....குரைத்தார்கள் - தாம் பேணிய ஆருகத நூல்களிற் கண்ட பொருள்களை எடுத்துச் சொல்லித் தலைகள் திமிர்க்கும்படி குரைத்தார்கள்.இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. (வி-ரை) காலை......முகில்போல் - பிள்ளையார் தமைப் பீலி சேர்கையர் சூழ்வார் - பிள்ளையார் காலை எழும் கதிரவனுக்கும்; பீலிசேர்கையர் கருமுகிலினுக்கும் உவமிக்கப் பட்டனர்; உருப்பற்றி வந்த உவமம்; முகில் சூழ்தல் - மெய்யாற் சூழ்தலுக்கு வினைபற்றி வந்தது; காலை எழும் கதிரவன் என்றதனால் செந்நிறம் போந்தவாறு காண்க; "காலையே போன்றிலங்கும் மேனி" (அற்-அந்.) என்ற அம்மையார் திருவாக்கும் காண்க; காலை எழும் என்றதனால் முன்னாள் இரவின் இருளை ஓட்டி எழும் கதிரவன் செயல்போல் முன்னே சூழ்ந்திருந்த அமணிருளைத் துரத்துதலும், கதிரவனைப் புடை சூழும் கருமுகில் என்றதனால் முகில் அவன்முன் தன் செயல் வலிமைபெற்றுநிற்க மாட்டாது உடைதல் போல ஈண்டு அமணர் உடைந்து மறைதலும் குறிப்பிற் பெற வைத்த பண்பு உவமை நயமும் காண்க. பீலி சேர் சமண்கையர் - பீலி - அமணகுருமார் எப்போதும் கையிற் கொள்ளும் மயிற் பீலி; கையர் - கையினை உடையவர் என்றும், கீழ்மக்கள் என்றும் இருபொருளும் பட உரைக்க நின்றது. ஏலவே - காலமும், இடமும், பிறவும் பொருந்து மாற்றால்; அவர் நோய் தீர்த்துக் தம்மேல் வெற்றி கொள்ளு முன்பு என்ற குறிப்புமாம். வாதினால் வெல்வதனுக்கு எண்ணி - நோய் நீக்க மாட்டாமையால் தாம் தோற்பதுவும்(2612 - 2616), அவர் அதனுள் வெற்றி பெற வுள்ளமையும் அறிந்த அமணர், அதனைவிட்டு நூல் வாதத்தினால் வெற்றி கொள்ள எண்ணி, வாது - நூல் வாதம்; வாதினால் - வாதப்பொருள் கருவியாக. தாம் கோலும் நூல் - தாம் கைக்கொண்டு உய்த்த ஆருகத சமய நூல்; கோலுதல் - கற்பித்தல்; செய்தல் என்றலுமாம்; "வேறொரு சமயஞ் செய்தே"(தேவா) தலை திமிர்ப்ப - தலை அசைத்து; இது வாதத்தின் குறி. "திமிர்த்தல் - சொல்லின் வேகத்தால் நடுக்குற்று வருந்துதல்" என்பர் ஆறுமுகத் தம்பிரானார். குரைத்தார்கள் - நாய் குரைத்தல் போல இழி சொற்களைப் பொருளின்றி உரக்கக் கூவினார்கள். அவர்களது சொல்லிழிபு தோன்றக் கூறினார்; இழி சொற்களாதலின் அவை இன்ன வெனக் கூறலுமாகா தென்பார் இவ்வாறு குறிப்பிற் பெறக் கூறிய கவிநலம் காண்க; முன்னர்ப் பல சொல்லுவார் என்ற குறிப்பும் காண்க: முன் கதிரவன் என்றதற்கேற்ப "சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல" என்ற பழமொழி நினைவுபடக் கூறிய நயமும் கண்டு கொள்க; நாய் சினந்தொலித்தலைக் குரைத்தல் என்பது மரபு வழக்கு; இஃது எடுத்த பொருளை விட்டு விலக்கி வேறு மொன்றிற் செலுத்தி முயலுதல்; தோல்வியுறுவோர் கைக் கொள்ளும் உபாயங்களுள் ஒன்று; தமது பொறாமை சினம் முதலிய தீக்குண மிகுதிப்பாட்டால் பாண்டியன் கிடந்த அவதியின் காலமு மிடமும் கூட நோக்காது அமணர் இவ்வாறு துணிந்தனர் என்க. சூழ்வார் - சூழ்வாராகி; முற்றெச்சம் - பலவாறாய்ச் சூழ்வாராகி என்றும் சூழ்ச்சி - உபாயம் - செய்வாராகி என்றும் உரைக்க நின்றது; வரும்பாட்டுப் பார்க்க. சூழ்வார்-ஓதிக்-குரைத்தார்கள் என்று கூட்டுக. |
|
|