பிள்ளையா ரதுகேளாப் "பேசுதிர்நும் பொருளெல்லை யுள்ளவா" றென்றருள, வூத்தைவாய்ப் பறிதலையர் துள்ளியெழுந் தனேகராய்ச் சூழ்ந்துபத றிக்கதற, வொள்ளிழையா ரதுகண்டு பொறாராகி யுண்ணடுங்கி | 757 | (இ-ள்) பிள்ளையார்...என்றருள - பிள்ளையார் அதனைக் கேட்டு "உங்கள் கொள்கையின் படிக்குள்ள பொருள் முடிபுகளை உள்ளபடி பேசுங்கள்" என்று அருளிச்செய்ய; ஊத்தைவாய்...கதற - ஊத்தை வாயினையும் பறித்த தலையினையுமுடைய அவ்வமணர் துள்ளி அநேகராக எழுந்து பிள்ளையாரைச் சூழ்ந்து பதறிக் கதறவே; ஒள் இழையார்...உள் நடங்கி - ஒள்ளிய இழைகளை அணிந்த பாண்டிமா தேவியார் அதனைக் கண்டு பொறுக்கலாற்றாது உள்ளம் நடுக்கமுற்று, (வி-ரை) அது - அமணர் தாம் கோலும் நூல் எடுத்தோதிக் குரைத்த அதனை; நும் பொருள் எல்லை உள்ளவாறு பேசுதீர் - உமது சமய நூல்களுள் உண்மைப் பொருளாகக் கூறும் முடிபுகளை உள்ளபடி இவ்வாறு குரைத்தெழாமல் ஒழுங்குபடப் பேசுங்கள் என்றதாம். பொருள் எல்லை - முடிந்த கொள்கைகள்; அதாவது சமய வாதத்தின் ஒழுங்குபட அறுதியிட்டுக் கூறும் முடிபு; "நீங்கள் செப்பிவரும் பொருள் நிலைமை தெரிக்க"(புரா - 913); "உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க"(புரா - 914): "நாட்டு கின்ற முத்திதான் யாவது?" (புரா - 916) என்றும், "புகன்மினும் மிறையு நூலு மத்தலைநின் றோரெய்துங் கதியும்" (திருவிளை - புரா - மண் சு - பட - 101) என்ற படி வாதிக்கும் அச்சமயக் கொள்கையின்படி அவர் கூறும் கடவுள் இலக்கணமும், அளவைநூல் இலக்கணமும், அச்சமயத்தோர் கொள்கையின்படி அடையும் முத்தியி லக்கணமும் என்றிவற்றை அடைவுபட முடித்துக் கூறுதல். உள்ளவாறு பேசுதீர் - வாதத்தின் அமைவில் ஒழுங்குபடுத்தி உரையுங்கள்; இதனால் அவர்கள் பொறாமையும் சினமும் மேற்கொண்டு ஒழுங்கற்ற முறையில் பேசினார்கள் என்றதாம்; "பல சொல்லுவார்"(2653) "குரைத்தார்கள்"(2654) என்று ஆசிரியர் கூறிய குறிப்புக் காண்க; பல சொல்லுதல் - ஒன்றாக ஒழுங்கிற் கூறாது பலவாறு கூறுதல். பேசுதிர் - சினந்த முறையிலன்றிப் பேசுக என்க; இதனால் வாதில் வெல்ல எண்ணி வாதத்திற் கறைகூவி முற்பட்டழைத்தோர் அமணர்கள் என்பதும், அதனை உடன்பட்டுப் பிள்ளையார் அவர்கள் மேற்கொண்டெழுந்த சமய வாதத்தினை ஏற்று ஒழுங்குபட்ட முறையில் அதனைத் தாமும் செய்ய உடன்பட்டு அழைத்தருளினர் என்பதும் பெறப்பட்டன. ஊத்தை வாய் - பல் துலக்கிற் புழு முதலிய பிராணிகள் சாகும் என்று பற்றுலக்காத ஒழுக்கமுடையராதலால் ஊத்தை மிக்க வாய்; இதனால் வரும் துர்நாற்றத்தை மறைக்க அவர்கள் வாய்க்கு ஒரு மறைப்பு இட்டுக் கொள்ளுதலும் வழக்கென்பர். பறிதலையர் - தலை மயிரைப் பறித்த நிலையினர்; ஒருவர் சமண ஆசிரமம் புகும்போது அதனில் முதியோர் பலர் சூழ்ந்து "இப்துக் - பிற்சுக்" (இப்போது துக்கம் - பின்னால் சுகம்) என்ற மந்திரம் சொல்லிக் கொண்டு அவரது தலைமயிரைப் பறித்தல் அவர் சமய வழக்குக்களுள் ஒன்று என்பர். துள்ளி...கதற - துள்ளி எழுதலும், ஒழுங்குபெற ஒவ்வொருவராயன்றி அனேகராய் எழுதலும், சூழ்ந்து கொள்ளுதலும், பதறுதலும், முறை தவறிக் கதறுதலும் முதலியவை வாதமுறைக்கேற்காத செயல்கள்; பிள்ளையார் அருளியபடி நேரிய முறையில் வாதத்துட் புகாது இவ்வாறு பிழைபட நடந்து கொண்டதற்கு அமணர்களது பொறாமையும் சினமும் காரணமாம். ஒள்ளிழையார்......உள்நடுங்கி - ஒள் இழையார் - நேரிய நூன்முறையினையே கொண்டு ஒழுகுமவர் என்ற குறிப்பும் காண்க; "ஆயிழையாய்" (சிவஞானபோதம் - 7 சூத் - 3 அதி - வெண்பா) என்றவிடத்து "நுணுகிய நூல்களை ஆராய்வது" "இழை நூலாகலான் ஈண்டுச் சாத்திரத்தை யுணர்த்திற்று" என்று எமது மாதவச் சிவஞான முனிவர் உரை வகுத்தமை கருதுக; பொறாராகி ஒள்நடுங்கி - முன்னை இரவில் கரந்து தீத்தொழில் செய்த அவர்கள் இங்கு நேரிலும் முறைதவறி ஒழுகத் தலைப்பட்டாராதலின், அதனால் யாது விளையுமோ என்ற அச்சத்தால், காணப்பொறாத நிலையும் மன நடுக்கமும் விளைந்தன; அன்றியும், இது தாய்மைக் குணமாகிய கருணையின் விளைவுமாம்; இதனை மேல்வரும் பாட்டில் விரித்து "இன்அருட் பிள்ளையாரிவர் திருமேனி எளியர் போலும் -உவர் எண்ணிலார்கள்" என்பதும் காண்க. அமணர்கள் மேலும் அடாத செயல்களைத் தமது கூட்டப் பெருக்கின் வலியினாலும் பொறாமை கொண்ட மூண்ட சினத்தாலும் செய்ய முற்படுவார்கள் என்ற கருத்து எழுந்தது; அதுகண்ட அமைச்சரும் அரசனும் இருக்கவும் அம்மையார் முற்பட்டுத் தடுத்தநிலை "அச்சந் தாய்தலை யன்பின் முன்பு நிற்குமே" (574) என்றவிடத் துரைத்த நிலையின் தன்மையாலறிக. மூள்வார் என்ற குறிப்பும் அச்சங் காட்டியது. |
|
|