மன்னவன் மாற்றங் கேட்டு, வடிவுபோன் மனத்து மாசு துன்னிய வமணர் தென்னர் தோன்றலை நோக்கி "நாங்கள் உன்னுடம் பதனில் வெப்பை யொருபுடை வாம பாகம் முன்னமந் திரித்துத் தெய்வ முயற்சியாற் றீர்த்து" மென்றார். | 762 | (இ-ள்) மன்னவன் மாற்றம் கேட்ட - அரசனது மாற்றத்தினைக் கேட்டு; வடிவுபோல்....அமணர் - உடம்பினைப் போலவே மனத்தினும் மாசு பொருந்திய அமணர்கள்; தென்னர் தோன்றலை நோக்கி - பாண்டியனாகிய அரசர் பெருமானை நோக்கி; நாங்கள்....என்றார் - "நாங்கள் உனது உடம்பில் ஒரு பக்கத்தில் இடப்பாத்தின் வெப்பு நோயை முதலில் மந்திரித்துக் தெய்வ முயற்சியினாலே தீர்ப்போம்" என்றனர்.இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. (வி-ரை) மன்னவன் மாற்றம் - மாற்றம் - சொல். இங்கு முன்பாட்டிற் கண்டபடி வாதத்தின் முடிபு இது என்று மன்னவன் கூறிய பொருளுக்கு வந்தது; மாற்றம் - மாற்றங்களின் - சொற்களின் - துணிபு; இரட்டுற மொழிதலால் மாற்றம் - மாறிய நிலை என்று கொண்டு ரைத்தலுமொன்று; மாறிய நிலையாவது, "தென்னவன் றானு முன்செய் தீவினைப் பயத்தினாலே, யந்நெறிச் சார்வு தன்னை யறமென நினைந்து நிற்ப"(2498); "தங்கண் மன்னனு மவர்கண் மாயத் தழுந்த"(2510) என்ற நிலைமாறிப் ("செய்தவப் பயன்வந் தெய்துஞ் செவ்விமுன் உறுத லாலே" (2647) முன்னைச் சார்புகொண்ட நிலை நீங்கிப்) பிணியைத் தீர்த்தவரே வாதில் வென்றவராவர் என்று முடிபு கூறியது; "வணிகன்வாய் மாற்றங் கேட்டு"(1764) என்ற காரைக்காலம்மையார் புராணமும் காண்க. வடிவுபோல் மனத்தும் மாசு துன்னிய அமணர் - வடிவு மாசு துன்னுதலாவது உடல் கழுவாமையாலும், பல் துலக்காமை, மயிர் பறித்தல் முதலிய மரபினாலும், "வேர்வந்துற மாசூர்தர வேயிலினின் றுழல்வாரும்" (பின் - தேவா - அண்ணாமலை - நட்டபாடை - 10) என்றபடி வெயிலினிற்றல், சுடுபாறை கிடத்தல் முதலிய ஒழுக்கினாலும் உடலில் மாசு - புற அழுக்கு - மிகுதல்; மனத்து மாசு துன்னுதல் - உள்மாசு என்னும் வஞ்சம் - பொய் - கொலை முதலிய தீமைகள் மனத்தினுட் சார்ந்து பெருகுதல்; இங்குச் சரித நிகழ்ச்சியில் முன் கூறியபடி இவர்களது சொற்செயல்களினாலே இந்நிலை தெளியப்படும். பொறாராய்(2577); சூழ்ச்சி(2578); அழிவுறு மனத்திடைப் புலர்ச்சி (2579) செற்றமீக் கொண்ட சிந்தையும் செய்கையுமுடையை (2585); உரை மடத்தில் விஞ்சைமந்திரத் தொழில் விளைக்கச் சூழ்தல்(2556); தீயசெயலும் தீத்தொழிலும்(2596 -2597); மானமிலாது பின்னருஞ் சூழ்தல்(2261); மன்னனுக்குப் பொய்ம்மையும் வஞ்சனையும் புகட்டுதல்(2645) முதலியவை காண்க; அமணர்களது மாகு துன்னிய மனத்துநிலை அரசுகள் புராண வரலாற்றினும், தேவாரங்களினும், தண்டியடிகள் - நமிநந்தியடிகள் புராணங்களினும், பிறாண்டும் உணரப்படும். மனத்தும் - உம்மை - எண்ணும்மை. நாங்கள்.....தீர்த்தும் - இது அமணர் அரசனது முடிபினை ஏற்று வாதினை மேற்கொண்டு தாம் செயல் புரியப் புகுந்த நிலை குறித்தது; உடம்பதனில் வெப்பை ஒருபுடை வாமபாகம் - வெப்பு உடம்பினில் எங்கும் பரவியுள்ளதாக அதனில் ஒருபுடையாகிய இடது பாகத்தில் உள்ள நோயினை; இகலித் தீரும் (2659) என்ற ஆணையை ஏற்று இடப்பாகத்து நோயினை நாங்கள் தீர்க்கின்றோம் என மேற்கொண்டது. முன்னம் - முதலில். பிள்ளையார் தஞ்செயல் புரிவதன்முன் எனத் தாங்கள் முந்திக் கொண்டது; வாமபாகம் - வாமபாகத்து நோய்க்கு ஆகிவிந்தது; வாமம் - இடப்பக்கம். வாமபாகத்தைத் தேர்ந்து கொண்டது உடற்கூற்றின்படி இடப்பாகம் பெண்பாகமானதால் ஆண் மக்களுக்கு அப்பகுதியில் பற்றிய நோய் வலிதின்றி எளிதில் தீர்த்தற்குரியது ஆதலானும், வலப்பாகம் ஆண்பாகமானதால் ஆண் மக்களுக்கு வலப்பாகத்திற் பற்றிய நோய் தீர்த்தல் எளிதன்றாதலானும் முயற்சியின் வலிய பகுதியைப் பிள்ளையாருக்கு விட்டு எளிய பகுதியை எடுத்துக் கொண்டனர்; இஃது அமணர் மருத்துநூல் முதலிய கலைஞானங்களின் வல்லை ம கொண்டு துணிந்த வஞ்சக் செயல்களுள் ஒன்று என்க. முன்னம் - என முந்திக்கொண்டதென்னை எனின், "போன கங்குலிற் புகுந்ததின் விளைவுகொல்?"(2612) என்று அஞ்சிய அமணர் தமது தீத்தொழிலின் பயனை இவ்வாறு நோயாகப் பற்றச் செய்யும் பிள்ளையார் இகலி முற்பட்டு ஒரு பகுதியை நோய் தீர்ப்பாராயின் அது மற்றப் பகுதியின் நிலையை முடுகச் செய்து விடுமென்று கொண்ட அச்சங் காரணம்; இவ்வுணர்ச்சி முன்னை அனுபவத்தாலும் கலைஞான அறிவினாலும் வந்தது என்க; "இருபுடை வெப்பங் கூடி யிடங்கொளா தென்னப் பொங்க"(2663) மேல் விளைதல் காண்க. மந்திரித்துக் தெய்வ முயற்சியால் - "தேறிய தெய்வத் தன்மை என்னிடைத் தெரிப்பீர்"(2657) என்று இங்கு நோய் நீக்கம் வாயிலாக அவ்வத் தெய்வ உண்மை காட்டுவதாகலின் இவ்வாறு கூறினார். |
|
|